under review

எம்.என். காரஸேரி

From Tamil Wiki
எம்.என்.காரஸேரி
எம்.என்,காரஸேரி

To read the article in English: M.N. Karassery. ‎


எம்.என். காரஸேரி (எம்.என். காரசேரி, எம்.என்.காரச்சேரி) (முஹயத்தீன் நடுக்கண்டியில்) (பிறப்பு : ஜூலை 2, 1951) மலையாள எழுத்தாளர், மேடைப்பேச்சாளர், மொழியியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர். கோழிக்கோடு கல்லூரியிலும் அலிகட் பல்கலைகழகத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

எம்.என்.காரஸேரி -மனைவி

முஹயதீன் நடுக்கண்டியில் என இயற்பெயர் கொண்ட எம்.என். காரஸேரி கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் காரஸேரி என்னும் ஊரில் ஜூலை 2,1951-ல் என்.சி.முகமது ஹாஜி- கே.சி.ஆயிஷாக்குட்டி இணையருக்கு பிறந்தார்.

எம்.என். காரஸேரி ஷாஃபி மதாப் - ஹிதாயதுஸ்ஸிபியான் மதரஸா என்னும் என்னும் ஸுன்னி மதப்பள்ளியிலும், இஸ்லாமிய இரவுப்பள்ளியிலும் மதக்கல்வி பெற்றார். சேந்தமங்கலூர் உயநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். சாமூதிரி குருவாயூரப்பன் கல்லூரியில் மலையாளத்தில் இளங்கலைப் பட்டமும், கோழிக்கோடு பல்கலையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தன் தாய்மாமனான என்.சி.கோயக்குட்டி ஹாஜியின் நிதியுதவியுடன் உயர்கல்வியை தொடர்ந்தார். வைக்கம் முகமது பஷீரின் படைப்புகளை ஆய்வு செய்து முதுகலை ஆய்வேட்டை எழுதினார். 1974-ல் குட்டிக்கிருஷ்ண மாரார் எழுதிய மகாபாரத ஆய்வுநூலான 'பாரதபரியடனம்' என்னும் நூலை ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றார். 1993-ல் கோழிக்கோடு பல்கலையில் இஸ்லாமிய நாட்டார் இலக்கியத்தில், சுகுமார் அழிக்கோடு வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றார்

மலையாள இலக்கியத்த்தில் சுகுமார் அழிக்கோடு , சம்ஸ்கிருத இலக்கியத்தில் சாத்தனாத்து அச்சுதனுண்ணி ஆகியோர் காரஸேரியின் ஆசிரியர்கள்.

தனிவாழ்க்கை

கல்விப்பணி

எம்.என். காரஸேரி 1978-ல் கோழிக்கோடு,அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். கோடஞ்சேரி அரசுக் கலைக்கல்லூரி, கோழிக்கோடு அரசு மாலைநேர கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார். 1986 முதல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாளத்துறை தலைவராக பணியாற்றினார். 2012-ல் ஓய்வுபெற்றபின் அலிகட் பல்கலையில் பாரசீக மொழி ஆய்வுத்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். 2013 இறுதியில் அலிகட்டில் இருந்து ஓய்வுபெற்று கோழிக்கோட்டில் வசிக்கிறார்

குடும்பம்
ஃபாபி பஷீர் உடன் (1989)

எம்.என். காரஸெரி 1978-ல் வி.பி.கதீஜாவை மணந்தார். மகள்கள் நிஷா, ஆஷ்லி. மகன் முகமது ஹாரீஸ்.

இதழியல்

  • எம்.என். காரஸேரி 1976 முதல் 1978 வரை மாத்ருபூமி வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • கேரள சாகித்ய அகாதெமி இதழான 'சாஹித்யலோகம்' இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • கோழிக்கோடு பல்கலையின் மலையாளத்துறை வெளியிட்ட 'மலயாள விமர்சம்' என்னும் விமர்சன இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்
  • நியுயார்க்கில் இருந்து அமெரிக்க மலையாளி சங்கம் 2001 முதல் வெளியிடும் 'ஜனனி' இதழின் இலக்கிய ஆலோசகராக உள்ளார்

திரைப்படம்

MN Karassery1.jpg

எம்.என். காரஸேரி குறுகிய காலம் சினிமாவில் பணியாற்றினார். 1973-ல் 'சுழி' என்னும் படத்தில் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றினார். 1974-ல் பி.பி.மொஹிதீன் முக்கம் இயக்கிய 'நிழலே நீ சாட்சி' என்னும் படத்திற்கு திரைக்கதை எழுதினார், அது வெளிவரவில்லை. 1979-ல் 'பதினாலாம் ராவு' என்னும் படத்திற்கு திரைக்கதை எழுதினார்.

