under review

ஈசான்ய ஞான தேசிகர்

From Tamil Wiki
ஈசான்ய ஞான தேசிகர்

ஈசான்ய ஞான தேசிகர் (பதினேழாம் நூற்றாண்டு) திருவண்ணாமலையை நாடி வந்த மெய்ஞ்ஞானிகளுள் ஒருவர். இந்துக்களுக்கு மட்டுமல்லாது, ஐரோப்பியரான ஐடன் துரைக்கும் குருவாக விளங்கினார். அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் புலி உருவில் வந்து இவரது தவத்தைக் காவல் காத்தனர் என்பது தொன்மம்.

வாழ்க்கைக் குறிப்பு

ஈசான்ய ஞான தேசிகர், பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள ராயவேளூர் என்ற ஊரில் தோன்றினார். இயற்பெயர் கந்தப்பன். சிறு பருவத்திலேயே சாஸ்திரங்களையும், புராண இதிகாசங்களையும் கற்றுத் தேர்ந்த இம்மகான், பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளாது, பெற்றோரின் உத்தரவு பெற்று துறவறம் பூண்டார்.

ஈசான்ய ஞான தேசிகர்

ஆன்மிக வாழ்க்கை

ஈசான்ய ஞான தேசிகர், பல தலங்களுக்கும் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டார். பல சாதுக்களின் மடங்களுக்கும், ஜீவ சமாதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். பின் சிதம்பரம் தலத்தை அடைந்தவர் அங்கு வாழ்ந்த பிரம்ம யோகி மௌனகுரு சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். குருவின் பாதங்களைப் பணிந்து, அவரிடமே பல ஆண்டுகாலம் இருந்து வேத, வேதாந்த உண்மைகள், ப்ரம்ம தத்துவங்கள், உலக வாழ்க்கை ரகசியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். பல்வேறு சித்துக்களும் கைவரப் பெற்ற ஈசான்ய ஞான தேசிகர், மிகச் சிறந்த அனுபூதிச் செல்வரானார். தன் குருவின் ஜீவ சமாதிக்குப் பின் மீண்டும் தனது தல யாத்திரையைத் தொடங்கினார்.

ஜனனாத் கமலாலயே என்று சிறப்பிக்கப்படும் முக்தி தரும் தலங்களில், பிறக்க முக்தியைத் தரும் தலமான திருவாரூருக்குச் சென்றார். அங்கே சிறந்த தவயோகியும், சித்த புருஷர்களில் ஒருவரும், இறைவனின் காட்சியையும், அம்பிகையின் அருளையும் நேரே பெற்றவருமான தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். பின் நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் என்ற ஊரை அடைந்து அங்கு உறையும் சிங்காரவேலனைத் தரிசனம் செய்தார். பின் அங்கே எப்பொழுதும் பிரம்ம நிஷ்டையிலேயே இருப்பவரான 'உகண்ட லிங்க ஞான தேசிகர்' என்னும் மகா குருவின் ஆசியைப் பெற்றார்.

ஈசான்ய ஞான தேசிகர் தவம்

தவம்

தொடர்ந்து பயணம் செய்த ஈசான்ய ஞான தேசிகர், திருவண்ணாமலைக்கு அருகே உள்ள, வேட்டவலம் என்ற ஊரை அடைந்தார். அங்கு சில காலம் தவம் செய்தார். பின்னர் திருவண்ணாமலை தலத்தை அடைந்து அங்கு தவம் செய்ய ஆரம்பித்தார்.

தொன்மம்

விஷமிகளாலும், போலி பக்தர்களாலும் ஈசான்ய ஞான தேசிகரது தவத்திற்கு ஊறு நேராமல் காப்பதற்காக அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் புலி உருவில் வந்து இவரைக் காவல் காத்தனர் என்பது தொன்மம். விஷமிகள் எவரேனும் அப்பகுதிக்கு வந்தால் புலிகள் உரத்த குரலில் உறுமி அவர்களை பயமுறுத்தி விடும். அதனால் அவர்கள் அப்பக்கம் வரத் தயங்குவர். நல்ல எண்ணம் கொண்ட பக்தர்கள் வந்தால் அப்புலிகள் தாமாகவே அவ்விடம் விட்டு நீங்கி விடும். சில சமயம் தேசிகரும் அப்புலிகளை அன்புடன் தடவிக் கொடுத்து, அவ்விடத்திலிருந்து போகச் சொல்வார். இதனால் தேசிகரின் பெருமை பல இடங்களிலும் பரவியது. இவரது பெருமையைக் கேள்வியுற்று பலரும் அவரை நாடி வந்தனர். மகானும் தனது தவ ஆற்றலால் தம்மை நாடி வந்தவர்களது நோய், நொடிகளை நீக்கினார். வல்வினைகளைப் போக்கினார். பலருக்கு ஞானகுருவாக இருந்து அவர்கள் தம் ஆன்ம வளர்ச்சி உயர வழி வகுத்தார்.

உபதேசம்

"ஒவ்வொருவரும் தம்மைத் தாமே உணர்ந்து முக்தி நெறியை அடைய வேண்டும்" என்பதே ஈசான்ய ஞான தேசிகர் வலியுறுத்திய முக்கிய உபதேசம். தனது சீடர்கள் ஞான மார்க்கத்தை அடைவதற்காக பல் வேறு நூல்களை இயற்றினார். அவற்றுள் முக்கியமானது "ஞானக் கட்டளை" என்பதாகும். மேலும் "அண்ணாமலையார் தோத்திரப் பாமாலை", "அண்ணாமலையார் வெண்பா", "அண்ணாமலையார் அந்தாதி", "அண்ணாமலையார் துதி", "அண்ணாமலை கண்ணி" முதலான நூல்களையும் இயற்றினார்.

