அ. வீரமணி

From Tamil Wiki
பேராசிரியர் அ.வீரமணி

பேராசிரியர் முனைவர் அ.வீரமணி (பிறப்பு 1.6.1947) சமூகவியல் துறை பேராசியர். தமிழவேள் கோ.சாரங்கபாணிக்குப் பிறகு, சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்திற்குப் பங்கியாற்றிய முக்கிய சமூகத் தலைவர். சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம், குறிப்பாக தமிழ் இளையர் முன்னேற்றத்திற்காக  கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக தொடர்ந்து செயலாற்றி வருபவர். சிங்கப்பூர் இந்தியச் சமூகம், தென்கிழக்காசிய இந்தியச் சமூகங்கள் தொடர்பான சமூகவியல் ஆய்வுகளை மேற்கொண்டு நூல்கள் எழுதியிருப்பவர்.

பிறப்பு

தந்தையார் அய்யாவு சென்னை மாகாணத்தில் இருந்து 15 ரூபாய் கப்பல் கட்டணம் கொடுத்து நாகபட்டணத்திலிருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்.  தாயார் துளசி அம்மாள் சிங்கப்பூரில் பிறந்த நான்காம் தலைமுறைத் தமிழர்.தாய்வழித் தாத்தாவின் தாத்தா 1896இல் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார். பாரம்பரியமாக பத்தர் தொழிலில் ஈடுபட்ட குடும்பம். தாத்தா அங்கோர் ஸ்திரீட்  சுப்பிரமணிய பத்தர், மாமா பப்ளோ சாலை கோபால் பத்தர்.

அ.வீரமணி 1953ல் எடுத்த படம்.

குடும்பத்தின் மூத்த பிள்ளையான இவருக்கு மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். நால்வர் உயிருடன் உள்ளனர். இவருக்கு மூன்று மகள்கள்.

கல்வி

ஜப்பானியர் சரணடைந்து, உலகப் போர் முடிந்து பின்னர் சிங்கப்பூரில் ஏற்பட்ட கம்யூனிச போராட்டத்தால் சிங்கப்பூரில் அவசரநிலை பிரகடனப்பட்டிருந்தது. அதன்காரணமாக தமிழகத்திற்கு திரும்பிய பல குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. 1950 முதல் 1955 வரை அங்கு தமிழ்ப் பள்ளியில் படித்தார். 1955இல் குடும்பம் சிங்கப்பூர் திரும்பியது. வீரமணி ஆங்கிலக் கல்வி பெற வேண்டும் என விரும்பிய தாயார், குடும்பத்தின் வறுமை காரணமாக 1957இல் கடைசியில் சிங்கப்பூர் ராமகிருஷ்ணன் மடத்தில் சேர்த்தார். அங்கு ஏழரை ஆண்டுகள் தங்கி பார்ட்லி தொடக்கப்பள்ளி, பாட்லி உயர்நிலைப்பள்ளிகளில் படித்தார். பொதுச் சேவை உபகாரச்சம்பளம் பெற்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இந்தியவியல் (Major), சீனவியல் (Minor) துறையில் 1971இல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

பின்னர் மூன்று ஆண்டுகள் (1971-74) சிங்கப்பூர் வானொலியில் வேலை செய்தார். மூன்றாண்டு வேலை ஒப்பந்தம் முடிந்த கையோடு சிங்கப்பூர்ப் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டத்தையும் (1977), பின்னர் அமெரிக்க விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முனைவர் பட்டத்தையும் (1980) பெற்றார்.