எம்.என். காரஸேரி சுதந்திரப்போராட்டத் தியாகி இ.மொய்து மௌல்வி பற்றிய 'நூற்றாண்டிண்டே சாக்ஷி' என்னும் ஆவணப்படத்தின் திரைக்கதையை எழுதினார்.

'உம்மமார்க்கு ஒரு சங்கட ஹர்ஜி' என்னும் தன் நூலின் ஆவணப்பட வடிவமான 'எழுதாத்த கத்துக்கள்' என்னும் தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை எழுதினார். அது கேரள அரசின் விருது பெற்றது.

இலக்கியப் பணிகள்

Karasery.jpg

வைக்கம் முகமது பஷீருக்கு எம்.என். காரஸேரி நெருக்கமானவராக இருந்தார். பஷீர் பற்றி எழுதிய ஆய்வு நூல்தான் இவருடைய முதல் படைப்பு. பஷீரின் கடைசி பேட்டி எம்.என். காரஸேரியால் 1994-ல் ஆல் இண்டியா ரேடியோவுக்காக எடுக்கப்பட்டது. பஷீர் வாழ்க்கை வரலாற்றை சாகித்ய அகாதெமிக்காக எழுதினார். 'பஷீரின்றே பூங்காவனம்' என்ற நூலையும் எழுதினார்.

எம்.என்.காரஸேரி இஸ்லாமிய நாட்டாரிலக்கியம், குறிப்பாக மாப்பிளைப் பாட்டு எனப்படும் இஸ்லாமிய நாட்டார் இசை பற்றிய முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர். மாப்பிள்ளைப்பாட்டுகள், மாப்பிள்ளை நகைச்சுவைகள் (மாப்பிள்ளை -கேரளத்தின் ஸுன்னி இஸ்லாமியர்) ஆகியவற்றை தொகுத்தவர். இஸ்லாமிய இசையில் புகழ்பெற்றிருந்த மோயின்குட்டி வைத்தியரின் பாடல்களை தொகுத்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார்.

இஸ்லாமிய தனிச்சட்டம் மற்றும் ஆசாரங்களைப் பற்றிய விவாத நூல்களை எழுதியுள்ளார். புகழ்பெற்ற சேகன்னூர் மௌல்வியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். மொழியியல், சொற்பொருளியல் சார்ந்த ஆய்வுநூல்களையும் எழுதியுள்ளார்.

எம்.என். காரஸேரி முகமது ஆஸாதின் 'The Road to Mecca' என்னும் ஆன்மிகப்பயண நூலை 'மக்கயிலேக்குள்ள பாதை' என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்தார். முகமது நபியின் வழிகாட்டல்களை 'திருமொழிகள்' என்னும் பெயரிலும் குர்ஆன் வசனங்களை 'திருவருள்' என்னும் பெயரிலும் மொழியாக்கம் செய்துள்ளார். எஸ்.கே. பொற்றேக்காட்டின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் இருந்து மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தார்.

அரசியல்

காரஸேரி.png

எம்.என். காரஸேரி மதச்சார்பின்மையை முன்னிறுத்தும் அரசியல் செயல்பாட்டாளராக அறியப்படுகிறார். அரசியலில் எவ்வகையிலும் மதம் கலக்கப்படலாகாது என்னும் கருத்தை முன்வைத்து 'மதேதர சமாஜம்' என்னும் அமைப்பை அமைப்பை தொடங்கி, அதன் தலைவராக இருந்து செயல்பட்டு வருகிறார். கோழிக்கோடு சாலியாற்றின் நீரைப் பாதுகாப்பதற்கான சூழியல் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

விருதுகள்

தமிழ் விக்கி தூரன் விருது விழா - 2024
  • 2007-ல் அரபு மலையாளம் குறித்த ஆய்வுக்காக பல்கலைக்கழக நிதிக்குழு விருதைப் பெற்றார்
  • 2019 வி.டி.விருது
  • 2021 பி.பாஸ்கரன் விருது
  • 2023 அபுதாபி மலையாளி சமாஜம் விருது
  • 2023 பேராசிரியர் எம்.பி.மன்மதன் விருது
  • 2023 முகமது அப்துல்ரஹ்மான் விருது
  • 2023 வாக்படானந்த குருதேவர் விருது.
  • 2024 பவனன் மதச்சார்பின்மை விருது

