under review

ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில்

From Tamil Wiki
ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில்
ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில்
ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில் அகிலாண்டேஸ்வரி

ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற தலம். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில் கீழைத் திருக்காட்டுப்பள்ளி திருவெண்காட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது சீர்காழி - தரங்கம்பாடி வழித்தடத்தில் அல்லி விளாகம் கிராமத்திற்கு அருகில் உள்ளது. சீர்காழியிலிருந்து இந்த இடம் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பெயர்க்காரணம்

ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில் ஒரு காலத்தில் காட்டின்(ஆரண்யம்) நடுவில் இருந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள சிவபெருமான் ஆரண்யேஸ்வரர்(காட்டழகர்) என்றும் அழைக்கப்பட்டார்.

ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில்

தொன்மம்

மஹாகால முனிவர்களும் ஆரண்ய முனிவர்களும் இங்குள்ள இறைவனை வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது. கருவறையின் வெளிப்புறச் சுவரில் இருவரையும் சித்தரிக்கும் படிமங்கள் உள்ளன. மஹாகால முனிவர் சங்கு ஊதுவதும், ஆரண்ய முனிவர் சிவபெருமானுக்கு பூஜை செய்வதுமான சிற்பங்கள் உள்ளன.

இந்திரன்

விஸ்வரூபன் என்ற அரக்கன் தேவர்களைத் தொந்தரவு செய்ததால் இந்திரன் அவனைக் கொன்றார். விஸ்வரூபனின் தந்தை துவட்டா ஒரு யாகம் செய்து இந்திரனைக் கொல்ல விருத்திராசுரன் என்ற மற்றொரு அரக்கனை உருவாக்கினார். இந்திரன் ததீசி முனிவரிடம் 'வஜ்ராயுதம்' என்ற ஆயுதத்தைப் பெற்று விருத்திராசுரனை அழித்தார். இந்தக் கொலைகளால் ஏற்பட்ட பாவங்களால், இந்திரன் வான தெய்வங்களின் தலைவன் என்ற பதவியை இழந்தார். அவருக்கும் 'பிரம்மஹத்தி தோஷம்' ஏற்பட்டது. பிரம்மாவின் அறிவுறுத்தலின் பேரில் இந்திரன் இக்கோயிலுக்கு வந்து சிவனை வழிபட்டார்.

பிரம்மன்

பிரம்மன் இங்கு முனியேசர், பிரம்மேசர், அகஸ்தீஸ்வரர், புலஸ்தீஸ்வரர், வியாக்ரபாதேஸ்வரர், சக்ரேஸ்வரர் மற்றும் கபாலீஸ்வரர் என பத்து சிவலிங்கங்களை உருவாக்கி சிவனை வழிபட்டார். அவை தாழ்வாரங்களில் காணப்படுகின்றன. இங்குள்ள பிரம்மேசரை வழிபட்டால் நூறு அஸ்வமேத யாகங்கள் செய்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கந்தர்வர்

கந்தர்வர் ஒருவர் முனிவரால் சபிக்கப்பட்டதால் நண்டாக மாறினார். தன் சாபவிமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்து விநாயகரை வழிபட்டதால் தன் இயல்பு நிலைக்குத் திரும்பினார். எனவே இங்குள்ள விநாயகர் 'கர்காட மகா கணபதி' என்றும், 'நந்து விநாயகர்' என்றும் அழைக்கப்பட்டார்.

ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில் லிங்கம்

கோயில் பற்றி

  • மூலவர்: ஆரண்ய சுந்தரேஸ்வரர்
  • அம்பாள்: அகிலாண்டேஸ்வரி
  • தீர்த்தம்: அமிர்தம், பொய்கை தீர்த்தம்
  • ஸ்தல விருட்சம்: பன்னீர் மலர் மரம்
  • பதிகம்: திருஞானசம்பந்தர்
  • இருநூற்று எழுபத்தியாறு தேவாரம் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று
  • பன்னிரெண்டாவது சிவஸ்தலம்
  • இக்கோயிலில் உள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்
  • கடைசியாக கும்பாபிஷேகம் ஜனவரி 24, 2007 அன்று நடந்தது.

கோயில் அமைப்பு

மேற்கு நோக்கிய இக்கோயிலுக்கு ஒற்றை நடைபாதை உள்ளது. இங்கு ராஜகோபுரம் இல்லை ஆனால் அதன் இடத்தில் ஒரு சிறிய அழகான வளைவு உள்ளது. சிவன் மற்றும் பார்வதி தேவியின் சன்னதிகள் உள்ளன.

ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில் லிங்கம்

சிற்பங்கள்

விநாயகர், முருகன், பைரவர், சூரியன் மற்றும் சனீஸ்வரர் ஆகியோரின் சன்னதிகளும் சிலைகளும் மாடவீதிகளில் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் சிலைகளைக் காணலாம். இக்கோயிலில் நவக்கிரகம் இல்லை. இக்கோயிலுடன் தொடர்புடைய நான்கு தீர்த்தங்கள் (தொட்டி) உள்ளன. அவை இக்கோயிலின் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ளன. தட்சிணாமூர்த்தி இங்கு 'ஸ்ரீ ராஜயோக தட்சிணாமூர்த்தி' என்று அழைக்கப்பட்டார். மேலும் அவரது வழக்கமான 4 சீடர்களுக்கு பதிலாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர், பிரம்மா மற்றும் மகாவிஷ்ணு ஆகிய ஆறு சீடர்களுடன் காட்சியளிக்கிறார். தாசலிங்கம் சன்னதியில் ஏழு சிவலிங்கங்கள் உள்ளன. சிவலிங்கத்தின் அடிவாரத்தில் இரண்டு லிங்கங்கள் உள்ளன. இது மிகவும் தனித்துவமானது.

சிறப்புகள்

  • சிவன் மற்றும் பார்வதி இருவரையும் ஒரே இடத்தில் நின்று வழிபடலாம்
  • தட்சிணாமூர்த்தியின் சன்னதிக்கு அருகில் கடல் அலைகளின் சத்தம் கேட்கும் வகையில் இந்த கோயிலின் கட்டிடக்கலை உள்ளது. இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் தான் கடல் உள்ளது.
  • செல்வம், பதவி இழந்தவர்கள் இங்கு சிவபெருமானை வழிபட்டால் மீண்டு வரலாம் என்பது நம்பிக்கை.

கோயில் நேரம்

  • காலை 8.30-11 மணி வரை
  • மாலை 6-7.30 மணி வரை

விழாக்கள்

  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி
  • ஐப்பசியில் ஸ்கந்த சஷ்டி
  • மார்கழியில் ஆருத்ரா தரிசனம்
  • மாசியில் மகா சிவராத்திரி
  • பிரதோஷமும் தொடர்ந்து அனுசரிக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page