under review

இரவுத் தலைச்சேறல்(பெருந்திணை)

From Tamil Wiki

புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட பெண்ணொருத்தி இரவிலே தலைவனைக் காணப் புறப்படுதலைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தலைவனைக் காணவேண்டுமென்ற ஆசையால் இருள் செறிந்த நள்ளிரவில் மென்மையான இவள் தன் வீட்டினின்றும் புறப்படுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

காண்டல் வேட்கையொடு கனைஇருள் நடுநாள்
மாண்ட சாயல் மனை இரந்தன்று(கொளு 16.6)

வெண்பா

பணையாய் அறை முழங்கும் பாய் அருவி நாடன்
பிணை ஆர மார்பம் பிணையத் - துணையாய்க்
கழிகாமம் உய்ப்பக் கனைஇருள்கண் செல்கேன்
வழி காண மின்னுக வான் (311)

பொருள்: முரசு கொட்டுவது போல அருவி பாறையில் மோதி ஒலிக்கும் நாடனுடைய மார்பினைத் தழுவ என் ஆசையே துணையாகக் கொண்டு இருளில் செல்கிறேன்; எனக்கு வெளிச்சம் தரும் வகையில் மேகம் மின்னட்டும்!

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jul-2025, 21:02:25 IST