under review

எண்களின் சிறப்பு: எண் 1

From Tamil Wiki

எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பட்டில் உள்ளன. இவற்றில் எண் 1 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண்.

எண் 1-ன் சிறப்புகள்

ஒன்று என்பது முதல் எண், அடிப்படை எண். மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்குகிறது. ஒருவருடைய வயதும் ஒன்றிலிருந்து தொடங்குகிறது. எண் 1 என்பது தொடக்க எண். இதிலிருந்துதான் மற்ற எண்கள் இரண்டு, மூன்று எனத் தொடர்கின்றன.

ஆன்மிகச் சிறப்புகள்
  • ’எல்லாம் ஒன்றே’ என்னும் அத்வைத தத்துவத்தை எண் 1 விளக்குகிறது.
  • ‘இறைவன் ஒருவனே’ என்பதைக் குறிக்கும் ‘ஏகன்’ என்ற சொல்லாக எண் 1 உள்ளது.
  • ஒன்று என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஒருமை என்ற சொல், ஒற்றுமை என்பதையும் குறிக்கிறது.
  • ஒன்றுதல், ஒன்று சேர்தல் என்பதை ‘ஒன்று’ என்ற சொல் குறிக்கிறது.
  • ஆதியை (தொடக்கத்தை) உணர்த்துவதும், ஏகாந்தத்தை உணர்த்துவதும் எண் 1
  • இறைவனுக்கு முன் அனைவரும் ஒன்றே என்ற தத்துவத்தை எண் 1 உணர்த்துகிறது.
  • அப்பர், நம்மாழ்வார் போன்றோர் எண் ஒன்றை முதன்மையாக வைத்துப் பாடல்கள் பாடியுள்ளனர்.
கணிதச் சிறப்புகள்
  • எண் ஒன்றைக் கொண்டு எந்த எண்ணைப் பெருக்கினாலும், வகுத்தாலும் அதே எண்ணே விடையாக வரும் என்பதால், எண் 1 நிலைதரும் எண்ணாக, மாறாத எண்ணாகக் கருதப்படுகிறது.
  • கணித முறையில் எண் 1 முதலாவது முக்கோண மற்றும் சதுர எண்.
இலக்கியச் சிறப்புகள்

எண் ஒன்று என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருட் கிளவி, ஒரு பொருட் பன்மொழி, ஒரு தலைக் காமம், ஒருபா ஒரு பஃது, ஒரு புடை உவமை, ஒரு புடை ஒப்புமை, ஒரு மிடற்றிரட்டை, ஒரு மொழி அணை, ஒருமை மகளிர், ஒருவாமை, ஒருஉ வண்ணம் போன்றவை இலக்கிய வழக்கில் பயன்படுத்தப்படுகின்றன.

அகராதிகளில் எண் 1- ஐப் பற்றிய குறிப்புகள்

அகராதிகளில் ஒன்று என்பதைக் குறிக்கும் ‘ஏகம்’ என்பது பின்வருமாறு பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • ஏகம் - ஒன்று; ஒப்பற்றது; தனிமை; எட்டு அக்குரோணி கொண்ட சேனை
  • ஏக கண்டம் - ஒரே குரல்
  • ஏக குடும்பம் - ஒரே குடும்பம்
  • ஏக குண்டலன் - ஒற்றைக் குண்டலம் அணிந்த பலராமன்
  • ஏகச் சக்கரவர்த்தி - தனி ஆணை செலுத்துவோன்
  • ஏக சிந்தை - ஒத்த மனம்; ஒரே சிந்தை
  • ஏக தண்டி - ஒற்றைக்கோல் தரித்த சந்நியாசி
  • ஏக தந்தன் - ஒற்றைத் தந்தம் உடைய விநாயகன்
  • ஏக தேசம் - சமமின்மை, மாறுபாடு, சிறுபான்மை, குறைந்தது
  • ஏக தேவன் - புத்தன்
  • ஏக பாதம் - ஒரு செய்யுள் வகை
  • ஏக தேச உருவகம் - அணி வகைகளுள் ஒன்று
  • ஏகம்பன் - காஞ்சியில் உள்ள சிவபெருமான்
  • ஏக ராசி - அமாவாசை
  • ஏகாக்கிர சித்தம் - ஒன்றில் நிலைத்த மனம்
  • ஏகாங்கி - திருமால் அடியாருள் ஒருவகை
  • ஏக வெளி - பெருவெளி
  • ஏக வீரியன் - வீரபத்திரன்
  • ஏகாதசம் - பதினோராம் இடம்
  • ஏகாந்தம் - தனிமை
  • ஏகாயனர் - மாத்துவர்
  • ஏகார்க்களம் - தீய நாள் அறிவதற்குரிய சக்கரம்
  • ஏகாலி - வண்ணார், சவர்க்காரம்
  • ஏகான்ம வாதம் - பிரம்மம் ஒன்றைத் தவிர வேறேதும் இல்லை என்று வாதிடுவது.
  • ஏகி - கைம்பெண்
  • ஏகை - உமை
  • ஏகோதகம் - நதி சங்கமம்

உசாத்துணை

  • தினகரன் இதழ் கட்டுரை
  • நவம்: நாஞ்சில் நாடன்: சிறுவாணி வாசகர் மைய வெளியீடு: பவித்ரா பதிப்பகம்: முதல் பதிப்பு: ஏப்ரல், 2017


✅Finalised Page