under review

இராதா செல்லப்பன்

From Tamil Wiki
இராதா செல்லப்பன்
இராதா செல்லப்பன்

இராதா செல்லப்பன் தமிழ் ஆய்வாளர், ஆசிரியர். கணினிக் கலைச்சொல் அகராதி நூலை எழுதினார். கணினித்தமிழுக்கு பங்களிப்பு செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

இராதா செல்லப்பன் எஸ். வையாபுரிப்பிள்ளையின் மகள் வழி பேர்த்தி. இராதா செல்லப்பனின் தாய் தங்கம்மாள். இராதாமொழியியலிலும் தமிழிலும் முதுகலைப்பட்டம் பெற்றார். 1982-ல் 'அறிவியல் தமிழாக்கம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். முதன் முதலில் அறிவியல் தமிழுக்கான ஆராய்ச்சி பட்டம் பெற்றவர் இராதா. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் டி.லிட் பட்டத்திற்கான ஆய்வேட்டை 'அறிவியல் தமிழ் கலைச் சொற்களின் கருத்தமைவு பற்றிய வரலாற்றாய்வு' என்ற தலைப்பில் அளித்தார்.

ஆசிரியப்பணி

இராதா அன்னை தெரெசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன் தமிழாய்வுத்துறையின் தலைவராக இருந்தார்.

ஆய்வுப்பணி

இராதா கோவை பூ.கா.கோ அறநிலைய வெளியீடான கலைச்சொல்லகராதித்(1985) தொகுதிகளின் தொகுப்பாசிரியர் குழுவில் ஒருவர். கலைச்சொல்லாக்க முயற்சி தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உருவாக்கப்பட்ட கலைச்சொல் தொகுப்புகளின் பட்டியலும், அவற்றில் இடம் பெற்றுள்ள சொற்களின் எண்ணிக்கையும் கொண்ட கட்டுரை ஒன்றை 'கலைச்சொல்லாக்க முயற்சி இதுவரை' என்ற தலைப்பில் இராதா செல்லப்பன் எழுதினார். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களின் சான்றாதாரங்களுடன் 'கலைச்சொல்லாக்கம்' என்ற நூலை முன்னோடித் தமிழ் அறிஞர்களின் கருத்துக்களை ஆராய்ந்து எழுதினார். இராதா செல்லப்பன் 'கணினிக் கலைச்சொல் அகராதி' என்ற நூலை எழுதினார். 'இயந்திரவியல் இயந்திரப் பொறியியல் கலைச்சொற்கள்', 'மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள்' நூல்களை எழுதினார்.

தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்

இராதா செல்லப்பன் பல ஆய்வு மாணவர்களுக்குக் கணிப்பொறி அறிவின் தாக்கத்தை ஏற்படுத்தினார். உத்தமம் குழுவில் உறுப்பினராக பல ஆண்டு காலம் பணியாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக இணையப்பக்கத்தில் தமிழ் ஓலைச்சுவடிகளைத் தொகுத்தும் வெளியிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

இராதா செல்லப்பன் 'கணிப்பொறியும் தமிழும்', 'ஆய்வு நெறியும் வையாபுரியும்' போன்ற நூல்களை எழுதினார். அறிவியல் தமிழ் தொடர்பான பல கட்டுரைகள் எழுதினார். தன் தாயார் எழுதிய “என் தந்தையார் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை” என்ற நூலை பதிப்பித்தார்.

விருது

  • இராதா செல்லப்பனின் கட்டுரைகள் தமிழகப் புலவர்கள் குழு, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பரிசுகளைப் பெற்றன
  • 1991-ல் இராதா செல்லப்பனின் அறிவியல் தமிழ் பணிக்காக அண்ணா பல்கலைக்கழகம் பரிசளித்தது

நூல் பட்டியல்

  • கலைச்சொல்லாக்கம் (1985)
  • ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி (1985)
  • ஆய்வு நெறியும் வையாபுரியும் (1991)
  • கலைச் சொல்லியல்
  • கணினிக் கலைச்சொல் அகராதி
  • கணிப்பொறியும் தமிழும்
  • இயந்திரவியல் இயந்திரப் பொறியியல் கலைச்சொற்கள்
  • மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை கலைச்சொற்கள்
  • அறிவியல் தமிழ் இன்றைய நிலை

உசாத்துணை


✅Finalised Page