கல்விக்கான  விருதுகள்:

1975 - ஃபோர்டு அறக்கட்டளையின் தென்கிழக்காசிய ஆய்வாளர் விருது (Research Fellowship Award)

1977- ஃபுல்பிரைட்-ஹேஸ் விருது - விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகம்

1986 - ஃபுல்பிரைட்-ஹேஸ் வருகைதரு கல்வியாளர் விருது (Fulbright-Hays Visiting Scholar Award),  கார்னெல் பல்கலைக்கழகம், கலிபோர்னியா

பணி

அ.வீரமணி 1966ல் மாணவராக

1971 ஏப்ரல் -1973 மே - தயாரிப்பாளர்,  சிங்கப்பூர் வானொலி & தொலைக்காட்சி (Radio & Television Singapore, RTS)

1975 ஜூலை - 1977 ஜூன் -  பகுதிநேர ஆசிரியர், சமூகவியல் துறை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்

1981 ஜனவரி - 1984  ஜூன் - ஆய்வாளர், சிங்கப்பூர் தென்கிழக்காசிய கல்விக் கழகத்

1981 ஜனவரி - 1984 ஜூன் - துணை விரிவுரையாளர், சமூகவியல் துறை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்

1984 ஜூலை - 1986 ஜூன் - முழுநேர விரிவுரையாளர், சமூகவியல் துறை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்

1986 ஜூலை - 1990 ஜூன் மூத்த விரிவுரையாளர், சமூகவியல் துறை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்

1990 ஜூலை - 1996 ஜூன்-  பொதுக்கொள்கைத் துறையின் முதுநிலைப் பட்டப் படிப்புத் திட்ட இயக்குநர், புரூணை பல்கலைக்கழகம்

1993 ஜூலை- 2000 பிப்ரவரி -  மூத்த விரிவுரையாளர்/ இணைப் பேராசிரியர், சமூகவியல் துறை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

1994 அக்டோபர் - 2000 மார்ச் - இளநிலை அறிவியல் (நிர்வாகம்) பட்டப்படிப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர்/ பகுதிநேர விரிவுரையாளர்,

லண்டன் பல்கலைக்கழக தொலைதூரப் பட்டக் கல்வி, சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழகம் (SIM)

2000 மார்ச் - ஆய்வாளர், ஆசிய பசிபிக் ஆய்வுக் கல்விக்கான இரிட்சுமெய்கன் மையம் (Ritsumeikan Centre for Asia Pacific Studies), ஜப்பான்

2000  ஏப்ரல் முதல் பேராசிரியர், ஆசிய பசிபிக் ஆய்வுக் கல்விக்கான இரிட்சுமெய்கன் ஆசியா பசிபிக் பல்கலைக்கழகக் கல்லூரி

  • இந்தப் பல்கலைக்கழகத்தினல்ஆசிய பசிபிக் வட்டார ஆய்வில் மன்ற இயக்குனர், மாணவர் சேர்ப்புத் துவைத் தவைவர் பசிபிக் துறைத் தலைவர், பல்கலைக்கழக துணைத் தலைவராக 17 ஆண்டுகள் பணிபுரிந்தார். அனைத்துலக மாணவர்களுக்கு ஆங்கிலத்திலும் ஜப்பானிய மொழியிலும் பாடத்திட்டங்களை உருவாக்க உதவியுள்ளார்.

2006 ஏப்ரல் - 2007 ஆகஸ்ட் -  மூத்த ஆய்வாளர், தென்கிழக்காசிய கல்விக் கழகம், சிங்கப்பூர்

2007 செப்டம்பர்  முதல் இணை மூத்த ஆய்வாளர் (கௌரவ), தென்கிழக்காசிய கல்விக் கழகம், சிங்கப்பூர்

1977 முதல் 1988 வரையில் தமிழ் முரசு நாளிதழிலும்  1975 முதல் 1977 வரையில் தமிழ் மலர் நாளிதழிலும் பணியாற்றியுள்ளார்.

சமூகவியல் ஆய்வு

BM310.jpg

சமூகவியல் ஆய்வாளராக, இந்தியர்கள் குறிப்பாக தென்கிழக்காசிய இந்தியர்கள், தமிழர்கள் குறித்த பல முன்னோடி ஆய்வுகளை முன்னெடுத்துள்ளார்.

