under review

அழகர் கலம்பகம்

From Tamil Wiki
அழகர் கலம்பகம்

அழகர் கலம்பகம் (திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம்) (பதிப்பு: 1844), திருமாலிருஞ்சோலை என்னும் பழமுதிர்ச்சோலையில் எழுந்தருளியுள்ள 'அழகர்' என்று அழைக்கப்படும் சுந்தரராஜப் பெருமாள் மீது பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். இதன் ஆசிரியர் அரபத்த நாவலர்.

வெளியீடு

அழகர் கலம்பகம் நூலின் முதல் பதிப்பு, பொ.யு. 1844-ல், சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப் புலவர் வேங்கடாசல முதலியாரால் ஆராயப்பட்டு, திருவான்மியூர் வீராசாமிப் பிள்ளையால், அவரது சென்னை சரஸ்வதி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலின் பல பதிப்புகள் 1891 தொடங்கி அடுத்தடுத்து வெளியாகின. வை.மு. சடகோபராமானுஜாசாரியரின் உரையுடன் கூடிய நூலை, 1928-ல், சே. கிருஷ்ணமாசாரியர், சென்னை கணேச அச்சுக்கூடத்தில் பதிப்பித்து வெளியிட்டார்

ஆசிரியர்

அழகர் கலம்பகத்தை இயற்றியவர் அரபத்த நாவலர். பரத சங்கிரகம் என்ற பரத சாஸ்திர நூலை இயற்றியவர்.

நூல் அமைப்பு

அழகர் கலம்பகம் நூலின் தொடக்கத்தில் மூன்று காப்புச் செய்யுள்கள், அவையடக்கம் தவிர 100 பாடல்கள் உள்ளன. 29 கலிப்பாக்கள், 13 பாடல்கள் வெண்பாக்கள், 55 ஆசிரியப்பாக்கள், 2 வஞ்சிப்பாக்கள், ஒரு மருட்பா என்ற முறையில் படல்கள் அமைந்துள்ளன.

உள்ளடக்கம்

அழகர் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் கள்ளழகர் என்றும் சுந்தரராஜப் பெருமாள் என்றும் போற்றப்படும் திருமால். திருமாலிருஞ்சோலை எனப்படும் பழமுதிர்ச்சோலையில் எழுந்தருளியுள்ள இவ்விறைவனைப் புகழ்ந்தும் போற்றியும், பெருமைகளைக் கூறியும் தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம் என்ற கலம்பக உறுப்புகளுடன் நூறு பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது.

பாடல்கள்

காப்பு

ஆனைக்குமுன் செல்லிடப சலத்தில் அழகனையெம்
மானைக்கருதிக் கலம்பகங் கூறவரற் கரற்குத்
தானைச் சுரக்குச் சடகோபஞ்சித் திக்கத் தாங்குசெங் கோல்
சேனைத் தலைவர் திருத்தாள் கருத்தொடுஞ் சேவிப்பேனே

அத்தியின் மத்தியிலே விளங்காலிலம்மா மகிழ
நித்திரை கொள்ளுந் தமாலத்து ருவனிவ னென்பதே
சத்திய மென்னப் புளிக்கீழ் மகிழந் தமிழ்க்கரசே
நித்திய மாலழகன்ற தமிழ்கூற முன்னின்றருளே

முதலாழ்வார் மூவர் தொண்டர் பாதப் பொடியார்
மதுரகவி மாறன் மழிசைக்கோ - இதவார்
குலசேகரன் கோதை பட்டர்பிரான் பாணன்
கலியன் திருவடிகள் காப்பு

திருமால் பெருமை

மலைக்குமேன் மலைவிளக்கா மழகா வேத
வான்குதலை நான்குதலை மகனார் வாளா
தலைக்குமே லெழுதுகின்றா ரரியென் றெங்கள்
தாலத்தின் மேலெழுதச் சமர்த்தி லாரோ
அலைக்குமே லுடுமலரா மிதக்குங் கால
மாலமொன்று காயாம்பூ வலர்ந்தாற் போற்பச்
சிலைக்குமேற் செங்கண்வள ரனந்தா னந்தா
விருக்கி லிருக்கும் பொருளே யெம்பிரானே

மால் சிறப்பு

குலமலைமா யாவாழி கொடியவென்றன் சிந்தா
குலமலைமா யாவாழி கொடியமதி ளிலங்கை
நிலமலைய மாதவரி னானெறிந்தாய் மந்தா
நிலமலைய மாதவர்கை நின்னாமங் கண்டாய்
பலவருண வாரீச நயனமுழு நீலோற்
பலவருண வாரீசன் பயப்படவெற் பெடுத்து
நலவரிசைக் கவிகைபுனை காரேதென் குருகூர்
நலவரிசைக் கவிகைவிடா நளினமின்னா யகனே

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2024, 19:35:03 IST