under review

இடையார்பாக்கம் ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில்

From Tamil Wiki
இடையார்பாக்கம் கோவில் முகப்பு

இடையார்பாக்கம் ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முதலாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் சோளேந்திர சிங்க ஆசாரியன் எனும் சிற்பியால் கட்டப்பட்டது.

அறிமுகம்

இக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம் இடையார்பாக்கம் எனும் ஊரில் அமைந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்து கற்றளி. இறைவன் மகாதேவர். தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அமைவிடம், ஊர் பெயர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் தக்கோலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கல்வெட்டுகளில் இவ்வூர் இடையாற்றுப்பாக்கம் என்றும் இராஜவிஜாதிர சதுர்வேதி மங்கலம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

சோழர் ஆட்சிகாலத்தில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் 'மணயிற் கோட்டத்துப் புரிசை நாட்டின்' ஒரு பகுதியாக இருந்தது.

தெய்வங்கள்

மூலவர்: மகாதேவர். கல்வெட்டுகளில் 'திருப்படக்காடுடைய மகாதேவர்' மற்றும் 'ஆளுடையார் திருப்படக்காடுடையார்' என்று அழைக்கப்படுகிறார்.

விஷ்ணு: அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம்.

கோவில் பற்றி

இக்கோவில் 11-ம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்ட கற்றளி. மேலும், இதை சந்திரசேகரன் இரவி என்கிற சோளேந்திரசிங்க ஆசாரியன் என்பவர் எடுப்பித்துள்ளார். எதிரே அமைந்துள்ள தாமரைக்குளம் இத்தல தீர்த்தமாகக் கருதப்படுகிறது. தல புராணம், இலக்கிய குறிப்புகள் சார்ந்த தகவல்கள் இல்லை.

கோவில் கட்டிடக்கலை அமைப்பு

முழுதும் கருங்கற்களால் எழுப்பப்பட்ட கற்றளி. கிழக்கு முகமாக அமைந்துள்ளது. விமானம், கருவறை, அர்த்த மண்டபம் கொண்டுள்ளது. அர்த்த மண்டப வாயிலருகே இறைவனை நோக்கிய இடபமும், பலிபீடமும் அமைந்துள்ளன. வளாகத்தில் சமீபத்திய நவக்கிரக மண்டபம் உள்ளது. அரசமரத்தடியில் பழமையான விநாயகர் சிற்பமும் ஒன்று உள்ளது.

கருவறை

அரைவட்ட வடிவில் உள்ளது. மகாதேவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பீடம் சதுரமாக உள்ளது. அருகே அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிற்பம் உள்ளது.

அர்த்த மண்டபம்

விமானத்தின் நீட்சியாக அதிஷ்டானம் முதல் பிரஸ்தாரம் வரை உள்ளது. முகப்பில் துவாரபாலகர்களுக்கான கோஷ்ட அமைப்பு உள்ளது. துவாரபாலகர்களின் சிற்பங்கள் இல்லை. இதன் வடக்கு பகுதியில் உள்ள பூதகணங்களின் வரிசையில், நடுவே பஞ்சதந்திர கதைக் காட்சி உள்ளது. இரு அன்னப்பறவைகள் ஒரு குச்சியின் இரு முனைகளையும் அலகால் பிடித்துக் கொண்டு பறக்க, நடுவே ஒரு ஆமை அந்தக் குச்சியை வாயால் கவ்வி அவற்றோடு பறக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கோவில் விமானம்

விமானம்

கஜபிருஷ்ட விமானமாக அமைந்துள்ளது. அதிஷ்டானம் முதல் கிரீவம் வரை உள்ளது. சிகரப் பகுதி தற்போது இல்லை.