பேராசிரியர் கே.எஸ்.சாந்துவுடன் இணைந்து பேராசிரியர் அ.வீரமணி எழுதிய "Indians in Singapore Society" in Indian Communities in Southeast Asia, 1994/04 என்ற நூல், சிங்கப்பூர் இந்தியர் சமூகம் குறித்த முக்கியமான, முன்னோடி சமூகவியல் நூலாகும்.

சிங்கப்பூரிலும் கிழக்கு ஆசியா, தென் கிழக்காசிய நாடுகளிலும் வாழும் தமிழர்கள் பற்றியும் ஆராய்ந்து அவர்களின் வரலாற்றையும், கலாச்சார முன்னேற்றங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். வட சுமத்திராவில் தமிழர்கள் என தொடங்கி, ஜகார்த்தா, தாய்லாந்து புருணை,  இந்தோனீசியா, மியன்மார் போன்ற நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களையும், அவர்கள் கடைபிடிக்கும் கலாச்சார பண்பாடுகள், கட்டிய கோவில்கள், வெற்றிகரமாக நடத்தி வரும் வணிகம் என அனைத்தையும் ஆராய்ந்து கட்டுரைகளாகவும் ஆய்வு நூல்களாவுக் வெளியிட்டுள்ளார்.

பல கல்வியாளர்களின் ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்ததோடு, அவர்களின் படைப்புக்களையும் சீர்தூக்கி முன்னுரைக்கும் கல்விமானாகவும் பணியாற்றினார்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து ஜப்பான்,  புருணை போன்ற நாடுகளில் இருபது ஆண்டுகளுக்கு மேல் வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ள பேராசிரியர் வீரமணி, பல கல்வியாளர்களின் ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்ததோடு, அவர்களின் படைப்புக்களையும் சீர்தூக்கி முன்னுரைக்கும் கல்விமானாகவும் பணியாற்றியுள்ளார். சமூகவியல் துறை சார்ந்தும், தமிழர், தமிழ் மொழி தொடர்பாகவும் பல நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், முன்னுரைகள் எழுதியுள்ளார்.

கடந்த 2017ல் சிங்கப்பூர் இந்திய மரபுடைமை சங்கம் வெளியிட்ட Singapore Indian Heritage நூலையும் இவர் எழுதியுள்ளார்.  

சமூகப் பங்களிப்பு

1965-1967 - பார்ட்லி உயர் நிலைப்பள்ளி இயல் இசை நாடக மன்றம்

1968-1971 - மலாயா பல்கலைக்கழக தமிழ்ப்பேரவை

1974-1980 - சிங்கப்பூர் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவை  

1981-1999  சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவை

1982-1987 -தமிழர் பேரவை இளையர் மன்றம்  

1988 முதல் - சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்

தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை, தமிழர் பேரவை இளையர் மன்றம், சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் ஆகியவை டாக்டர் அ.வீரமணியின் மிக முக்கியமான சமூகப் பங்களிப்புகள்.

விழிப்புணர்வை ஏற்படுத்திய அந்தச் சமூகச் செயல்பாடுகள், இளையர்களிடம் சமூக உணர்வுடன், தமிழ் உணர்வு, தமிழ்ப் பேச்சு, உறவாடல்களை வளர்க்க தளமாக இவை அமைந்தன.

சமூக சோதனைத் திட்டங்கள் மூலமாக  இளையரைக் கொண்டு இளையர்களுக்கு பல்வேறு துறைகளிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வழிநடத்தினார். இளையர்களின் ஆர்வத்தையும் திறன்களையும் வளர்த்தார்.  பல  இளையர்களின் கல்விக்கு பங்கு ஆற்றினார். 1970களின் பிற்பாதியிலிருந்து 1990களின் முற்பாதி வரையில் கிட்டத்தட்ட சிங்கப்பூரின் தமிழ் இளையர்கள்  எல்லாருமே ஏதாவதொரு வகையில் இந்த அமைப்புகளுடன் இணைந்தனர். ஒன்று திரண்டனர்.

