under review

எஸ்.எம். கமால்

From Tamil Wiki
டாக்டர் எஸ். எம். கமால்

எஸ்.எம். கமால் (ஷேக் ஹூசைன் முகமது கமால்; அக்டோபர் 15, 1928 - மே 31, 2007) ஒரு தமிழக எழுத்தாளர். வரலாற்றாய்வாளர். பதிப்பாளர். இதழாளர். ஆய்வு நோக்கில் பல நூல்களை எழுதினார். தமிழக அரசில் வட்டாட்சியராகப் பணியாற்றினார். ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். தனது வரலாற்றாய்வு முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

எஸ்.எம். கமால், அக்டோபர் 15, 1928 அன்று, ராமநாதபுரத்தில், ஷேக் ஹூசைன் முகமது கமால்-காதர் அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை ராமநாதபுரத்தில் நிறைவு செய்தார். இளங்கலைப் பட்டம் (பி.ஏ.) பெற்றார்.

தனி வாழ்க்கை

தமிழக அரசுப் பணியில் சேர்ந்த எஸ்.எம். கமால், வருவாய்த்துறையில் பணியாற்றினார். மண்டபம் முகாமில் வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி: நூர்ஜஹான். ஒரு மகள்; இரு மகன்கள்.

வரலாற்றாய்வாளர் டாக்டர் எஸ். எம். கமால்

இலக்கிய வாழ்க்கை

எஸ்.எம். கமால், வரலாற்றாய்வின் மீது விருப்பம் கொண்டிருந்தார். சேதுபதி மன்னர்கள் குறித்தும், சிவகங்கை, ராமநாதபுர சமஸ்தானம் குறித்தும் ஆராய்ந்து நூல்கள் எழுதினார். செப்பேடுகள், கல்வெட்டுகள் நாணயவியல் குறித்து ஆராய்ந்து ’ஆவணம்’ போன்ற வரலாற்று ஆய்விதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார். பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். தனது ஆய்வு முடிவுகளை நூல்களாக வெளியிட்டார். க்ளூகோமா நோயால் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தபோதும், உதவியாளர்கள் மூலம் நூல்களை எழுதினார்.

’ஆவணம்’ ஆய்விதழில் கமாலின் கட்டுரை

இலக்கியச் செயல்பாடுகள்/பொறுப்புகள்

  • எஸ். எம். கமால், ராமநாதபுரத்தில் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பல இலக்கியக் கருத்தரங்குகளை நடத்தினார்.
  • மதுரை நான்காம் தமிழ்ச்சங்க உறுப்பினராகப் பணிபுரிந்தார்.
  • திருவருட் பேரவை மாநிலச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • உலகத் திருக்குறட் கழக மாநிலக் குழு உறுப்பினராகப் பணிபுரிந்தார்.
  • மதுரை வட்டார வரலாற்று ஆவணக்குழு உறுப்பினர்.
  • பன்னிரண்டிற்கும் மேற்பட்ட இலக்கிய வரலாற்று அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.

இதழியல்

எஸ்.என். கமால், ‘தமிழ் அருவி’ என்னும் இஸ்லாமிய இலக்கிய இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

பதிப்பியல்

எஸ்.எம். கமால், ‘சர்மிளா பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தைத் தோற்றுவித்து தன் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டார்.

முதல்வர் மு. கருணாநிதியிடமிருந்து விருது

விருதுகள்

  • இமாம் சதக்கத்துல்லா அப்பா விருது
  • தமிழ்ப்பணிச் செம்மல்
  • சேதுநாட்டு வரலாற்றுச் செம்மல் விருது
  • பாஸ்கர சேதுபதி விருது
  • சேவா ரத்னா விருது
  • தமிழ்மாமணி விருது
  • தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது
  • வள்ளல் சீதக்காதி விருது
  • பசும்பொன் விருது
  • ராஜா தினகர் விருது
  • அமெரிக்கா தக்சான் பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டம்

இலக்கிய இடம்

எஸ். எம். கமால், ஆவணக் காப்பகங்களில் இருந்து பல்வேறு தகவல்களைச் சேகரித்து, கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களுடன் நூல்களாக எழுதினார். தெளிவான வரலாற்றுக் குறிப்புகளை ஆதாரங்களுடன் முன் வைப்பனவாக இவரது நூல்கள் அமைந்தன. ராமநாதபுரம், சிவகங்கைச் சீமைப் பகுதிகளின் வரலாற்றை வெளிப்படுத்தியவராக எஸ். எம். கமால் மதிப்பிடப்படுகிறார்.

எஸ்.எம். கமாலின் உதவியாளராக பணியாற்றியவரும் ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான பேரா. அப்துல்சலாம், கமாலின் நூல்கள் பற்றி, “இன்று கமாலின் நூல்களில் ஒன்று கூட விற்பனைக்கு கிடையாது. கிழவன் சேதுபதியின் புதையல், சேது நாட்டில் உள்ள ஊர்களும் பெயர்களும், பெரியபட்டணத்தின் வரலாறு, சேதுநாட்டு பேச்சு வழக்கு, தெரிந்து கொள்வோம் திருமறையை, வள்ளல் பி.எஸ். அப்துல்ரகுமானின் கதை ஆகிய நூல்கள் அச்சிடப்படாமல் கையழுத்துப் பிரதிகளாக உள்ளன.” என்று குறிப்பிடுகிறார்.

மறைவு

எஸ்.எம். கமால், மே 31, 2007 அன்று காலமானார்.

நாட்டுடைமை

தமிழக அரசு எஸ்.எம். கமாலின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

ஆவணம்

தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் எஸ்.எம். கமாலின் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

டாக்டர் எஸ்.எம். கமால் நூல்கள்

நூல்கள்

  • இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுக் குறிப்புகள்
  • விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்
  • இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்
  • மாவீரர் மருதுபாண்டியர்
  • முஸ்லீம்களும் தமிழகமும்
  • மன்னர் பாஸ்கர சேதுபதி
  • சேதுபதி மன்னர் வரலாறு
  • சேதுபதி மன்னர் செப்பேடுகள்
  • சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்
  • சேதுபதியின் காதலி
  • சீர்மிகு சிவகங்கைச் சீமை
  • சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும்
  • திறமையின் திரு உருவம் ராஜா தினகர்
  • செந்தமிழ் வள்ளல் சீதக்காதி
  • நபிகள் நாயகம் வழியில்
  • மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்
  • அலிபாத்துஷா காப்பியம்
  • வள்ளல் சீதக்காதி திருமண வாழ்த்து

உசாத்துணை


✅Finalised Page