அழியாக்கோலம்
To read the article in English: Azhiyakolam (Novel).
அழியாக்கோலம் (1965) ஆர். சண்முகசுந்தரம் (ஆர்.ஷண்முகசுந்தரம் ) எழுதிய நாவல். நாகம்மாள் நாவலின் களமான வெங்கமேடு ஊரில் நிகழ்வது. ஒரு கிராமியக் காதல்கதை.
எழுத்து,பிரசுரம்
இந்நாவலை 1965ல் ஆர். சண்முகசுந்தரம் எழுதினார். இவரே நடத்திய புதுமலர் நிலையம் நாவலை வெளியிட்டது
கதைச்சுருக்கம்
கல்லூரிப் படிப்பு முடித்த துரைசாமி நிர்மலாவுடன் பழகுகிறான், இருவர் உள்ளத்திலும் காதல் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ராக்கியப்பக் கவுண்டர் வீட்டில் முத்தாயாவை பெண்பார்க்க வரும் வெங்கமேட்டுக்காரர்கள் அங்கே அவர் இல்லாததனால் கோபப்பட்டு காளியப்பக் கவுண்டர் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கே அவர்கள் அவர் மகள் நிர்மலாவை பார்த்து விரும்ப திருமணம் உறுதியாகிறது. நிர்மலா தன் காதலை வெளிப்படுத்தி துரைசாமியிடம் தன்னை தன் தந்தையிடம் பெண்கேட்கும்படிச் சொல்கிறாள். ஆனால் அதற்கு காளியப்பக் கவுண்டர் ஒத்துக்கொள்ளவில்லை. முத்தாயாவை வயல்காட்டில் பார்க்கும் துரைசாமி அவளுடன் காதல்கொள்கிறான். நிர்மலாவின் காதலை அறிந்த முத்தாயா தற்கொலை செய்துகொள்கிறாள். இச்செய்தியை அறிந்த நிர்மலாவை மணக்கவிருந்தவனின் வீட்டார் நிர்மலாவை வேண்டாம் என்கிறார்கள். அவர்களை ஏற்கவைத்து திருமணம் நடக்கிறது. துரைசாமி ஊரைவிட்டுச் செல்கிறான்.
இலக்கிய இடம்
நாகம்மாள் நாவலில் சித்தரிக்கப்பட்ட அதே கொங்குநாட்டு கிராமச்சூழல் இந்நாவலிலும் யதார்த்தமாக முன்வைக்கப்படுகிறது. படிப்பினால் இளைஞர்கள் சுயமாக முடிவெடுக்கும் சூழல் உருவாகும்போது உறவுகளில் உருவாகும் பிரச்சினைகளைச் சொல்கிறது.
உசாத்துணை
தமிழ்நாவல்- சிட்டி சிவபாதசுந்தரம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:15:18 IST