under review

இராஜம் புஷ்பவனம்

From Tamil Wiki
இராஜம் புஷ்பவனமும் தங்கைகளும்

இராஜம் புஷ்பவனம் (1944 - 1994) ஈழத்துப் பெண் எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், வில்லிசைக்கலைஞர். நாடக நடிகர், நாடகங்கள் அரங்காற்றுகை செய்த ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

இராஜம் புஷ்பவனம் இலங்கை கொழும்பில் 1944-ல் பிறந்தார். கொழும்பு வெள்ளவத்தை சைவமங்கையர் கழகத்தில் கல்வி கற்றார். தந்தையின் தொழில் இடமாற்றம் காரணமாக திருகோணமலையிலும் அடம்பனிலும் (மன்னார்) கல்வி கற்றார். ஆன்மீகத்துறையிலும், ஜோதிட துறையிலும் ஈடுபாடு உள்ளவர். 'வில்லிசை வேந்தர்' என அழைக்கப்படும் லடீஸ் வீரமணி அவர்களிடம் முறைப்படி வில்லிசை கற்ற வில்லசைக் கலைஞர். கேலிச்சித்திரம், எப்பிரய்டரி தையல்கலை, கவிதை, சிறுகதை, நாடகம், ஒப்பனைக் கலைஞர், வானொலி, மெல்லிசை என இவர் பல துறைகளில் ஆர்வம் உடையவர்.

இதழியல்

இராஜம் புஷ்பவனம் 'பொது ஜன ஹண்ட' (மக்கள்குரல்) பத்திரிகையின் தமிழ்ப் பகுதியின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

நாடக வாழ்க்கை

இராஜம் புஷ்பவனம் நாடகங்களை எழுதி நடித்தார். சரித்திர நாடகங்கள், நகைச்சுவை சமூக நாடகங்கள் போன்றவற்றையும் மன்னார், அடம்பன் மற்றும் அயல் கிராமங்களிலும் மேடையேற்றினார். மன்னார் மாவட்டத்தில் முதன்முதலாகப் பெண்களை மட்டும் வைத்து பல நாடகங்களை நெறியாள்கை செய்து மேடையேற்றினார். இவரின் 'புதையல் கிடைத்து', 'லக்ஸ்பிரே மாப்பிள்ளை', 'யவனராணி' போன்ற நாடங்கள் 20 முறைக்கு மேல் மேடையேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரை வாழ்க்கை

1975-ம் ஆண்டு ஹென்றி சந்திரவன்ச நெறியாள்கை செய்த சிங்களப் படத்தின் தமிழ் பதிப்பான 'சுமதி எங்கே' படத்தின் வசன கர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் இவர் இருந்தார். 'ஹார லக்ஷய' என்ற திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்த போது அப்படத்தின் பாடல்களை தமிழில் மொழிமாற்றம் செய்து கொடுத்தார். இப்படத்தின் உதவி இயக்குனராகச் செயற்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

இராஜம் புஷ்பவனம் தனது 14-ம் வயதில் வீரகேசரி சிறுவர் பகுதியில் 'அமாவாசைப் பேய்' என்ற கதையை எழுதினார். வீரகேசரி, தினகரன், தினபதி, உதயசூரியன் ஆகிய பத்திரிகைளில் கவிதை, சிறுகதைகளை எழுதினார். சிற்றிதழ்களான 'கலைச்செல்வி', கற்பகம்', 'கதிரவன்', 'மலர்' என்பவற்றிலும் சிறுகதைகள் கவிதைகளை எழுதினார். இவர் எழுதிய பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் பெருமளவு வெளிவந்துள்ளது. ஆனால் பெரிதாக நூல் வடிவில் வரவில்லை. வில்லிசையின்பால் கொண்ட தீவிர ஈடுபாட்டால் பிற்காலத்தில் 'வில் பிறந்த கதை"'என்னும் நூலை வெளிட்டார். எதுகை மோனை உடன் கவிதைகள் எழுதிவார்.

மறைவு

இராஜம் புஷ்பவனம் 1994-ல் காலமானார்.

அரங்காற்றிய நாடகங்கள்

  • புதையல் கிடைத்து
  • லக்ஸ்பிரே மாப்பிள்ளை
  • யவனராணி

நூல் பட்டியல்

  • வில் பிறந்த கதை
  • பல்கலைச்செல்வி" இராஜம் புஷ்வனம்

உசாத்துணை


✅Finalised Page