எஸ்.எல்.எம். ஹனீபா
எஸ்.எல்.எம். ஹனீபா (பிறப்பு: ஏப்ரல் 1, 1946) ஈழத்து எழுத்தாளர், கால்நடை அபிவிருத்தி போதனையாசிரியர், அரசியல்வாதி, மேடைப்பேச்சாளர். இவரது மக்கத்துச்சால்வை சிறுகதைத்தொகுதி முக்கியமான படைப்பு.
பிறப்பு, கல்வி
தம்பி சாய்வு சின்னலெவ்வைக்கும், முகைதீன் பாவா கலந்தர் உம்மாவுக்கும் மூன்றாவது குழந்தையாக இலங்கை, மீராவோடை மண்ணின் சட்டிப்பானைத்தெருவில் ஏப்ரல் 1, 1946 அன்று எஸ்.எல்.எம். ஹனீபா பிறந்தார். தந்தை ஆற்றுக்குப்போய் மீன் பிடித்து விற்கும் தொழில் செய்தார். 1960-ல் தந்தை சின்னலெவ்வை மூன்று கிராமங்களுக்குமான (மீராவோடை, ஓட்டமாவடி, வாழைச்சேனை) முஸ்லிம் விவாகப்பதிவாளராக நியமிக்கப்பட்டார். எஸ்.எல்.எம். ஹனீபாவின் உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். தனது ஆரம்பக்கல்வியை 1951-ம் ஆண்டு மீராவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் முடித்தார். ஹிதாயதுல்லாஹ் மௌலவியிடம் இஸ்லாம் சமயப்பாடங்களைக் கற்றார். துரைராஜா, பொன்னுசாமி, கிருஷ்ணப்பிள்ளை போன்ற நண்பர்கள் மூலம் பாடல்கள் கற்றார். ஐந்தாம் ஆண்டு ஓட்டமாவடி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் பயின்றார். அங்கு கட்டாயப்பாடமாக சங்கீதமுதம், பரதநாட்டியமும் கற்றார். 1966,1967-ம் ஆண்டுகளில் கிளிநொச்சி விவசாயப்பாடசாலையில் இணைந்து கல்வி கற்றார்.
தனிவாழ்க்கை
விவசாயப்பாடசாலையில் பயின்ற பின் மலேரியா பிரிவில் வேலை கிடைத்தது. (அன்டி மலேரியா சூப்பவைசர்). அவர் காலத்தில்தான் கல்குடா தொகுதியில் மூன்று கிராமங்களுக்கும் முழுமையாக மலேரியா ஒழிப்பு எண்ணெய் அடிக்கப்பட்டது. 1968-ல் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியராக பேராதனை பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஜனவரி 3, 1969-ல் அக்கரைப்பற்று நகரில் விவசாய அபிவிருத்தி போதனாசிரியராகப் பணி செய்தார். ஹனீபா கண்டி வத்தேகம, வாழைச்சேனை, கெகிராவ, புத்தளம், மட்டக்களப்பு, பொலனறுவை, வெளிக்கந்தை, திருக்கோணமடு ஆகிய இடங்களில் பணியாற்றினார். இருபத்தியொரு வருட ஆசிரியப்பணிக்குப்பின் விடுதலைப் புலிகளின் கெடுபிடிகள் மேலோங்கியிருந்த காலத்தில் டிசம்பர் 31, 1990-ல் ஓய்வு பெற்றார். தாவரவியல், விலங்கியல் தொடர்பான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் செய்கிறார்.
நவம்பர் 26, 1968-ல் அஹமது உசன் முஹம்மது பாத்து என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகள்கள் ஜனூபா, மாஜிதா. மகன் நௌபல். அகில இலங்கை மட்டத்தில் குறுந்தூர ஓட்டக்காரராக பந்தயத்தில் விருதுகள் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
1965-ல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆதரவாக றகுமானின் அரசியல் மேடையில் ஏறினார். 1963-ல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளையை கல்குடா பிரதேசத்தில் நிறுவினார். இளமையில் இடதுசாரி அரசியல் கருத்துக்களாலும், அக்கட்சியின் கொள்கைத்திட்டங்களாலும், அந்த அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூத் அவர்களின் கல்வித் திட்டத்தாலும் ஈர்க்கபட்டு அதில் இணைந்து பணி செய்தார். பண்டாரநாயக்க அம்மையாரின் பொதுக்கூட்டத்தில் அவர் மேடையில் ஏறி உரையாற்றினார்.1969-ல் அக்கரைப்பற்றில் சென்ற தருணம்தான் ஆர்.ஆ.அஸ்ரஃப் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. 1970-ல் காத்ததான்குடியில் பிறந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அஸ்ரஃப் சேகு இஸ், ஸதீன் இவர்களுக்கு அடுத்த நிலையில் எஸ்.செல்.எம் ஹனீபா முதன்மை பெற்றார். 1988-ல் மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 1989-ல் வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வை. அஹமத்தின் உதவியுடன் மாகாண கல்விப்பணிப்பாளரின் ஒத்துழைப்புடன் மாவடிச்சேனை, கேணி நகர், மாஞ்சோலை ஆகிய பிரதேசங்களில் ஆரம்ப பாடசாலைகளையும் ஆரம்பித்து வைத்தார். ஓட்டமாவடி பாதிமா பாளிகா பெண்கள் பாடசாலையை தனியாக ஆரம்பிப்பதில் பங்கு வகித்தார். ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் இயங்கிக்கொண்டிருந்த தாய் சேய் பராமரிப்பு நிலையத்தினையும் நிறுவினார். ஏறாவூர் நகரில் தொழிலற்ற நான்கு இளைஞர்களுக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க மேற்பார்வை அதிகாரி நியமனங்களையும் பெற்றுக்கொடுத்தார். ஏறாவூர் அல்முனீரா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியையும் பெற்றுக்கொடுத்தார்.