1984ஆம் ஆண்டு நடந்த மூன்றாவது பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவையின் மூன்றாவது இளையர் மாநாட்டில் உரையாற்றும் முனைவர் அ.வீரமணி

பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை

சிங்கப்பூருக்கு வருகையளித்த எழுத்தாளர் அகிலனுக்கு தமிழ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய பல்கலைக்கழக  கில்ட் ஹவுஸ்  20 பட்டதாரி மாணவர்கள் கூடியது, பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை அமைய பங்களித்தது.  முதுகலை மாணவராக சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயின்ற வீரமணி, 1975ஆம் ஆண்டு தமிழ்ப் பேரவையைத் தொடங்கினார். அப்போது பல சிக்கல்களை எதிர்கொண்டார். தேசிய பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக இருந்த Tan wah piow  1974 இறுதியில் கைதானதைத் தொடர்ந்து  மாணவர் சங்கங்கள் நிறுத்தப்பட்டன. மாணவர் சங்கம் அரசியல் கட்சியாகச் செயல்படும் அதிகாரச் சட்டம் திருத்தப்பட்டது. சங்கத்தைப் பதிவு செய்ய 1978ஆம் ஆண்டு ஆனது. சிங்கப்பூரில் தமிழ்-தமிழர் நிலையை முன்வைத்து தேசிய பல்கலைக்கழகத்தின் முதல் ஆய்வரங்கத்தை தலைமை ஏற்று நடத்தினார்.

1977ஆம் ஆண்டு ஏப்ரல் 9, 10 தேதிகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழிலக்கியமும் என்னும் ஆய்வரங்கத்தைச் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை கூட்டிற்று.

அப்போது சிங்கப்பூரின் அதிபராக இருந்த திரு தேவன் நாயர் ஆய்வரங்கின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ஆற்றிய உரை, சிங்கப்பூரில் தமிழ் குறித்த முக்கிய உரை.

தொடர்ந்து 1979, 1981 முதலான ஆண்டுகளில் பல்கலைக்கழக மாணவர்களை முன்வைத்து மாநாட்டை நடத்தினார்.  சிங்கப்பூரின் தமிழ்க் கல்வி, ஊடகம், இலக்கியம், சமூகப் பணிகள் உள்ளிட்ட தமிழ் மக்கள், தமிழ் மொழி சார்ந்த வரலாறும் செயல்பாடுகளும் துறைசார்ந்த நிபுணர்களாக ஆய்வுசெய்யப்பட்டன.  இந்த ஆய்வரங்கங்கள் சிங்கப்பூரின் தமிழ் நிலையை அரசியல் நிலையில் மேம்படுத்தின.  சிங்கப்பூரில் தமிழ் மொழி, இலக்கிய ஆய்வுகளுக்கு இந்த மாநாடு வித்திட்டது. சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் எனும் சிந்தனையை இம்மாநாடு உருவாக்கி வளர்த்தது.

20ஆம் நூற்றாண்டு சிங்கப்பூர்த் தமிழர் வரலாற்றை நிலை நிறுத்தும் ஆய்வு நூல்களாக அந்த மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்புகள் இன்று பயன்படுகின்றன. பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் தலைவர், மதியுரையாக 1975 முதல்  2000ஆம் ஆண்டுவரை 25 ஆண்டுகள் பணியாற்றினார்.

தமிழர் பேரவை இளையர் மன்றம்

1981 இறுதியில் தமிழர் பேரவையின் கல்விக் குழுவில் செயலாளராக இருந்தார். 1980 அறிமுகமான கோ கெங் சுவீயின் கல்வித் திட்டத்தால் தமிழ் மாணவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். ஆங்கிலப் பள்ளி பற்றி பெற்றோருக்குத் தெரியவில்லை. 3, 6, 8ஆம் வகுப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்ட தரம் பிரிப்பு பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. சமூகவியல் நிபுணரான டாக்டர் அ.வீரமணியின் முன்னெடுப்பில் நீண்ட கால நோக்கில், தமிழ் பேரவை கல்விக் குழுவை அமைத்து, அதன்வழி பல இளையரைக் கொண்டு தீவு முழுவதும் கல்வி துணைபாட வகுப்புகளை நடத்தினார். அதன் வழி பல இந்திய இளையர்களின் கல்வி மேம்பட பெரும்பங்கு ஆற்றினார்.

