ஆர். மாணிக்கம்
ஆர். மாணிக்கம் (பிறப்பு: 1951) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார். வெண்பாக்கம் வெங்கடேஸ்வரா நாடக மன்றத்தின் வாத்தியார் (ஆசான்). தெற்கத்தி பாணி கூத்தைச் சேர்ந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆர். மாணிக்கம் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் அரக்கோணத்திலுள்ள சித்தஞ்சி என்ற ஊரில் ராமலிங்க கவுண்டருக்கு மகனாக 1951-ல் பிறந்தார். தந்தை கூத்துக் கலைஞர். ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். கூத்து இல்லாத சமயத்தில் விவசாயம் செய்து வருபவர்.
கலை வாழ்க்கை
ஆர். மாணிக்கம் ஆரம்பகாலத்தில் ராமலிங்க கவுண்டரிடம் கூத்து பயின்றார். 16 முதல் 25 வயது வரை அய்யலு நாயுடுவிடம் கூத்து பயின்றார். பின்னர் தாண்டவராய மூர்த்தி, சிவலிங்கம் ஆகிய வாத்தியார்களிடமும் கூத்து பயின்றார். திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, வேலூர், காட்பாடி, சோளிங்கர், திருக்கழுக்குன்றம், வந்தவாசி ஆகிய இடங்களில் கூத்து ஆடினார். தனிக்கூத்தும் ஆடியுள்ளார். ஆரம்பத்தில் பெண் வேடங்களில் நடித்தார். பின்னர் துரியோதனன், தர்மன், கிருஷ்ணன், திரெளபதி, குறத்தி ஆகிய வேடங்கள் ஏற்றார்,
வெண்பாக்கம் வெங்கடேஸ்வரா நாடக மன்றத்தில் ஆசிரியராக உள்ளார். கோணமடை ராமசாமியும், கலவை குருசாமியும் எழுதிய இரணிய விலாசம், கிருஷ்ணன் தூது மற்றும் மாசிலாமணி எழுதிய சுந்தரி கல்யாணமும், சுபத்திரை கல்யாணமும் ஆகிய கூத்துக்கள் நடத்தினார். வேலூர், பெங்களூர், சென்னை, திருப்போரூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் கூத்து நடத்தினார்.
மாணவர்கள்
- சீதா ராமன்
- பிச்சாண்டி
- ரங்கன்
- கமலக்கண்ணன்
- பார்த்திபன்
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதம்
- தக்கயாகம்
- இரணியவிலாசம்
- ரேணுகாம்பாள்
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Oct-2024, 10:26:28 IST