under review

இன்னொரு பட்டாம்பூச்சி

From Tamil Wiki

To read the article in English: Innoru Pattampoochi. ‎

இன்னொரு பட்டாம்பூச்சி
இன்னொரு பட்டாம்பூச்சி,1983 குமுதம். ஓவியம் ஜெயராஜ்

இன்னொரு பட்டாம்பூச்சி (1983) ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கம் செய்த நாவல். பெலிக்ஸ் மிலானி (Felix Milani) எழுதிய தி கான்விக்ட் (The Convict) என்னும் நாவலின் தமிழ் வடிவம்.

எழுத்து, வெளியீடு

1972-ல் ரா.கி.ரங்கராஜன் ஹென்றி ஷாரியர் எழுதிய பாப்பில்யான் என்னும் நாவலை பட்டாம்பூச்சி என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்தார். அந்நாவல் பெரும்புகழ்பெற்ற ஒன்று. 1983-ல் அதேசாயல் உள்ள பெலிக்ஸ் மிலானி எழுதிய 'தி கான்விக்ட்' என்னும் நாவலை இன்னொரு பட்டாம்பூச்சி என்னும் பெயரில் மொழியாக்கம் செய்து குமுதம் இதழில் வெளியிட்டார். பட்டாம்பூச்சி போலவே இதற்கும் ஜெயராஜ் அதே பாணியில் ஓவியம் வரைந்தார். ஆனால் இரண்டாம் மொழியாக்க நாவலான இன்னொரு பட்டாம்பூச்சி வெற்றிபெறவில்லை

ஆசிரியர்

பெலிக்ஸ் மிலானி பிரெஞ்சு கைதி. பிரெஞ்சு கயானாவுக்கு கைதியாக அனுப்பப்படுகிறார். செய்யாத குற்றத்துக்கு தண்டிக்கப்பட்டதாகச் சொல்லும் பெலிக்ஸ் ஆறுமுறை தப்பமுயன்று இறுதியாக தப்புகிறார். பாப்பில்யான் நாவலின் ஹென்றி ஷாரியரைப் போலவே டெவில்ஸ் ஐலண்டில் காவல் வைக்கப்பட்டு அங்கிருந்து தப்பினார்.

நூல்

பெலிக்ஸ் மிலானியின் கான்விக்ட் தன் வரலாற்றுத்தன்மை கொண்ட நாவல். ஆனால் பெரிதும் புனைவுத்தன்மை கொண்டது என ஆய்வாளர்களால் பின்னர் நிறுவப்பட்டது. பாப்பில்யான் அடைந்த வெற்றியை தொடர்ந்து இந்நாவலை பெலிக்ஸ் 1977-ல் எழுதினார். இது மிலானியால் இத்தாலிய மொழியில் எழுதப்பட்டு பின்னர் பிரெஞ்சுக்கும் ஆங்கிலத்துக்கும் மொழியாக்கம் செய்யப்பட்டது. அனிடா பரோஸ் (Anita Barrows) ஆங்கில மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலம் வழி தமிழில் ரா.கி.ரங்கராஜனால் மொழியாக்கம் செய்யப்பட்டது.

இலக்கிய இடம்

இன்னொரு பட்டாம்பூச்சி கதையோட்டத்தை மட்டுமே பின்பற்றி செல்லும் தழுவல் மொழியாக்கம். மூல நூல் அதன் முன்னுதாரணமான பாப்பில்யான் அளவுக்கு ஆழமானது அல்ல. ஆகவே மொழியாக்கத்திலும் இலக்கிய ரீதியாக கவனிக்கப்படவில்லை. ஹென்றி ஷாரியர் உண்மையில் டெவில்ஸ் ஐலண்டில் இருக்கவில்லை என்றும், அங்கே சிறைப்பட்டிருந்து மெய்யாகவே தப்பியவர் பெலிக்ஸ் தான் என்றும் ஆய்வாளர் கருதுகிறார்கள்

உசாத்துணை


✅Finalised Page