under review

எஸ். ஆரோக்கியசாமி

From Tamil Wiki

எஸ். ஆரோக்கியசாமி (செப்டம்பர் 8, 1912 - ஏப்ரல் 1, 1985) கவிஞர், எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். இயேசு பெருமானின் வரலாற்றை 'சுடர்மணி' என்ற தலைப்பில் காப்பியமாக இயற்றினார். தமது கவித்திறனால் ஆசுகவி என்று போற்றப்பட்டார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

எஸ். ஆரோக்கியசாமி, விழுப்புரத்திற்கு அருகிலுள்ள கோலியனூரில், சவரியப்பன் - குழந்தையம்மாள் இணையருக்கு, செப்டம்பர் 8, 1912 அன்று பிறந்தார். திண்டிவனத்திலுள்ள ரோமன் கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தார். 1929 முதல் 1931 வரை அதே பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். தமது தமிழாசிரியர் சுந்தரேச ஐயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை முழுமையாகக் கற்றார். வெண்பா, விருத்தம் ஆகியவற்றை இயற்றும் நுட்பங்களைக் கற்றுக் கொண்டார்.

தனி வாழ்க்கை

எஸ். ஆரோக்கியசாமி, தான் படித்த திண்டிவனம், ரோமன் கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டாண்மைக் கழகப் பள்ளிகளில் 37 ஆண்டுகள் பணிபுரிந்து தலைமை ஆசிரியராகப் பணி ஓய்வு பெற்றார். மணமானவர். இவருக்கு ஒன்பது ஆண் குழந்தைகள்; இரண்டு பெண் குழந்தைகள்.

இலக்கிய வாழ்க்கை

எஸ். ஆரோக்கியசாமி, கணிதத்தை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் மாணவர்களுக்குக் கற்பிக்கும் வகையில், ‘கணித ஜாலம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். தமிழையும் கணிதத்தையும் ஒன்றாக இணைத்துக் கற்றுக் கொடுக்கும் முறையை உருவாக்கினார். எஸ். ஆரோக்கியசாமியின் ‘இளந்தமிழ் வாசகம்’ என்னும் நூல் படங்கள் மூலம் மொழியைக் கற்பிக்க உதவியது. மாணவர்கள் எளிதில் தமிழை, தமிழ் இலக்கணங்களைக் கற்கப் பல நூல்களை எழுதினார். ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இயேசுநாதருடைய வரலாற்றைச் சுடர்மணி என்னும் பெயரில் காப்பியமாக இயற்றினார். கிறிஸ்தவ மதம் சார்ந்து பல நூல்களை எழுதினார்.

எஸ். ஆரோக்கியசாமி, சுடர்மணி நூலிலுள்ள இயேசு இறிஸ்துவின் பிறப்பு, பாடுகள், சிலுவைப்பாதை, உயிர்த்தெழுதல் முதலிய பகுதிகளை இசைச் சொற்பொழிவுகளாகப் பல கத்தோலிக்கப் பேராலயங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் வழங்கினார்.

நாடகம்

எஸ். ஆரோக்கியசாமி, கொல்லாமையை வலியுறுத்தி, 1937-ல், ‘பாலசுந்தரம்’ என்னும் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.

விருதுகள்

  • ஆசுகவி பட்டம்
  • அருட்கவிஞர் பட்டம்
  • தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
  • சென்னை யுனெஸ்கோ மன்றம் வழங்கிய Roll of Honour

மறைவு

எஸ். ஆரோக்கியசாமி, ஏப்ரல் 1, 1985-ல், மாரடைப்பால் காலமானார்.

மதிப்பீடு

எஸ். ஆரோக்கியசாமி, சிறார்களுக்காக எளிய தமிழில் சில நூல்களை எழுதினார். கணிதத்தை விளையாட்டாகக் கற்கும் வகையில் எண் புதிர்கள் போன்றவற்றை இணைத்து ‘கணித ஜாலம்’ என்ற நூலை எழுதினார். இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தகுந்த கிறிஸ்தவ இலக்கிய நூல்களை எழுதிய எழுத்தாளராக எஸ். ஆரோக்கியசாமி அறியப்படுகிறார். எஸ். ஆரோக்கியசாமி பற்றி, கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் மேனாள் பொதுச் செயலாளர் டாக்டர் தி. தயானந்தன் பிரான்சிஸ், “பல கோணங்களிலிருந்து நோக்கும் ஆய்வுத்திறனும் , பண்பார்ந்த வகையில் சொற்கள், தொடர்கள், கருத்துகள் இழையும்படி செய்யும் ஆற்றலும் அவரிடம் இயல்பாகவே அமைந்திருந்தன.” என்று தனது, ‘கிறிஸ்தவ அருட் கவிஞர்கள்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நூல்கள்

  • கணிதஜாலம்
  • இளந்தமிழ் வாசகம்
  • பைந்தமிழ் வாசகம்
  • ரகர றகர வேற்றுமை விளக்கம்
  • சுடர்மணி
  • சிலுவைப் பாதை
  • ஜெபப் பாமாலை
  • அர்ச். வேளாங்கண்ணி மாதா சரித்திரம்
  • பால சுந்தரம் (நாடகம்)
  • மறைத்தொண்டர் புராணம் (ஏட்டுப்பிரதி)

உசாத்துணை

கிறித்தவக் காப்பியங்கள், முனைவர் யோ. ஞானசந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2013


✅Finalised Page