சீடர்கள்

ஈசான்ய ஞான தேசிகர், தம்மை நாடி வந்தவர்களில் தகுதியுடைவர்களுக்குத் தீட்சை அளித்து, தமது சீடராக ஏற்றுக் கொண்டார். தேசிகரது தலையாய சீடர்களுள் ஒருவராக விளங்கியவர் ஐடன் துரை. இவர் பிறப்பால் ஆங்கிலேயரானாலும் மனத்தால் இந்தியராக வாழ்ந்தவர். தன்னிடம் உள்ள நிலங்களையும், பெரும் சொத்துக்களையும் அருணாசலேசுவரர் ஆலயத்திற்கு அளித்ததுடன் பல உற்சவங்களையும் முன்னின்று நடத்தினார். அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்காக தம் சொந்தச் செலவில் பல்வேறு திருப்பணிகளை மேற் கொண்டார். வருடம் தவறாமல் அண்ணாமலையாரின் தீபத் திருவிழாவில் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்த ஐடன் துரை, அண்ணாமலையாரின் தேர்த் திருவிழாவினையும் மிக விமர்சையாக நடத்தி வந்தார்.

ஒரு சமயம், அண்ணாமலை தீபத்தைக் காண தனது குதிரையில் வந்து கொண்டிருந்தார் துரை. ஆனால் அப்போது பலத்த மழை பெய்திருந்ததால், அவர் வரும் வழியில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த ஆற்றைக் கடந்து தான் அண்ணாமலைக்குச் வர வேண்டும். ஆனால் பெருகிய வெள்ளத்தினால் ஆற்றைக் கடக்க இயலவில்லை. சற்று நேரம் யோசித்த ஐடன் துரை, 'சத்குரு நாதா, என் ஞானகுருவே நீயே உற்ற துணை!' என்று கூறிக்கொண்டே குதிரையுடன் ஆற்றில் இறங்கினார். அவருடன் வந்தவர்களோ பயந்து பின்வாங்கினர்.

அதே சமயம், தியானத்தில் ஆழ்ந்திருந்த ஈசான்ய ஞான தேசிகர் திடுக்கிட்டு தியானம் கலைந்து, தனது கையைச் சிறிது தென்புறமாகத் தாழ்த்திப் பின் உயர்த்தினார். அது கண்ட பக்தர்களில் சிலர் ஆச்சர்யத்துடன் அவரிடம் காரணத்தை வினவினர். தேசிகரோ அதற்கு, 'நம் அடியவர் ஆற்றில் விழுந்தால் நாமே காப்பாற்ற வேண்டுமாம்!' என்று கூறி விட்டு, மீண்டும் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.

சில மணி நேரம் சென்றது. ஆற்றில் இறங்கிய குதிரையும், ஐடன் துரையும் எந்த விதச் சேதமும் இல்லாமல் கரையேறினர். ஐடன் துரை, குருநாதரை தரிசித்து, அவர்தம் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். நடந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற பக்தர்கள் ஈசான்ய ஞான தேசிகரின் ஆற்றலையும், ஐடன் துரையின் குரு பக்தியையும் கண்டு வியந்தனர்.

ஈசான்ய ஞான தேசிகர் சமாதி

மகா சமாதி

ஈசான்ய ஞான தேசிகர், அண்ணாமலையை விட்டு வேறு எங்கும் செல்லாது அங்கேயே தொடர்ந்து தவம் செய்து வந்தார். அந்த இடம் மலையின் வடகிழக்குப் பகுதியில் இருந்ததாலும், அது ஈசான்ய திசையைக் குறிக்கும் இடமாக இருந்ததாலும், அப்பகுதி நாளடைவில் 'ஈசான்ய மடம்' என்று அழைக்கப்படுவதாயிற்று. தேசிகரும் 'ஈசான்ய ஞான தேசிகர்' என்று அழைக்கப்பட்டார். இவ்வாறு பல ஆண்டுகாலம் தவம் செய்த இம்மகான், 1829-ம் ஆண்டு, மார்கழி மாதம் 26-ம் நாள் மகா சமாதி அடைந்தார். அவரது உடல், அவர் எப்போதும் தவம் செய்து வந்த வில்வ மரத்தின் அடியிலேயே சமாதி செய்விக்கப் பெற்றது.

சமாதி அமைவிடம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையின் இறுதியில், ஈசான்ய லிங்கத்திற்கு எதிரில், அம்மணி அம்மாள் சமாதி ஆலயத்தை அடுத்துள்ள ஈசான்யக் குளக்கரையில் அமைந்துள்ளது ஈசான்ய தேசிகரின் சமாதி ஆலயம். ரமணர் உட்படப் பல மகான்களால் புகழப் பெற்றது ஈசான ஞான தேசிகர் மடம். அளவற்ற ஆன்ம அமைதியையும், அற்புத ஆற்றல்களையும் தரக் கூடியதாக அறியப்படுகிறது. பல மகான்களின் ஜீவ சமாதிகள் இங்கு அமைந்துள்ளன.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Oct-2025, 11:28:31 IST