உறையூர் இளம்பொன் வணிகனார்
உறையூர் இளம்பொன் வணிகனார் சங்க காலப் புலவர். புறநானூற்றில் நடுகல் பற்றிய பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
சோழர்களின் தலைநகரான உறையூரில் பிறந்தார். உறையூரில் பொன்வாணிகம் செய்தார். பொன் வகைகளில் ஆடகமும், சாம்பூநதமும் மாற்றுகுறைதல் இல்லாததால் பெரும்பொன் என்றும் கிளிச்சிறையும் சாதரூபமும் மாற்று குறைந்ததால் இளம்பொன் என்றும் அழைக்கப்படுகிறது. உறையூரில் இளம்பொன் வணிகம் செய்ததால் உறையூர் இளம்பொன் வணிகனார் என்றழைக்கப்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
புறநானூற்றின் 264-வது பாடல் இவர் பாடியது. இந்தப்பாடலில் நடுகல் பற்றிய செய்தியும், அதை வழிபடும் முறை குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.
நடுகல் செய்தி
- பரல் கற்களை அடுக்கிக் கட்டிய பதுக்கைக் கோயிலில் நடுகல் நாட்டினர்.
- வழிபாடு: மரல் நாரைக் கிழித்து மாலை தொடுத்து அணிவித்தனர். மயில்பீலி கட்டிவைத்தனர்.
- நடுகல்லில் பெயர் பொறித்தனர்.
- பகைவர் ஓட்டிய ஆநிரைகளைக் கன்றோடு மீட்டுத் தந்தவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது.
பாடல் நடை
பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி,
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு,
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும் ; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே?
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
- சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: tamildigitallibrary
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
29-Nov-2022, 09:23:10 IST