உண்டாட்டு(வெட்சித்திணை)
உண்டாட்டு வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. வெட்சி மறவர் வெற்றியைக் கொண்டாட கள்ளும், இறைச்சியும் உண்டு களித்து ஆடுவதைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வெட்சி மறவர்கள் வெற்றியும் வேந்தனது வரிசையும் (சிறப்பும் பாராட்டும்) பெற்று, கள்ளும் இறைச்சியும் உண்டு களித்து ஆடிய நிகழ்வைக் கூறுவது உண்டாட்டு என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
தொட்டு இமிழும் கழல் மறவர்
மட்டு உண்டு மகிழ்ந்தூங்கின்று(1.18)
வெண்பா
இளி கொண்ட தீம்சொல் இளமா எயிற்றி
களி கொண்ட நோக்கம் கவற்றத் - தெளி கொண்ட
வெங்கண் மலிய விளிவதுகொல் வேற்றார்மேல்
செங்கண் மறவர் சினம் (15)
பொருள்: பகைவர் மேல் சிவந்த கண்களை உடையவரான மறவரது சினமெல்லாம், இளி என்னும் இசையினது இனிமையைக் கொண்ட இனிய சொல்லுடையவளும், இளமையும் பெருமையும் உடையவளுமான் எயிற்றியினது, காமக்களிப்பினை உட்கொண்ட பார்வை வருத்த, தெளிவு கொண்ட வெவ்விய கள்ளானது மிகுதியாக, கெடுவதாகும் போலும்!
எடுத்துக்காட்டு
புறநானூறில் 257, 258, 262, 269, 297 எண்ணுடைய பாடல்கள் வெட்சித்திணையில் உண்டாட்டு என்னும் துறையைச் சேர்ந்தவை.
புறநானூறு 258
- திணை: வெட்சி துறை: உண்டாட்டு
- பாடியவர்: உலோச்சனார்
முள் கால் காரை முது பழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந் நிணம் பெருத்த
எச்சில் ஈர்ங் கை வில்புறம் திமிரி,
புலம் புக்கனனே, புல் அணல் காளை;
ஒரு முறை உண்ணாஅளவை, பெரு நிரை
ஊர்ப் புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி, முது கள் சாடி;
ஆ தரக் கழுமிய துகளன்,
காய்தலும் உண்டு, அக் கள் வெய்யோனே.
பொருள்:அடிபக்கத்தில் முள்ளுடைய காரைச் செடியின் முதிர்ந்த பழத்தைப் போன்று நன்கு முதிர்ந்த கள்ளையுடைய கந்தாரம் என்னும் இடத்திலிருந்து தான் கொண்டுவந்து நிறுத்திய ஆநிரைகளுக்கு ஈடாகக் கள்ளை வாங்கிப் பருகி, வளமான ஊனைத் தின்று தன் எச்சில் கையை வில்லின் நாணில் துடைத்துவிட்டு, சிறிய தாடியையுடைய காளை போன்ற அந்த இளைஞன் இப்பொழுது வேறொரு இடத்திற்குச் சென்றிருக்கிறான். இங்குள்ளவர்கள் அனைவரும் ஒருமுறை கள் குடிப்பதற்குள், அவன் ஆநிரைகளைக் கவர்ந்துகொண்டு வந்துவிடுவான். அவன் கள்ளை விரும்புபவன்; வரும்பொழுது மிகுந்த தாகத்தோடு வருவான். அதனால், முதிர்ந்த கள் உள்ள சாடியிலிருந்து அனைவருக்கும் கள் கொடுப்பதைத் தவிர்த்து, அக்கள்ளை பாதுகாப்பாயாக.
புறநானூறு 262
- திணை: வெட்சி துறை: உண்டாட்டு
- பாடியவர்: மதுரைப் பேராலவாயர்
நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன் கால் பந்தர்ப்
புனல் தரும் இள மணல் நிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கி, பின் நின்று,
நிரையொடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ் சாயலரே.
பொருள்: மதுவைப் பிழியுங்கள்; ஆட்டை வெட்டுங்கள். பசிய இலைகளால் வேயப்பட்ட சிறிய கால்களுடைய பந்தரில் ஈரமுடைய புதுமணலைப் பரப்புங்கள்; பகைவரின் தூசிப்படையை அழித்துத் திரும்பிவரும் தனது படைக்குப் பின்னே நின்று, ஆநிரைகளுடன் வரும் என் தலைவனுக்குப் பக்கத்தில் துணையாக உள்ள மறவர்கள் அவனைவிட மிகவும் சோர்வுடன் இருப்பார்கள். பின்னணி: தலைவன் பகைவர் நாட்டிலிருந்து பசுக்களைக் கவர்ந்துவரச் சென்றிருந்தான். அவன் வரவுக்காக மதுரைப் பேராலவாயர் காத்திருந்தார். தலைவன் தன் துணைமறவர்களுடனும், தான் கவர்ந்த பசுக்களுடனும் திரும்பி வந்தான். அங்குள்ள மக்கள் பெரும் ஆரவாரத்துடன் அவனை வரவேற்றனர். தலைவனின் வெற்றியைப் பாராட்டி அங்கே ஒரு உண்டாட்டு நடைபெற்றது.
உசாத்துணை
நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Mar-2025, 09:47:00 IST