அதிஷ்டானப் பகுதி உபானம், பத்மம், கம்பு, ஜகதி, திரிபட்டை குமுதம், கண்டம், பட்டிகை, கண்டம், வேதிகை கொண்டுள்ளது. பாதபந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்படுகிறது. பாதவர்க்கப் பகுதி பிரம்மகாந்தத் தூண்களும் பத்ர கோஷ்டங்களும் கொண்டுள்ளது. தூண்களின் கலசம், ஆமலகம், இதழ் பகுதிகளில் கருக்கணிகள் மற்றும் மலர் அலங்காரம் செதுக்கப்பட்டுள்ளன. கோஷ்டங்கள் இரு அரைத்தூண்கள் மற்றும் மகர தோரண அமைப்புடன் உள்ளன.

பிரஸ்தாரப் பகுதியில் நாசிகைகள் கொண்ட கபோதம் உள்ளது. வலபி, வாஜன பகுதியில் இசைத்தும் நடனமிட்டும் பூதகணங்கள் உள்ளன. மேலே வியாளவரி உள்ளது.

ஹாரப் பகுதியில் சுற்றி கர்ணகூடங்கள், நேத்ர நாசிகைகள் மற்றும் சாலை அமைப்புகள் உள்ளன. அனைத்து சாலை அமைப்புகளும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. பத்ர கோஷ்டங்கள் சாலை அமைப்புகளுடன் இணைந்துள்ளன.

கிரீவப் பகுதியில் நாசிகைகள் கொண்ட கபோதம் உள்ளது. வலபி வாஜன பகுதியில் பூத வரி உள்ளது. மேலே வியாளவரி கொண்டுள்ளது.

பாதவர்க்க கோஷ்ட சிற்பங்கள்

விநாயகர்

தெற்கு முகமாக பத்ம பீடத்தில் லலிதாசனத்தில் அமர்ந்துள்ளார். கரண்ட மகுடம் தரித்துள்ளார். கரங்களில் மழு, பாசம், உடைந்த தந்தம் ஏந்தியுள்ளார். தும்பிக்கை இடது கரத்தில் உள்ள மோதகத்தை எடுக்க விழைகிறது. அரும்புச்சரம், பூணூல், நாக உதரபந்தம் அணிந்துள்ளார். இருபக்கம் சாமரமும் மேலே குடையும் உள்ளது. பின்னணியில் பிரபை காட்டப்பட்டுள்ளது.

ஆலமர் செல்வன்

ஆலமர் செல்வன்

தெற்கு முகமாக வீராசனத்தில் கல்லால மரத்தடியில் அமர்ந்துள்ளார். வலது கால் முயலகனை அழுத்தியபடி உள்ளது. ஜடாபாரம் தரித்துள்ளார். கரங்களில் அக்கமாலை, சுடர், சுவடி ஏந்தியுள்ளார். வியாக்கியான ஹஸ்தம் பிடித்துள்ளார். பத்ர குண்டலம், மகரகுழை, கண்டிகை, அரும்புச்சரம், பூணூல், வாகுமாலை, தோள்மாலை, தோள்வளை, கைவளை அணிந்துள்ளார். கீழே இரு முனிவர்கள் காட்டப்பட்டுள்ளனர். கல்லாலமரத்தின் கிளையில் துணிப்பை தொங்குகிறது. மத்தியில் இரு கூகைகள் காட்டப்பட்டுள்ளன.

நான்முகன்

வடக்கு முகமாக சமபாத ஸ்தானகத்தில் நிற்கிறார். ஜடாமகுடம் தரித்துள்ளார். கரங்களில் அக்கமாலை, குண்டிகை ஏந்தியுள்ளார். கீழ் கரங்களில் ஒன்று சிதைந்துள்ளது. மற்றொன்று ஊரு ஹஸ்தத்தில் உள்ளது. கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம், தோள்வளை, கடகவளை, கைவளை, பூணூல், உதரபந்தம், உரஸ் சூத்திரம், ஸ்தன சூத்திரம், அரைப்பட்டிகை, தாரகைச்சும்மை, குரங்குசெறி அணிந்துள்ளார். பட்டாடை உடுத்தியுள்ளார்.