முதல் ஆண்டில், 6 நிலையங்களில் 124 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட துணைப் பாட வகுப்புகள் 1987இல் 14 கிளைகளாக வளர்ந்தது. 14 மையங்களில் 25 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. உயர்கல்வி மாணவர்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுத்த இந்த துணைப் பாட வகுப்புகளின் வழி ஏறக்குறைய 24,000 பள்ளி தமிழ் மாணவர்கள் தேர்ச்சி பெற உதவிபெற்றனர்.  அரசாங்க நிலையில் சிந்தனை வெளிப்பட்டது. 1991இல் அரசாங்கம் சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தை அமைத்தது, கல்வி உதவிப் பணியை முன்னெடுத்தது.

தமிழர் பேரவை இளையர் மன்றத்தில் 1,800 உறுப்பினர்கள் இருந்தனர். தமிழர் பேரவை கல்வி உதவித் திட்டத்தில் கிட்டத்தட்ட 25,000 மாணவர்கள் பயனடைந்தனர்.

தமிழர் பேரவையில் டாக்டர் வீரமணி தொடங்கிய தமிழ் இளையர் மன்றம், கல்விப் பணிகளுடன், வாசிப்பு, நூல் வெளியீடுகள் என கலை இலக்கியச் செயல்பாட்டிலும் நாட்டம் செலுத்தியது.

சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தின் ஆலோசகராக இன்றும் இளையர்கள் பலரை வழிநடத்துகிறார் அ.வீரமணி

சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம்

1980களின் இறுதியில் தமிழர் பேரவையிலிருந்து விலகிய டாக்டர் வீரமணி,  1957இல் பதிவு செய்யப்பட்ட சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் 1988இல் 250 இளையர்களுடன் உயிர்ப்பித்தார். 1988 முதல் 2000 பிப்ரவரி கடைசி வரையில் தமிழ் இளையர்களை ஒன்றிணைந்து பல்வேறு சமூக, தமிழ்ப் பணிகளை இம்மன்றம் முதல் முயற்சியாக முன்னெடுத்துள்ளது.

தேசிய நூலகத்தில் சிறுவர்களுக்கான கதை நேரம், தேசிய அளவில் நாடகப் போட்டிகள், நாடக விழா, தமிழ் - இலக்கிய ஆய்வரங்கம், நூல் வெளியீடு, கலை நிகழ்ச்சிகள்,  உள்ளிட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிகழ்ச்சிகளில்  20,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் தமிழ் இளையர்கள் ஒன்றுகூடிச் செயல்பட்டனர். கோல்டன் மைல் காம்ப்ளெக்சில் 1996 முதல் 2008 வரையில் மன்றம் சொந்த அலுவலகத்தில் செயல்பட்டது.

ஜப்பானிலிருந்து திரும்பிய பின்னர், 2016ல் சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தை மறுஉயிர்ப்பித்தார் சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு நூல்,  சிங்கப்பூர் தமிழர்கள் வாழ்வைப் பதிவு செய்யும் ‘சிங்கப்பூர் இருநூற்றுவர்’ (2019)  நூல் போன்ற நூல் பதிப்புகளையும்  ஆய்வரங்களையும் மன்றம் தற்போது முன்னெடுத்துள்ளது.

