under review

இராமதாசர் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
பள்ளிச் சின்னம்

இராமதாசர் தமிழ்ப்பள்ளி, மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜார்ச் டவுனில் இயங்கும் தமிழ்ப்பள்ளி. 1937-ம் ஆண்டு சுவாமி இராமதாசர் தொடங்கிய செந்தமிழ் பாடசாலை எனும் பள்ளியே பிற்காலத்தில் ரிவர் ரோட் (ஜாலான் சுங்கை) தமிழ்ப்பள்ளி என்ற பெயரில் இயங்கியது. 2021 முதல் இப்பள்ளி இராமதாசர் தமிழ்ப்பள்ளி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. 80 ஆண்டுகளாக இயங்கி வரும் பழமை வாய்ந்த இப்பள்ளியில் 112 மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளியின் பதிவு எண் PBD1086.

வரலாறு

மே 7, 1937-ல் சுவாமி இராமதாசர் பினாங்கு கொந்தாங் சாலையில் இருந்த வேளாள சங்கக் கட்டிடத்தின் கீழ்க்கடையில் செந்தமிழ் பாடசாலை என்ற பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார். நகரசபை ஊழியர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி போதிக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட அப்பள்ளியில் 19 மாணவர்கள் முதலில் சேர்ந்தனர். அப்பள்ளி நாளடைவில் சிறுவர்களுடன் இளைஞர்களும் பெரியவர்களும் இணைந்து யாப்பிலக்கியம், நீதிநூல்கள், சமூக சிந்தனை, நுண்கலைகள் போன்ற பல்வேறு துறைகளைப் பயிலும் கல்விக்கூடமாக வளர்ந்தது.

அதிகமான மாணவர்கள் கல்வி பயில வந்ததால் சுவாமி ராமதாசர் செப்டம்பர் 7,1939 அன்று செந்தமிழ் பாடசாலையை பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளியாகவும் செந்தமிழ் கலாசாலை என்ற பள்ளியை பன்னிரெண்டு வயதுக்கு மேலானவர்கள் பயிலும் பள்ளியாகவும் பிரித்தார்.

1943-ல் இராமதாசர் பினாங்கு ராஜமாரியம்மன் ஆலயத்தைப் புதுப்பித்து புதிய பாடசாலையை அமைத்தார். 'இளந்தமிழ் பாடசாலை', 'செந்தமிழ் கலாநிலையம்' என்ற இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். இளந்தமிழ் பாடசாலை சிறுவர்களுக்கான பள்ளியாக செயல்பட்டது. 1946-ல் ராஜமாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த காலி இடத்தில் இளந்தமிழ் பாடசாலை மாணவர்களுக்கான ஒரு பள்ளியைக் கட்ட அரசாங்கத்திடம் விண்ணப்பம் வைத்தார். சீனத் தொழிலாளர் சங்கத்தின் ஆதரவால் அவரது விண்ணப்பம் வெற்றி பெற்றது. அத்தாப்புக் (ஒருவகை ஓலை)கூரைக் கட்டிடமாக இருந்த அந்தப் பள்ளியை மேலும் மேம்படுத்த சுவாமி இராமதாசர் வைத்த விண்ணப்பத்தை ஏற்று அரசாங்கம் ரிவர் சாலையில் இடம் ஒதுக்கியது. ஆகவே 1948-ம் ஆண்டில் சுவாமி ராமதாசர் 180 மாணவர்களுடன் இளந்தமிழ் பாடசாலையை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். புதிய இடத்தில், இளந்தமிழ் பாடசாலை, 'அரசாங்கத் தமிழ்ப்பள்ளி' என்று பெயர் மாற்றங்கண்டது. 1948-ல் அரசாங்கத் தமிழ்ப்பள்ளி என்ற பெயருடன் புதிய கட்டிடத்தில் தொடங்கிய பள்ளி பின்னர் ரிவர் ரோட் தமிழ்ப்பள்ளி என்ற பெயரிலும் ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி என்ற பெயரிலும் இயங்கியது.

உருமாற்றம்

இராமதாசர் தமிழ்ப்பள்ளி.png

1948-ம் ஆண்டு அரசாங்கம் அமைத்த கட்டிடம் 2003-ம் ஆண்டு முழுமையாகச் சீரமைக்கப்பட்டு நான்கு மாடி புதிய கட்டிடமாக மாற்றப்பட்டதுடன் பல்நோக்கு மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டது.

2020-ம் ஆண்டு முத்தமிழ்ப் புலவர் இராமதாசர் மன்றத் தலைவர் பெ. க நாராயணனும் அவர் குழுவினரும் பள்ளியின் பெயரை மாற்றும் திட்டத்தை முன் மொழிந்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டனர். பள்ளி வாரியக்குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், மாநில அரசியல் தலைவர்கள் ஆதரவுடன் கல்வி அமைச்சின் இணக்கம் கிடைக்கப்பெற்றது. ஜூன் 28, 2021 முதல் இப்பள்ளி இராமதாசர் தமிழ்ப்பள்ளி என்ற பெயரில் இயங்கி வருகின்றது.

தலைமையாசிரியர் பட்டியல்

திரு. வீ. சாமுவல் 1947 - 1960
திரு. அகமது பின் மீரா ஹுசைன் 1960 - 1984
திரு பெருமாளு த/பெ மாரியப்பன் 1984 - 1990
திரு. நடராஜா த/பெ தண்ணிமலை 1990 - 1990
திரு. மு.நா. குப்புசாமி 1994 - 1994
திருமதி மரியாபுஸ்பம் த/பெ சில்வமுத்து 1995 - 2002
திரு சுப்பையா த/பெ பீராகன் 2002 – 2004
திருமதி. அம்பிகாபதி த/பெ முனியாண்டி 1999 - 2005
திரு. மோகன் த/பெ பெருமாள் 2010 – 2011
திரு. மகேந்திர குமார் த/பெ அ. பூக்காரு 2011- 2016
திருமதி அஞ்சலை தேவி 2017- 2020
திருமதி பத்மாவதி 2021-2022
திருமதி பத்மலோஷினி த/பெ சுப்ரமணியம் 2023-

பள்ளி முகவரி

Sekolah Jenis Kebangsaan (T) Jalan Sungai ( SJKT Ramathasar)

Jalan Sungai, Pulau Pinang

10150, Georgetown

Pulau Pinang, Malaysia.

உசாத்துணை

  • முதுதமிழ் பெரும்புலவர் தவத்திரு சுவாமி இராமதாசர் - கமலாட்சி ஆறுமுகம்
  • SJKT di Pulau Pinang


✅Finalised Page