கொற்றவை

கொற்றவை

வடக்கு முகமாக வைதஸ்திக ஸ்தானகத்தில் நிற்கிறார். கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளார். கீழ் கரங்களில் ஒன்று சிதைந்துள்ளது. மற்றொன்று ஊரு ஹஸ்தத்தில் உள்ளது. கரண்ட மகுடம் தரித்துள்ளார். கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம், தோள்வளை, கைவளை, சன்ன வீரம், அரைப்பட்டிகை, தாரகைச்சும்மை அணிந்துள்ளார். பட்டாடை உடுத்தியுள்ளார்.

மேற்குக் கோஷ்டத்தில் மட்டும் சிற்பங்கள் இல்லை.

கல்வெட்டுகள்

  1. முதலாம் குலோத்துங்க சோழன், ஆட்சி ஆண்டு - 13(கி.பி. 1083): ஆரூர் உடையான் வைத்தியநாதன் திருச்சிற்றம்பலம் உடையான் என்பவன் இக்கோவிலுக்கு இவ்வூரார் வசம் நிலம் ஒன்றினை வாங்கித் தேவதானமாக அளித்துள்ளான்.
  2. முதலாம் குலோத்துங்க சோழன், ஆட்சி ஆண்டு - 37(கி.பி. 1107 ): முதலாம் குலோத்துங்க சோழன் இக்கோவிலுக்கு இரு நந்தாவிளக்குகளை அளித்த செய்தியைக் கூறுகிறது.
  3. முதலாம் குலோத்துங்க சோழன், ஆட்சி ஆண்டு - 37(கி.பி. 1107): இக்கோவிலுக்கு ஒரு நந்தாவிளக்கெரிக்க, அரசூர் கிழவன் வேலன் மதுராந்தகன் என்பவனிடமிருந்து 95 ஆடுகள் பெற்றுக்கொண்டு தினம் ஓர் உழக்கு நெய்யினை அளிக்க பங்கியஞ்சியன் என்பவன் உறுதியளித்துள்ளான். மேலும் சந்திரசேகரன் இரவி என்கிற சோளேந்திர சிங்க ஆசாரியன் எனும் சிற்பி, முதலாம் குலோத்துங்கனின் ஆணையின் பேரில் இக்கோவிலை எடுப்பித்த செய்தியையும் கூறுகிறது.
  4. இரண்டாம் குலோத்துங்க சோழன், ஆட்சி ஆண்டு - 12(கி.பி. 1145): இக்கோவிலுக்கு முக்காற்பங்கு நந்தா விளக்கு எரிப்பதற்கு அருளாளபட்டனின் மகள் ஆண்டமை சாநி என்பவள் ஆடு வாங்க முப்பது காசு அளித்தாள். ஆனால் இடையர்கள் மறுத்துவிட அக்காசில் புரசை ஊரில் இரண்டாயிரம் குழி நிலத்தை வாங்கி இறையிலியாக அளித்துள்ளாள்.
  5. இரண்டாம் இராஜாதிராஜன், ஆட்சி ஆண்டு - 11(கி.பி. 1174): அருளாளபட்டனின் மகள் ஆண்டமை சாநி என்பவள் முன்பு முக்காற்பங்கு நந்தா விளக்கு எரிப்பதற்கு திருநந்தாவிளக்குப் பட்டியாக ஒரு வேலி நிலம் அளித்திருந்தாள். அந்நிலத்தில் நீர் வரத்து இல்லாததால் நெடுங்காலம் பயிரிடப்படாமல் கிடந்தது. தொடர்ந்து விளக்கேற்றவும் இயலவில்லை. ஆகையால் இதற்கு மாற்று ஏற்பாடாக புரசை நாட்டு ஊரார் அந்நிலத்தை மீண்டும் தாமே பெற்றுக் கொண்டு பசுக்களை அளிக்க அவள் கேட்டுக்கொண்டபடிக்கு சம்மதித்துள்ளனர்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

] ‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Sep-2026, 20:17:48 IST