பிற ஈடுபாடுகள்

சிங்கப்பூரில் நடைபெறும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளில், நூல் குறித்து மதிப்பீடு, கருத்துகள், சிறப்பு உரைகள் என பல வழிகளிலும் இவர் பங்காற்றியுள்ளார். ஜப்பான்,  புருணை போன்ற நாடுகளில் பேராசிரியராக பணியாற்றி வந்தபோதும் சமூக நிகழ்ச்சிகளுக்கு இவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் அ.வீரமணி

இலக்கிய இடம்

சிங்கப்பூர் இலக்கியம் என்ற சிந்தனையை உருவாக்கியவர். சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் குறித்த ஆய்வுகளைத் தொடங்கி வைத்தவர். பல இளையர்களை ஒன்றிணைத்து நூல்கள் வெளியிட்டவர் என்ற வகையில் சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத்தில் முனைவர் அ.வீரமணிக்கு தனித்த இடம் உண்டு. சமூகச் செயல்பாடுகள், சமூகவியல் ஆய்வுகள் என்பனவற்றுக்கு அப்பால், சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்துறையின் ஆய்வுப் பகுதியை வளர்த்தது வீரமணியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு.

"டாக்டர் அ வீரமணியின் அரிய முயற்சியே சிங்கப்பூரில் தமிழ் தொடர்பான ஆய்வுகளுக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது. ஆய்வரங்குகள் மட்டும் நடத்திவிட்டுச் செல்லாமல் அங்குப் படிக்கப்பட்ட கட்டுரைகள் உடனுக்குடன் புத்தகங்களாக வரவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்து அவற்றைப் புத்தகங்களாகக் கொண்டுவந்தவர் இவர் ஆவார்," என்று முனைவர் ஆ.இரா.சிவகுமாரன், "சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் ஆய்வு முயற்சிகள் - உயர் கல்வி நிறுவனங்களின் பங்கு" என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“மலாயாப் பல்கலைக் கழகத்தில் அ . வீரமணி தம் பி ஏ பட்ட படிப்பின் ஒரு பாடமாக, “மலாயா- சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் 1900-1960” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1970இல் ஒரு கட்டுரை படைத்துள்ளார். இதுவே பல்கலைக்கழக நிலையில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பற்றி மேற்கொண்ட முதல் ஆய்வு எனக் கருதலாம்,” என்று வீரமணியைத் தனது முதல் மாணவன் எனக் கொண்டாடும் முனைவர் சுப. திண்ணப்பன். 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் சாதனைகளும் எதிர்காலத் திட்டங்களும்' (பக்கம் 60) நூலில் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் தமிழ் மொழி இலக்கிய வளர்ச்சி

நூல்கள், ஆய்வுகள்

கிட்டத்தட்ட சமூவியல்துறையில் 20 நூல்கள், தமிழலில் 20

டாக்டர் பட்ட மாணவர்களுடன் இணைந்து 150 கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

1982 பாவலர் நெஞ்சம் (The Poet's view of Society in Classical Tamiml Literature)

1983 வட சுமாத்ராவில் தமிழ்

1989 பழைய சவால்களின் புதிய தோற்றம்

1990 கடந்த 25 ஆண்டுகள் (The Last 25 Years, 1965-1990)

1995 சித்தாந்தம்

1996 சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழ் மொழி

1996 சமுதாயத்தில் தமிழ் இளையரின் நிலை

2017- புதிய சமுதாயம் - சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்

2019 - மலாயா மான்மியம் - தொகுப்பாசிரியர்

அன்று மலாயாவின் பகுதியாக இருந்த சிங்கப்பூரில் 1880 முதல் 1930 வரை வாழ்ந்த தமிழர்கள் பற்றி வரலாற்றைக் கூறும், ச.முத்துத்தம்பி பிள்ளை எழுதிய மலாயா மான்மியம் தொகுப்பு முதலில் 1937, 1939 ஆகிய ஆண்டுகளில் இரு தொகுப்புகளாக வெளிவந்தது. அத்தொகுப்புகளைச் செம்மைப்படுத்தி பேராசிரியர் அ.வீரமணி 2019ல் புதிய பதிப்பாக வெளியிட்டார்.

2019 - சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர், இணை ஆசிரியர்கள், மாலதி பாலா, மா. பாலதண்டாயுதம்.

2023 - சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர், 2வது தொகுப்பு இணை ஆசிரியர்கள், மாலதி பாலா, மா. பாலதண்டாயுதம்.

