எழுப்பெழுபது
எழுப்பெழுபது (பொயு 12 ஆம் நூற்றாண்டு) ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட நூல். செங்குந்தர்களின் அரிந்த தலைகள் மீண்டும் தங்கள் உடலோடு ஒட்டிக் கொள்ளும்படி கலைவாணியை வேண்டிப் பாடப்பட்டது.
நூல் அமைப்பு
எழுப்பெழுபது நூலில் எழுபது பாடல்கள் இடம்பெற்றன. ஆனால் 13 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் இடம் பெற்றது. தொடர்ந்து கலைவாணியையும் இறைவர்களையும் வேண்டி கீழ்க்காணும் 13 தலைப்புகளில் பாடல்கள் இடம்பெற்றன.
- வேண்டுகோள்
- நினைத்த வடிவினன்
- ஆதியந்தமிலான்
- வேதப் பொருளான்
- விச்சுவரூபன்
- பிதாமகன் பகைஞன்
- தெய்வயானை மணாளன்
- வள்ளி மணாளன்
- வரையாது கொடுப்போன்
- ஞானசத்திதரன்
- தேவதேவன்
- சாமிநாதன்
- குந்தர் குணமாட்சி
உள்ளடக்கம்
செங்குந்தர்களின் பெருமையையும் சிறப்பையும் கூறுவதுடன் பிற இறைவர்களின் சிறப்பையும் கூறி அவர்களின் அருளைப் பெற்றுத்தருமாறு கலைவாணியை வேண்டுவதாக எழுப்பெழுபது நூலின் பாடல்கள் அமைந்துள்ளன.
பாடல்
வேண்டுகோள்
கலைவாணி நீயுலகி லிருப்பதுவுங்
கல்வியுணர் கவிவல் லோரை
நிலையாகப் புரப்பதுவு மவர்நாவில்
வாழ்வதுவு நிசமே யன்றோ
சிலைவாண னாவிருந்தா யிரம்புயங்க
டுணிந்துமுயர் சீவ னுற்றான்
தலையாவி கொடுத்திடுஞ்செங் குந்தருயிர்
பெற்றிடவுந் தயைசெய் வாயே.
வேதப் பொருளான்
உரைசெயும் வேத கோடி யுட்பொரு ளாகி நின்ற
பரசிவ னிவனே யென்று பன்முறை யேத்த நிற்கும்
ஒருபொரு ளான கந்த னுடன்வரு மரபா ரின்று
தருதலை யாவி கொள்ளத் தந்தருள் வாணித் தாயே.
குந்தர் குணமாட்சி
நிலைதந்தார் புவியினுக்கு யாவருக்கு
மபிமான நிலைக்கத் தந்தார்
கலைதந்தார் வணிகருக்குச் சீவனஞ்செய்
திடவென்றே கையில் யாண்டும்
விலைதந்தார் தமிழினுக்குச் செங்குந்த
ரென்கவிக்கு விலையா கத்தான்
தலைதந்தா ரெனக்கொட்டக் கூத்தனெனும்
பெயரினையுக் தாந்தந் தாரே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Sep-2024, 17:06:59 IST