under review

எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்

From Tamil Wiki
சுந்தரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுந்தரம் (பெயர் பட்டியல்)
எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்

எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் (பிறப்பு: ஆகஸ்ட் 21, 1940) எழுத்தாளர், கவிஞர், பதிப்பாளர், நாடக ஆசிரியர். சிறார்களுக்காகப் பல நூல்களை எழுதினார். சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பணியாற்றினார். ‘பாற்கடல் வானொலி சிறுவர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி சிறார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். தனது சிறார் இலக்கிய முயற்சிகளுக்கான ஏவி.எம். அறக்கட்டளை விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், ஆகஸ்ட் 21, 1940-ல் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். மயிலையில் உள்ள பி. சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார். மணமானவர்.

எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் அழ. வள்ளியப்பா, தணிகை உலகநாதன் ஆகியோரைத் தனது முன்னோடிகளாகக் கொண்டு செயல்பட்டார். ‘வெண்ணிலா’வைப் பற்றி சுந்தரம் எழுதிய முதல் கவிதை ‘தேன்’ என்ற சிற்றிதழில் வெளியானது. ‘ஆடி வரும் தேன்’ என்னும் முதல் கட்டுரையும் தேன் இதழில் வெளியானது. முதல் சிறுகதை ‘காட்டிக் கொடுத்த கடிதங்கள்’ எஸ்.ஆர்.ஜி. சுந்தரத்தின் 17-வது வயதில், கண்ணன் இதழில் வெளியானது.

தொடர்ந்து தினமணி, தினமலர், இந்து தமிழ் திசை, கோகுலம், ரத்னபாலா, அம்புலிமாமா, கண்ணன், கல்கண்டு, அமுதசுரபி, இலக்கியப்பீடம், உரத்த சிந்தனை, இலக்கியச் சோலை எனப் பல இதழ்களில் இவரது சிறார் படைப்புகள் வெளியாகின. நேரம் தவறாமை, சீருடையின் சிறப்பு, சிக்கனம், உயிர்களிடம் அன்பு, சாரணர் இயக்கம், தேசியக் கொடிக்கும் பாடலுக்கும் மரியாதை, நற்பண்புகள், சுற்றுச்சூழல், இயற்கை, பிளாஸ்டிக் ஒழிப்பு, எச்சில் தொட்டு ஒட்டுதலைத் தவிர்த்தல் உள்ளிட்ட சமூகக் கருத்துக்களை மையமாக்க கொண்டு சிறார் பாடல்களையும், சிறுகதைகளையும் எழுதினார்.

எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் சிறுகதைகள் - ஆய்வு நூல்

எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், 150-க்கும் மேற்பட்ட நாடகங்கள், 80-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 100-க்கும் மேற்பட்ட சிறார் கவிதைகள் மற்றும் பாடல்கள், 80-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். இவரது நூல்களில் சில பள்ளிகளில் துணைப்பாட நூல்களாக வைக்கப்பட்டன. என்.சி.இ.ஆர்.டி.(NCERT) விருது பெற்ற ‘பாப்பா மகிழ பத்துக் கதைகள்’ நூல், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த வி. சைதன்யா (கே.பி. வினோத் சைதன்யா) அதற்காக நல்லி திசை எட்டும் விருதும், தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருதும் பெற்றார்.

சாகித்ய அகாதெமியின் ‘சிறுவர் நாடகக் களஞ்சியம்’ நூலிலும், பழனியப்பா பிரதர்ஸ், மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட சிறார் தொகுப்பு நூல்களிலும் இவரது நாடகம், கதைகள் மற்றும் குழந்தை இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றன. பாரதிதாசன், ஜவஹர்லால் நேரு ஆகியோர் பற்றிய இரு வரலாற்று நூல்களின் தயாரிப்பில் ஆசிரியர் குழுவில் பங்கேற்றுப் பணியாற்றினார்.

எஸ்.ஆர்.ஜி. சுந்தரத்தின் சிறுகதைகளையும், நாடகங்களையும் ஆய்வு செய்து இருவர் ‘எம்.பில்.’ மற்றும் முனைவர் பட்டம் பெற்றனர். ’எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் சிறுகதைகள் - ஒரு பொது நல ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வாளர் கு. பிரியா தனது எம்.பில். பட்ட ஆய்வை நூலாக வெளியிட்டார்.

ஊடகம்

எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், 1960-ல், அப்போதைய வானொலி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ரா. ஐயாசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க 'புத்தி வந்தது' என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான முதல் நாடகத்தை எழுதினார். அது தொடங்கி வானொலிக்காக ஐநூற்றிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். நாடகங்கள் மட்டுமல்லாமல், உரைச்சித்திரம், நகர்வலம், குறு நாடகங்கள், செய்திச் சித்திரம் எனப் பல பிரிவுகளில் வானொலியில் இவரது படைப்புகள் ஒலிபரப்பாகியுள்ளன.

