under review

ஆர்ய தர்மம்

From Tamil Wiki
ஆர்ய தர்மம் இதழ்
ஆர்ய தர்மம் இதழ்

ஆர்ய தர்மம் வைதீக சமயம் சார்ந்த இதழ். காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாரின் ஆசியுடன் கும்பகோணத்தில் இருந்து 1914 முதல் வெளிவந்தது. ப. பஞ்சாபகேச சாஸ்திரிகள் இதன் ஆசிரியர்.

பதிப்பு வெளியீடு

ஆர்ய தர்மம், சனாதன மார்க்க நெறிகளை விளக்கும் வைதீக சமயம் சார்ந்த இதழ். சனாதன தர்மம் கூறும் செய்திகளைத் தாங்கி இவ்விதழ் 1914 முதல், கும்பகோணத்தில் இருந்து வெளிவந்தது. ப.பஞ்சாபகேச சாஸ்திரிகள் இதன் ஆசிரியராக இருந்தார். இவ்விதழ் ஸ்ரீரங்கம் ஸ்ரீவாணி விலாஸ பிரஸ்ஸில் அச்சிடப்பட்டு வெளிவந்தது. நான்கு வருடங்களுக்குப் பிறகு இதழை வெளியிடும் பொறுப்பை, ‘ஸ்ரீ பாரத் தர்ம மஹா மண்டலி’ ஏற்று வெளியிட்டது. ஹிந்து மதம் சார்ந்து வெளியாகும் புத்தகம் குறித்த விளம்பரங்கள் இந்த இதழில் வெளியாகின.

ஆரம்பத்தில் மாதமிருமுறை இதழாக வெளிவந்தது. பின் மாத இதழாகி, வார இதழாக வெளிவந்து பின் நின்றுபோனது.

நேரடியாகச் சந்தாதாரர்களுக்கு அனுப்பப்பட்ட இவ்விதழின் ஆண்டுச் சந்தா, உள்நாட்டுக்கு இரண்டு ரூபாய், எட்டு அணா; வெளிநாட்டுக்கு மூன்று ரூபாய், 12 அணா. தனிப்பிரதியின் விலை குறிப்பிடப்படவில்லை.

உள்ளடக்கம்

சங்கரரின் கொள்கைகளை முதன்மையாகக் கொண்ட இவ்விதழில் ஸ்ரீ சங்கரர் சரித்திரம், ஸ்ரீ சங்கர தத்துவங்கள், அம்பரீஷ சரித்திரம், ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் சரித்திரம், காயத்ரி மஹாத்மியம், ஈச்வர பூஜா விதானம், வியாஸகலீயம், மாயாசாஸ்திரம், ஸ்மிருதிகள், கல்வி, ஒழுக்கம், தவம், ஞான யோகம் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

சோழமன்னர்கள் சரித்திரம், பகவத்கீதையும் வர்ணாச்ரம தர்மமும் தொடர், சிறுவர்களுக்கான சிறுகதைகள், வார விருத்தாந்தம், பத்திராதிபர் குறிப்புகள் எனப் பல்வேறு கட்டுரைகள், தொடர்கள் வெளியாகியுள்ளன.

பால்ய விவாகத்தை ஆதரித்து இவ்விதழில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவை ஆதரித்தும், எதிர்த்தும் இவ்விதழில் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, காந்தியின் ஆலய நுழைவுப் போராட்டத்தை எதிர்த்துப் பல கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

நிறுத்தம்

எவ்வளவு ஆண்டுகாலம் இவ்விதழ் வெளிவந்தது என்ற விவரங்கள் கிடைக்கவில்லை.

உசாத்துணை


✅Finalised Page