இரா பூபாலன்


இரா.பூபாலன் (இரா.பூபாலகிருஷ்ணமூர்த்தி)(பிறப்பு ஜூலை 22, 1983) தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர், இலக்கியச் செயற்பட்டாளர், இதழாசிரியர்.
பிறப்பு கல்வி
இரா.பூபாலன் ஜூலை 22, 1983 அன்று து.இராமசாமி, இரா.பத்மாவதி இணையருக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் பெத்தநாயக்கனூர் கிராமத்தில் பிறந்தார். சூலக்கல் கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது இயற்பெயர் இரா.பூபாலகிருஷ்ணமூர்த்தி.
தனி வாழ்க்கை
மனைவி பி.நாகரத்தினம் ஒரே மகள் பூ.தனிஷ்கா பாரதி. பூ. தனிஷ்கா பாரதியும் கவிஞராக அறியப்படுகிறார்.
இரா.பூபாலன் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
இரா.பூபாலன் எட்டாம் வகுப்பிலிருந்து பாரதி, பாரதிதாசன் மூலம் கவிதைகள் வாசிக்கத் தொடங்கினார்.
பூபாலன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பு, 'பொம்மைகளின் மொழி' எனும் தலைப்பில், 2010-ல் வெளியானது. இரண்டாம் தொகுப்பு 'பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு' (2014).
திரும்புதல் சாத்தியமற்ற பாதை', 'அரூபத்தின் வாசனை' தொகுப்புகளில் உள்ள கவிதைகள் காதலின் துயரத்தைப் பேசுன்றன. சமகாலப் பிரச்சினைகளைப் பேசும் கவிதைகளில் அரசாங்கங்கள் மக்கள் மீது செலுத்தும் வன்முறை மீதான கோபம் வெளிப்படுகிறது. தீ நுண்மிகளின் காலம்' பெருந்தொற்றுக் காலத்தைப் பேசுபொருளாகக் கொண்ட கவிதைத் தொகுப்பு.
ஏற்புகள்
சாகித்ய அகாதெமி சார்பில் டெல்லியில் நடந்த இளம் கவிஞர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு கவிதை வாசித்திருக்கிறார். இரா. பூபாலனின் கவிதைகளில் சில ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக்கப்பட்டிருக்கின்றன.
இரா.பூபாலனின் கவிதைகள் பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரி மற்றும் கேரளாவின் சித்தூர் அரசுக் கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் இடம்பெறுகின்றன. கேரளாவின் கோட்டயம் பல்கலைக்கழகத்தில் பூபாலனின் கட்டுரைகள் பாடத்திட்டத்தில் உள்ளன.
புன்னகை என்ற சிற்றிதழில் வெளியான அவரது கவிதை எழுத்தாளர் சுஜாதாவால் பாராட்டப் பட்டது[1].
இதழியல்
கொலுசு என்கிற இலக்கிய இதழின் பொறுப்பாசிரியராக இருக்கிறார். 'கருந்துளை' எனும் சிற்றிதழையும் நண்பர்களுடன் இணைந்து நடத்துகிறார்.
அமைப்புப் பணிகள்
இரா.பூபாலன் பொள்ளாச்சியில் நண்பர்களுடன் இணைந்து 'பொள்ளாச்சி இலக்கிய வட்டம்' என்ற இலக்கிய அமைப்பைத் துவங்கி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இலக்கிய சந்திப்புகளை ஒருங்கிணைக்கிறார்.
விருதுகள்
- உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் சிறந்த இளம் படைப்பாளர் விருது
- த.மு.எ.க.ச மாநில விருது,
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது,
- நாங்கள் இலக்கியகம்வழங்கியவிருது
- திருப்பூர்இலக்கியவிருது,
- செளமா இலக்கிய விருது,
- படைப்பு குழுமத்தின் சிறந்த நூலுக்கானவிருது
- படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருது
- தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் இளம் எழுத்தாளர் விருது,
- பூவரசி அமைப்பின் சிறந்த இலக்கிய செயல்பாட்டாளருக்கான விருது
- யூத் கிளப் இந்தியா அமைப்பின் சிறந்த இளம் எழுத்தாளர் விருது
- கோவை கொடிசியா புத்தகக்கண்காட்சி - சிறந்த இளம் படைப்பாளர்விருது 2024
- சேலம் எழுத்துக்களம் அமைப்பின் சிறந்த இலக்கியச்செயல்பாட்டாளருக்கான விருது 2024
இலக்கிய இடம்
பூபாலன் சமூகசீர்திருத்த நோக்கம் கொண்ட முற்போக்குக் கருத்துக்களை அனைவருக்குமான மொழியிலும் வடிவிலும் எழுதும் கவிஞர்.
நூல்கள்
- பொம்மைகளின் மொழி
- பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு
- ஆதிமுகத்தின் காலப்பிரதி
- தீ நுண்மிகளின் காலம்
- அரூபத்தின் வாசனை
- திரும்புதல் சாத்தியமற்ற பாதை
- ஹோ என்றொரு கவிதை
- நின் நெஞ்சு நேர்பவள்
உசாத்துணை
- பூபாலன் கவிதைகள்-நுட்பம் வலைத்தளம்
- இரா.பூபாலன் கவிதைகள்: தன்னை வெளியேற்ற முயலுதல் கனலி
- பூபாலன் கவிதைகள் வாசகசாலை
- இரா.பூபாலன் எழுதிய "ஹோ... என்றொரு கவிதை" - நூலறிமுகம் புக் டே
- அரூபத்தின் வாசனை - இரா.பூபாலன்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Aug-2025, 21:05:17 IST