நூல்கள்

கட்டுரைகள்
  • ஆய்வு (Vishakalanam)
  • குறிப்புகள் (Kurimanam)
  • சிந்தனைகள் (Alochana)
  • ஒன்றின் தரிசனம் (Onninte Darshanam)
  • பார்வைக்கோணம் (Kazchavattam)
  • குளிக்கவில்லை என்று சொன்னால்தான் என்ன? (Kulichallenu paranjalentha?)
  • யாரும் ஏற்றாத விளக்கு (Aarum Koluthatha Vilakku)
  • சேகனூரின் குருதி (Chekkanoorinte Raktham)
  • துஞ்சன் பரம்பில் களியாட்டம்(Thunchan Parambile Bleach)
  • பஷீரின் மலர்வனம் (Basheerinte Poonkavanam)
  • பிரிவினைவாதத்திற்கு எதிராக ஒரு நூல் (Vargeeyathaykkethire oru Pusthakam)
  • அவதானிப்பின் சுவடுகள் (Nireekshanathinte Rekhakal)
  • தெளிவான மலையாளம் (Thelimalayalam)
  • பாடபேதம் (Pathantharam)
  • நமக்கு முன்னால் உள்ள கண்ணாடிகள் (Nammude Mumpile Kannadikal)
  • ஒரு சொல்லின் பாடபேதங்கள் (Oru vakkinte paatham)
  • விவேகம் எந்த அடுப்பில் சமைக்கப்படுகிறது (Vivekam Pakam Cheyyunnathu Ethu Aduppilanu?)
  • அம்மைமார்களுக்காக ஒரு புகார்கடிதம் (Ummamarkkuvendi Oru Sankada haraji)
  • நாய்களுக்கு அனுமதியில்லை (Naykkalkku Praveshanamilla)
  • சாதியை விட செறிவான ரத்தம் (Jathiyekkal Kattiyulla Raktham)
  • கிறிஸ்துவர்களை அவமானப்படுத்துவது யார்? (Aranu Christianikale Apamanikkunnath?)
  • இஸ்லாம் அரசியல் விமர்சிக்கப்படுகிறது (Islamika Rashtreeyam Vimarshikkappedunnu)
  • அன்பு இல்லாதவர்களுக்கு மதநம்பிக்கை இல்லை (Snehamillathavarkku Mathavishwasamilla)
  • நேசித்தும் முரண்பட்டும் (Snehichum Tharkkichum)
  • அபத்தம் படிந்த தொடக்கம் (Kuruthakkedil Kuricha Thudakkam)
  • பசியின் ஆன்மீகம் (Vishappinte Athmeeyatha)
  • இஸ்லாமியர்கள் ஏன் மதசார்பின்மையை கண்டு பயப்படுகிறார்கள் (Mathetharavadathe Musleengal Pedikkendathundo?)
  • தாய்மொழி (Thaymozhi)
  • மலையாளச்சொல் (Malayala Vakku)
  • அழிக்கோடு ஆசான் (Azhicode Mash)
  • அனுபவம் நினைவுகள் பயணம் (Anubhavam Ormma Yathra)
  • சொல்லின் வருகை (Vakkinte Varavu)
  • அடைக்கோழி கூவக்கூடாது! (Pidakkozhi koovaruth!)
  • மதத்தின் அரசியலும் அரசியலின் மதமும் (Mathathinte Rashtreeyavum Rashtreeyathinte Mathavum)
  • ஏன் மலையாளம் படிக்க வேண்டும்? (Enthina Malayalam Padikkunnath?)
  • அம்மா (Umma)
தொகுத்த நூல்கள்
  • புளிக்கோட்டிலின் நூல்கள் (Pulikkottil Kritikal)
  • நவதாளம் (Navathalam)
  • ஸஹிஹுல் புஹாரி (Saheehul Bukhari)
  • ஒப்பிலக்கியம் சார்ந்த எண்ணங்கள் (Tharathamya Sahitya Vicharam)
  • ஒப்பிலக்கிய சிந்தனைகள் (Tharathamya Sahitya Chintha)
  • ஒப்பிலக்கியங்களின் விவேகம் (Tharathamya Sahitya Vivekam)
  • தரிசனம் சமூகம் தனிமனிதன் (Darshanam Samooham Vyakthi)
  • சொற்களின் விந்தை (Vakkukalude Vismayam)
  • வெள்ளிப்பாதை (Rajatharekha)
  • இலக்கிய கோட்பாட்டு விவாதம் (Sahitya Sidhantha Charcha)
  • சி.என். அகமது மௌலவி நினைவுமலர் (CN Smaranika)
  • காந்திபாதம் (Gandhipatham)
  • பஷீரின் எண்ணங்கள் (Basheerinte Kazhchakal)
  • எம்.டி.வாசுதேவன் நாயர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (MT: Therenjedutha Lekhanangal)