இலக்கிய வாழ்க்கை
எஸ்.எல்.எம் ஹனீபா மட்டக்களப்பு வாசகசாலை மூலம் இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டார். சிறுகதைகள் எழுதத் துவங்கி ஐம்பது கதைகள் எழுதியுள்ளார். எஸ்.எல்.எம் ஹனீபாவின் முதல் சிறுகதை 'நெஞ்சின் நினைவினிலே' 1962-ல் ராதா சஞ்சிகையில் வெளியானது. அதன் பின்னர் இன்சான், இளம்பிறை வீரகேசரி போன்ற கதைகளை எழுதினார். பணத்திரை, அவள் அல்லவோ அன்னை ஆகிய கதைகள் ராதாவில் வெளியானது. சன்மார்க்கம், ஊக்கு, ஆத்மாவின் ராகங்கள் போன்ற கதைகள் இன்சானில் வெளியானது. 1970-ல் இளம்பிறையில் வேலி, குளிர்கன்று உட்பட நான்கு சிறுகதைகள் வெளியானது. அதில் சில கதைகள் இரு தொகுதிகளாக 'மக்கத்துச்சால்வை', '1992', 'அவளும் ஒரு பாற்கடல்' - 2007) பிரசுரம் பெற்றிருக்கின்றன. சில கதைகளை பத்திரப்படுத்த முடியவில்லை. 1992-ல் வெளியான மக்கத்துச்சால்வை தொகுதி தமிழ்நாடு கோவை லில்லி தேவசிகாமணி விருது பெற்றது. அங்கு ராஜம் கிருஷ்ணன், சங்கர நாராயணன், வண்ணதாசன், ஊசு.ரவீந்திரன், சுப்ரபாரதி மணியன், அருணாசலம், தஞ்சை பிரகாஷ், ஆ.விஸ்வநாதன் போன்ற இலக்கிய அளுமைகளை சந்தித்து நட்பாக்கிக் கொண்டார். 1992-ல் ஆனந்தன் என்பவர் தனியார் பாடத்திட்ட தமிழ்மொழித்தொகுப்பில் இவரின் 'மக்கத்துச்சால்வை' சிறுகதையை இணைத்துக் கொண்டார். அதே ஆண்டில் அரச பாடத்திட்டத்தில் சாதாரண தரவகுப்பு மாணவர்களுக்கான தமிழ் இலக்கியத்தொகுப்பில் சேர்க்கப்பட்டது. 15 ஆண்டுகாலம் அந்தச்சிறுகதை பாடத்திட்டத்தில் இருந்தது. 'மக்கத்துச்சால்வை' தொகுதியிலுள்ள சிறுகதைகள் உள்ளிட்ட பிற்காலத்தில் எழுதிய சில கதைகளையும் தொகுத்து ’அவளும் ஒரு பாற்கடல்’ தொகுதி டிசம்பர் 2007-ல் காலச்சுவடு பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது.
விருதுகள்
- 1992-ல் ஆண்டில் மக்கத்துச்சால்வை தொகுதிக்கு தமிழ்நாடு கோவை லில்லி தேவசிகாமணி விருது பெற்றது.
- 1994-ல் சந்திரிகா அரசாங்கத்தில் மக்கத்துசால்வை தொகுதி சிறந்த சிறுகதைத்தொகுதிக்கான இலங்கை சாகித்ய மண்டல பரிசைப்பெற்றது.
- 2000-ல் இலக்கியப்பணிகளுக்காக கிழக்கு மாகாண ஆளுநர் விருது வழங்கப்பட்டது.
- 2005-ல் கலாபூசணம் கௌரவத்தை இலங்கை அரசு அளித்தது.
- மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப்பேரவையின் விருது பெற்றார்.
- 2010-ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கலாசாரப்பேரவையின் விருது
- மக்கத்துச்சால்வை விருது.
நூல்கள் பட்டியல்
- மக்கத்துச்சாலை
- அவளும் ஒரு பாற்கடல்
வெளி இணைப்புகள்
- மக்கத்துச் சால்வை – மண்ணும் மணமும்: ஆபிதீன்
- எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் மானுட நேயம்: வ.ந.கிரிதரன்
- எஸ்.எல்.எம்.ஹனீஃபா: ஜெயமோகன்
- இலங்கை பயணம்: எஸ். ராமகிருஷ்ணன்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Feb-2023, 08:15:48 IST