under review

இயமம்

From Tamil Wiki

இயமம் திருமூலர் குறிப்பிடும் அஷ்ட யோகங்களில் ஒன்று. சித்தர்கள் அஷ்டமா சித்திகளைப் பெற இவற்றைக் கடைப்பிடிக்கின்றனர்.

இயமங்கள்

இயமங்கள் என்பவை ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பதைக் குறிக்கின்றன. எது செய்யக்கூடாது என்பதைப் பற்றி இயமங்கள் கூறுகின்றன. இயமம் தீயவற்றிலிருந்து விலகி இருப்பதைக் குறிக்கிறது.

சாண்டில்ய மற்றும் வராக உபநிடதங்கள், திருமூலரின் திருமந்திரம் ஆகியவை பத்து இயமங்களையும், பதஞ்சலி முனிவரின் "யோகசூத்திரம்" நூல் ஐந்து இயமங்களையும் முன்வைக்கின்றன. திருமந்திரத்தில் இயமத்தின் முக்கியத்துவம் சொல்லப்பட்டுள்ளது

பாடல்
  • பாடல் 553 (மூன்றாம் தந்திரம் - 2) இயமம்

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே

விளக்கம்: பவளம் போல் ஜொலிக்கும் குளிர்ந்த சடையுடைய இறைவனை முழுமையாக உணர்ந்த சனகர், சதானந்தர், சனாநந்தர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நால்வர்களுக்கும் "எட்டுத்திசையிலும் சூழ்ந்து மூழ்கும் அளவிற்கு பெருமழை பெய்தாலும் செழுமையான குளிர்ந்த இயமங்களை தவறாமல் செய்யுங்கள்" என்று இறைவன் உபதேசித்தார்.

பாடல்
  • பாடல் 554

கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே

விளக்கம்: இயமம் என்பது தீயவற்றைச் செய்யாமல் விடுதல். இது யோக வழியின் முதல் நிலை. உயிரைக்கொல்லாமல் இருத்தல், பொய் சொல்லாமல் இருத்தல், பிறரை மதித்தல், அடக்கமாக இருத்தல், நடுவு நிலையில் நிற்றல், தன்பொருளை பகிர்ந்து தரல் முதலியவற்றைக் கைகொள்பவர், குற்றம் இல்லாதவர், கள், காமம் தவிர்த்தவர் இயமத்தை மேற்கொள்பவர்.

இயமங்கள் வகை

ஐந்து இயமங்கள்

பதஞ்சலி முனிவர் தன் யோக சூத்திரம் 2.30-ல் குறிப்பிடும் இயமங்கள்

  • கொல்லாமை (அகிம்சை): பிறவுயிர்களைத் துன்புறுத்தாமை.
  • வாய்மை (சத்யம்): உண்மையைக் கடைப்பிடித்தல்
  • கள்ளாமை (அஸ்தேய): களவு செய்யாமை
  • காமம் கடத்தல் (பிரம்மச்சர்யம்): துணைக்கு துரோகம் இழைக்காமை
  • அவாவறுத்தல்: பேராசையை அடக்குதல் தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை
பத்து இயமங்கள்

சாண்டில்ய உபநிடதம், சுவாத்மாராமம் ஆகிய நூல்களில் பத்து இயமங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • கொல்லாமை: அகிம்சை
  • வாய்மை: சத்யம்
  • கள்ளாமை: அஸ்தேயம்
  • புலனடக்கம்: பிரம்மச்சர்யம்
  • பொறையுடைமை: க்ஷமை - மன்னிக்கும் தன்மை
  • வெஃகாமை: பேராசையை அடக்குதல், தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை
  • வஞ்சனையின்மை: த்ருதி - திடமான மனது
  • இரக்கம்: கருணை
  • நேர்மை: (ஆர்ஜவம்) - பாசாங்கு இல்லாமை
  • அளவுணவு: மிதாகாரம் - போதுமான உணவு
  • தூய்மை: சௌச்சம், புனிதம் பேணல்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jul-2025, 18:22:06 IST