under review

என். ராஜி

From Tamil Wiki
என். ராஜி

என். ராஜி (பிறப்பு: 1954) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார்(ஆசான்). மகாபாரதக் கூத்துக்கள், ராமாயணம், தனிக்கூத்துக்கள் ஆடினார். தெற்கத்திப் பாணி கூத்துக்காரர்.

வாழ்க்கைக் குறிப்பு

என். ராஜி தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரத்தில் 1954-ல் பிறந்தார். நான்காம் வகுப்பு வரை பயின்றார். சொந்த ஊர் உளியனூர். தெருக்கூத்து இல்லாத சமயங்களில் சலவைத்தொழில் செய்வார்.

கலை வாழ்க்கை

என். ராஜியின் முன்னோர்கள் தெருக்கூத்துக் கலைஞர்களாக இருந்தனர். ராஜியின் உறவினர்கள் தாத்தா முயலப்ப மேஸ்திரி, நாகப்ப மேஸ்திரி, ஆறுமுக மேஸ்திரி, சின்னப்பா மேஸ்திரி, பங்காளிகள் அரியல்வாடி குப்பன், வல்லன் மேஸ்திரி, பருக்கூர் முத்தப்பன் மேஸ்திரி ஆகியோர் நாடகம் நடத்தியுள்ளனர். அப்பாவுடன் கம்பெனியில் சேர்ந்து சிறுவயதில் நாடகங்கள் கற்றுக் கொண்டார். என். ராஜியின் வாத்தியார்கள் சிறுகாவேரிப்பாக்கம் முனுசாமி, கீழ்வீதிகன்னியப்பன்.

பதினெட்டு வயது முதல் கூத்து ஆடினார். மகாபாரதக் கூத்து முழுவதும் ஆடினார். இரணியவிலாசம், தக்கயாகம், வயுத்ராஜா கல்யாணம் ஆகிய தனிக்கூத்துக்கள் ஆடினார். அதிகமும் பெண் வேடங்கள், கிருஷ்ணன், சகுனி, நாரதர், கட்டியங்காரன் ஆகிய வேடங்கள் போடுவார். சில கூத்துக்களில் இரண்டிற்கும் மேற்பட்ட வேடங்கள் போடுவார்.

ஸ்ரீ பவானி அம்மன் நாடக மன்றம், திருமால்பூர் கம்பெனி, கீழ்வெண்பாக்கம் கோபால்நாயக்கர் கம்பெனி, பெருங்கட்டூர் ராஜகோபால் கம்பெனி, குண்டையார் தண்டலம் பாலகிருஷ்ணன் கம்பெனி, கீழ்ப்பெரம்ப நல்லூர் திருவேங்கடம் கம்பெனி, முட்டவாக்கம் கோபாலகிருஷ்ணன் கம்பெனி, சேத்துப்பட்டு சண்முகம் கம்பெனி, விப்போட்டு முனுசாமி நாயக்கர் கம்பெனி ஆகியவற்றில் தெருக்கூத்து ஆடினார்.

மாணவர்கள்

என். ராஜிக்கு இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். முக்கியமானவர்கள்

  • சேட்டு
  • கணேசன்
  • தீர்தமலை
  • குமார்
  • சுப்பிரமணி

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கூத்து
  • ராமாயணத்தின் சுந்தரகாண்டம்
தனிக்கூத்து
  • இரணியவிலாசம்
  • தக்கயாகம்
  • வயுத்ராஜா கல்யாணம்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Oct-2024, 18:23:24 IST