  • சப்ததாராவலி (மலையாளம்-மலையாளம் அகராதி) (Shabdaratnavali)
  • புத்தகத்தின் நுழைவாயில் (Pusthakathinte Poomukham)
ஆய்வு நூல்கள்
  • மாராரின் குருஷேத்ரம் (Mararude Kurukshethram)
  • வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
  • குஞ்ஞுண்ணியின் கவியுலகும், சித்திரங்களும் (Kunhunny- Lokavum Kolavum)
  • மொய்தீன்குட்டி வைத்தியர்- கலையும் காலமும் (Moyinkutty Vaidyar: Kalayum Kaalavum)
  • வளரும் கேரளம், உருமாறும் மலையாளம் (Valarunna Keralam, Marunna Malayalam)
  • காரஸேரியின் தொன்மங்கள் (Karasseriyile Kissakal)
  • புளிக்கோட்டில்- மாப்ளா பாடல்களில் கேரளீயம் (Pulikkottil: Mappilappattile Keraleeyatha)
  • பஷீர்- நன்மையின் ஒளி (Basheer: Nanmayude Velicham)
  • உம்மா (Umma)
மொழிபெயர்ப்பு
ஆங்கிலத்திலிருந்து மலையாளத்திற்கு
  • மெக்காவிற்கான பாதை (Makkayilekkulla Patha)
  • பொற்றேகாட் (Pottekkattu)
  • மயிர்க்கூச்செறியும் காதல் (ஜலாலுதீன் ரூமியின் தேர்ந்தெடுக்கப்பட காதல்கவிதைகள்) (Pranayaharsham)
  • காதல்தாகம் (கலீல் கிப்ரானின் தேர்ந்தெடுக்கப்பட்ட காதல் கவிதைகள்) (Pranayadaham)
  • மழை கனக்கிறது (நிருபமா மேனோன் ராவ்) (Mazha kanakkunnu)
  • துதிபாடல்கள் இல்லாத(அனிதா பிரதாப்பின் சமூக அவதானிப்புகள்) (Vazhthupattillathe)
மறுஆக்கங்கள்
  • திருமொழிகள் (முகமது நபிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்கள்) (Thirumozhikal)
  • முல்லா நஸுருதினீன் பகடிகள் (Mulla Nasaruddeente Potikkaikal)
  • திருவருள் (Thiruvarul)
  • முல்லா நஸுருதினீன் பொழுதுபோக்குகள் (Mulla Nasarudheente Nerampokkukal)
  • இஸ்லாமிய நாடுகளின் பழமொழிகள் (Muslim Nadukalile Pazhanchollukal)
  • முல்லா நஸுருதினீன் குறும்புகள் (Mulla Nasarudheente Kusrithikal)
  • முல்லா நஸுருதின் கதைகள் (Mulla Nasarudheen Kadhakal)
  • மாப்ள நகைச்சுவைகள் (Mappilathamashakal)
  • மலையாள ராமாயணம் (வால்மீகி ராமாயணத்தின் சுருக்கப்பட்ட உரைநடை வடிவம்) (Malayala Ramayanam)
நேர்காணல்கள்
  • உரையாடல் (Samsaram)
  • மலபார் கலவரம், நான்காம் உலகம், கேரளீயம் (Malabar Kalapam, Nalam Lokam, Keraleeyatha)
  • ஷரியத்- சில விவாதங்கள் (Shariath : Chila Varthamanangal)
  • சமகால உரையாடல் (Varthamankala Varthamanangal)
  • காந்தியின் சாட்சி (Gandhiyude Sakshi)
  • மாப்ளப்பாட்டு- ஒரு உரையாடல் எம்.என்.காரசேரி பேசுகிறார் (Mappilappattu: Oru Samvadam MN Karassery Samsarikkunnu)
குழந்தை இலக்கியம்
  • ஹுஸ்னுல் ஜமால் (Husnul Jamal) (மொய்து குட்டி வைத்தியரின் ஹுஸ்னுல் ஜமால் என்ற கதையின் குழந்தைகளுக்கான கதைவடிவம்)
பாடல்கள்
  • பஷீர்மாலை (Basheer Mala) (பஷீரை புகழ்ந்து எழுதிய மாப்ள பாட்டு)
திரைக்கதை
  • பதினான்காவது இரவு (Pathinalam Ravu)
தொகுப்புகள்
  • நீதி தேடும் சொல் (Neethi Thedunna Vakku) (தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)
  • தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கிய கட்டுரைகள் ( Therenhedutha Sahitya Lekhanangal)

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2024, 20:40:14 IST