ஆங்கில நூல்கள்:

  1. Enchanting Asian Social Landscapes,  2014/04
  2. Singapore Indian Heritage, 2017/10
  3. Enchanting Asian Social Landscapes,  2014/04
  4. 3.EARLY INTERACTIONS BETWEEN SOUTH AND SOUTHEAST ASIA: REFLECTIONS ON CROSS-CULTURAL EXCHANGE Edited by... 2011/10
  5. Nagapattinam muthal Suvarnadeepam varai: Thankizhakku asiavil Cozhrgalin Kadarpayananggal [Nagapattinam... 2011/12
  6. Rising India and Indian Communities in East Asia. [Edited by K. Kesavapany, A. Mani, P.Ramasamy], 2008/10
  7. Indian Communities in Southeast Asia [Second Edition]. Edited by K.S. Sandhu & A.Mani. Institute. 1993, 2006/10  
  8. Tamils in Singapore: Yesterday, Today and Tomorrow,  2004/08
  9. THE LIMITS OF THE NATION-STATE IN THE ASIA PACIFIC, 2004/03
  10. Maintaining the economic edge through education in ASEAN, 2004/03
  11. In Pursuit of Lakshmi: The Political Economy of Indians in Singapore, 2002/10
  12. "Integration and Identity Creation of New Cultures in Southeast Asia" in Human Flow and Creation, 1998/06
  13. "Brunei" in Political Party Systems and Democratic Development in East and Southeast Asia, 1998/03
  14. Veeramani-2.jpg
    Young Women in Rapidly Changing Societies, 1997/10
  15. Tamil Language amidst Singapore's Development, 1997/10
  16. "From Overseas Chinese to Chinese Singaporeans" in Ethnic Chinese as Southeast Asian Chinese, 1997/08
  17. ."Foreign Domestic Workers in Brunei Dasrussalam" in ASEAN in the Global System, 1997/06
  18. Youth in Society,  1996/04
  19. "Migration in Brunei" in Crossing Borders: Transmigration in Asia, 1995/05
  20. "Migrant Society and Indian Literature in Singapore and Malaysia" in Crossing Borders: Transmigration, 1995/05
  21. Language and Society Among Tamil Singaporeans, 1995/03
  22. Development of Tamil Language & Literature in Singapore,1965-1990. 1994/06
  23. சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் தொகுத்துள்ள ‘சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர்’ என்ற நூலின் இரண்டாவது தொகுப்பை 2023 ஜூலை மாதம் முன்னாள் மூத்த அமைச்சரும் தற்போதைய அதிபருமான தர்மன் சண்முகரத்னம் வெளியிட்டார்.
    "A Community in Transition: Indians in Negara Brunei Darussalam" in Indian Communities in, 1994/04
  24. "Indians in North Sumatra" in Indian Communities in Southeast Asia, 1994/04
  25. "Indians in Jakarta" in Indian Communities in Southeast Asia, 1994/04
  26. "Indians in Singapore Society" in Indian Communities in Southeast Asia, 1994/04
  27. "Indians in Thailand" in Indian Communities in Southeast Asia, 1994/04
  28. .Analysis of a Social Policy Measure in Brunei Darussalam, 1991/03
  29. "Symbolism of an ancient tradition" in Overseas Indians, 1983/07
  30. Determinants of Educational Aspirations among Indonesian Youth [based on Ph.D. dissertation], 1983/03  
  31. "Caste and marriage among Singapore Indians" in Contemporary Family in Singapore: Structure… 1979/08

உசாத்துணை

https://sites.google.com/view/profamani/home?authuser=0

https://profavm.wordpress.com/2015/10/11/living-as-a-world-renouncer-a-possible-life-in-singapore/

https://sivakumaranara.blogspot.com/2008/04/blog-post_29.html

https://www.youtube.com/watch?v=yX3C5KpUVVQ

சீக்கிய, சிந்தி சமூகங்களே நமது முன்மாதிரி” – பேராசிரியர் அ. வீரமணி

https://serangoontimes.com/2021/09/23/half-century-singapore-tamil-literature/