இளந்தேவன்
இளந்தேவன் (இரா. முத்துராமலிங்கம்), (ஜூன் 25, 1946 - ஜூலை 11, 2017) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் சிறப்புப் பணி அலுவலராகப் பணிபுரிந்தார். தமிழரசு இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
இரா. முத்துராமலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர் இளந்தேவன், தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில், ஜூன் 25, 1946 அன்று, மு. இராமநாதபிள்ளை - அழகுத் தாய் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை கம்பத்தில் நிறைவு செய்தார். கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். ஆசிரியர் கல்வி பயிற்சி பெற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தி, வடமொழி ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.
தனி வாழ்க்கை
இளந்தேவன், சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி: சரசுவதி.
இலக்கிய வாழ்க்கை
இளந்தேவன் கவிஞராக இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். முதல் கவிதை 1968-ல் வெளிவந்தது. தொடர்ந்து பல கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். இதழ்களில் கவிதைகள் எழுதினார். இளந்தேவனின் கவிதைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகின. பக்திப் பாடல்கள் பலவற்றை எழுதிப் பதிப்பித்தார். பாரதி கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு பல கவியரங்குகளில் கவிதை வாசித்தார். கவிதைப் பட்டிமன்றம் என்பதை அறிமுகம் செய்தார். பாரதி கலைக்கழகத்தின் முதல் கவிதைப் பட்டிமன்றம் இராயப்பேட்டையில் இளந்தேவன் இல்லத்தில் நிகழ்ந்தது.
கவிஞர் இளந்தேவன் ஆயிரக்கணக்கான கவியரங்குகளைத் தலைமையேற்று நடத்தினார். வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பல கவியரங்குகளில் கலந்துகொண்டார். தமிழ்ச் சோலை, இளைய புயல்கள், தமிழ்வட்டம் போன்ற இலக்கிய அமைப்புகளை உருவாக்கினார். இளையோர்கள் பலரைக் கவிதை எழுத ஊக்குவித்தார். இலங்கை, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று கவிதை நிகழ்வுகளை நடத்தினார்.
இதழியல்
இளந்தேவன், தமிழரசு இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
திரைப்படம்
இளந்தேவன், திரைப்படங்கள் சிலவற்றிற்குப் பாடல்கள் எழுதினார். கதை விவாதங்களில் கலந்துகொண்டார்.
அரசியல்
இளந்தேவன், அ.இ. அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். உலகத் தமிழ் மாநாட்டில் எம்.ஜி.ஆர். முன்னிலையில், கண்ணதாசன் தலைமையில் வாசித்த கவிதையால் எம்.ஜி.ஆரின் நேரடி அறிமுகம் பெற்றார். எம்.ஜி.ஆரின் பரிந்துரையின் பேரில், மக்கள் தொடர்பு அலுவலராகப் பணி நியமனம் பெற்றார். செல்வி. ஜெ. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் அலுவலகத்தின் சிறப்பு அலுவலராகப் பணிபுரிந்தார். அரசின் கொள்கைகளை விளக்கும் பல கையேடுகளைத் தயாரித்தளித்தார்.
விருதுகள்
- 'புகாரில் ஒருநாள்' என்னும் கவிதை, 1968-ல் நிகழ்ந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் பரிசு பெற்றது
- 'கனவு மலர்கள்' கவிதைத் தொகுதிக்கு தமிழக அரசின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசு. (1982)
- தமிழக அரசின் பாரதிதாசன் விருது
- ராஜீவ்காந்தி விருது
- முத்தமிழ்ப் பேரவை விருது
- அகத்தியர் விருது
- இலக்கியச் செல்வர் பட்டம்
- கவித்தென்றல் பட்டம்
- பெருங்கவிமாமணி பட்டம்
- செந்தமிழ்ச் சித்தர் பட்டம்
- அருட்கவியரசர் பட்டம்
- கவிஞர் திலகம் பட்டம்
- சங்கத் தமிழ்ப் புலவன் பட்டம்
- தெய்வத் தமிழ்க் கவிஞர் பட்டம்
- இலக்கியச் சக்கரவர்த்தி பட்டம்
- பாரதி கலைக்கழகம் அளித்த கவிமாமணி பட்டம்
- கவியரசர் பட்டம்
மறைவு
இளந்தேவன், ஜூலை 11, 2017 அன்று காலமானார்.
மதிப்பீடு
"இதுதான் கவிதை; இவர்தான் கவிஞர்" எனக் கவியரசர் கண்ணதாசனால் பாராட்டப்பெற்றவர் கவிஞர் இளந்தேவன். "புதுக்கவிதையின் பொருளடர்த்தியை மரபில் புகுத்தியவர்களில் இவரும் ஒருவர். சொக்க வைக்கும் சொல்லாட்சி இளந்தேவன் கவிதைகளின் இன்னொரு சிறப்பம்சம்." என்று கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா மதிப்பிட்டார்.
நூல்கள்
- மூகாம்பிகையே முழுநிலவே
- கனவுப்பூக்கள்
- புயலின் மைந்தன்
- பொற்காலத் தலைவர்க்குப் பூங்குயில்கள் புகழ்ப்பாட்டு
- இளந்தேவன் கவிதைகள்
- தெய்வத்தமிழ்
- வெளிச்ச விரல்கள்
- வ. உ. சிதம்பரனார் வரலாறு
- இந்திப் பரணி
- கனவு மலர்கள்
- கடல் நடுவே ஒரு கண்ணீர்த்துளி
- உலாவரும் உருவகங்கள்
- மாருதி மாலை
- மருவத்தூர் அரசி
- வெளிச்ச விரல்கள்
- முகங்கள் முகவுரைகள்
- காற்றுக்குதிரை
- இவர்கள்
- நடக்கும் பறவைகள்
- தேவ மொழிகள்
- தேவ நிலாவுக்கு ஒரு தேவாரம்
- புதிதாய் ஒரு போதிமரம்
- ஒரு நதியின் மரணம்
மற்றும் பல
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Oct-2024, 18:14:05 IST