சிறுவர் சோலை, முத்துக் குவியல்,மழலை அமுதம், பாப்பா மலர், கண்மணிப் பூங்கா உள்ளிட்ட வானொலி, தொலைக்காட்சிச் சிறுவர் நிகழ்ச்சிகளுக்கு உரைச்சித்திரம், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், பாடல்களை எழுதினார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் சார்பான நிகழ்ச்சிகளை, 500-க்கும் மேற்பட்ட சிறார் சங்க வகுப்புகளை நடத்தினார்.

பாற்கடல் சிறுவர் சங்க ஆண்டு விழா

பாற்கடல் சிறுவர் சங்கம்

எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், அப்போதைய வானொலி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ரா. ஐயாசாமியின் வேண்டுகோளுக்கிணங்க, 1977-ல், தான் பணியாற்றி வந்த துறைமுகப் பொறுப்புக் கழகக் குடியிருப்பிலேயே வானொலி சிறுவர் சங்கத்தைத் தொடங்கினார். அதற்கு ‘பாற்கடல் சிறுவர் சங்கம்’ என்று பெயர் சூட்டினார்.

47 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வரும் இச்சங்கம், நினைவாற்றல், திறன் ஊக்குவிப்பு, பாட்டு, நாட்டியம், ஓவியம், மேடைப் பேச்சு, விடுகதை வகுப்புகள், அறிவியல், தேசியம், ஆன்மிகம், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது. பல்வேறு போட்டிகள் நடத்திக் குழந்தைகள் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் ஆண்டு விழா நாள்களில் சிறப்பு விருந்தினர் தலைமையில் பரிசுகளை வழங்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் சுற்றுலாச் செல்லுதல், சமூகப் பணிகளுக்காக நிதி உதவி திரட்டுதல் ஆகியவை இச்சங்கத்தின் பிற பணிகள்.

பதிப்பு

எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், தனது நூல்களை வெளியிடுவதற்காக ‘பாற்கடல் பதிப்பகம்' என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார்.

விருதுகள்

  • வள்ளியப்பா இலக்கிய விருது
  • ஏவி.எம். அறக்கட்டளை விருது
  • கோவை எல்லப்பா - ரங்கம்மாள் அறக்கட்டளை விருது
  • பாரத ஸ்டேட் வங்கி விருது
  • குழந்தை இலக்கிய ரத்னா விருது
  • உரத்த சிந்தனை விருது
  • பாரதி பணிச் செல்வர் விருது
  • தேசிய கல்வி இயல் நிறுவனம் (என்.சி.ஈ.ஆர்.டி.) வழங்கிய விருது
  • தமிழ் இலக்கிய மாமணி பட்டம்
  • ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவை அளித்த சாதனைச் செம்மல் விருது
  • குழந்தை இலக்கியச் செல்வர் பட்டம்
  • பாலர் படைப்புச் செம்மல் விருது
  • சென்னைத் துறைமுக விருது
  • ’கவிதை உறவு’ இதழ் பரிசு
  • கவிமாமணி விருது

மதிப்பீடு

அழ. வள்ளியப்பா, புலவர் தணிகை உலகநாதன், வானொலி அண்ணா ரா. அய்யாசாமி, கூத்தபிரான் ஆகியோரைத் தனது முன்னோடியாக் கொண்டு செயல்பட்டவர் எஸ்.ஆர்.ஜி. சுந்தரம். ‘குழந்தைகள் சிறந்தால் குவலயம் சிறக்கும்’ என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். தனது படைப்புகளின் மூலம் குழந்தை இலக்கியத்தின் அவசியம், சிறப்பு, தமிழ் மொழிப்பற்று பற்றிய சிந்தனைகளைப் பரப்பினார்.

தமிழின் மூத்த சிறார் இலக்கியப் படைப்பாளிகளுள் ஒருவராக எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • முத்து முத்துப் பாடல்கள்
  • நக்கீர பூமி
  • தாய் தந்த தீபம்
  • திருவடிமாலை (108 வைணவத் தல வெண்பாக்கள்)
  • குணப்படுத்தலாம் (மொழிமாற்று நூல்)
  • சமயம் சார்ந்த தமிழ் நூல்களும் தமிழ்நாட்டுக் கோவில்களும்
  • பரிசு தரும் பெருமை
  • தாய் மண் உலா
  • புத்தகப் பூமாலை
  • விடுமுறையில் விளையாட வினோத விடுகதைகள்
  • பொங்கல் பரிசு
  • நூறாவது இறகு
  • கட்டுரைக் கனிகள்
  • பாப்பா மகிழப் 10 கதைகள்
  • வீரச் சிறுவன் வைரமணி
  • சிரிக்கச் சிரிக்க நடிக்கலாம் (நாடகங்கள் தொகுப்பு)
  • கொடி உயர்த்துவோம் (நாடகம்)
  • தாய் தந்த பூமி (கவிதை நாடகம்)
  • ஆதார சுருதி (மேடை நாடகம்)
  • வாங்க மிஸ்டர் நக்கீரன் (நகைச்சுவை நாடகம்)
  • இது எங்கள் பாரதம்
  • பட்டிமன்றம் பழகுவோம்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Sep-2024, 18:56:22 IST