under review

அலெக்ஸ் ஹேலி

From Tamil Wiki
அலெக்ஸ் ஹேலி (1977)

அலெக்ஸ் ஹேலி (Alexander Murray Palmer Haley) (ஆகஸ்ட் 11, 1921 - பிப்ரவரி 10, 1992 ) கறுப்பின வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர். 1976-ம் ஆண்டு வெளியான ‘ரூட்ஸ்’ எனும் புகழ்பெற்ற நாவலுக்காக அறியப்படுபவர்.

பிறப்பு, கல்வி

அலெக்ஸாண்டர் முர்ரே பால்மர் ஹேலி ஆகஸ்ட் 11, 1921 அன்று அமெரிக்காவின் இதாக்கா நகரில் சைமன் ஹேலி- பெர்தா ஜார்ஜ் ஹேலி இணையருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரு தம்பிகள். தந்தை உலகப் போர் வீரராகவும், வேளாண் பல்கலைக்கழகத்தில் தலைமைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். ஹேலி பிறந்தபோது தந்தை கார்னெல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்ததால், அலெக்ஸ் ஹேலி தன் தாய், தாய்வழி தாத்தா, பாட்டியுடன் டென்னிஸி மாநிலத்தில் ஹென்னிங் நகரில் வளர்ந்தார்.

அலெக்ஸ் ஹேலி கறுப்பினத்தவராக இருந்தாலும், அவரது முந்தைய தலைமுறையினர் பலர் வெள்ளை இன முதலாளிகளுக்கு பிறந்தவர்கள். இதனால் அலெக்ஸ் ஹேலிக்கு கறுப்பின வேர்கள் மட்டுமல்லாமல், செவ்விந்திய இனத் தொடர்பும், ஸ்காட்லாந்து-அயர்லாந்து இனத் தொடர்பும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க கப்பல் படையில் அலெக்ஸ் ஹேலி

அலெக்ஸ் ஹேலி பள்ளிக்கல்விக்குப் பின் மிசிஸிபி மாநிலத்தில் கருப்பின மக்களுக்கான அல்கார்ன் பல்கலைக்கழகத்தில் (Alcorn State University) சேர்ந்தார். ஓராண்டிலேயே அங்கிருந்து வெளியேறி வடக்கு கரோலினாவின் எலிசபெத் நகரில் உள்ள கறுப்பின மக்களுக்கான எலிசபெத் பல்கலைக்கழகத்தில் (Elizabeth City State University) சேர்ந்தார். அடுத்த ஆண்டே அங்கிருந்தும் வெளியேறினார். மே 24, 1939 அன்று அலெக்ஸ் ஹேலி அமெரிக்க கடலோர காவல்படையில் சேர்ந்தார்.

தனி வாழ்க்கை

அலெக்ஸ் ஹேலி மூன்று முறை மணம் செய்துகொண்டார். 1941-ல் நேனி பிராஞ்ச் என்பவரை மணந்தார், 1954-ல் விவாகரத்து பெற்றார். அதே வருடம் ஜூலியட் காலின்ஸ் என்ற பெண்ணை மணந்துகொண்டார். இந்த மணவுறவு 1972 வரை நீடித்தது. பின்னர் மைரா லூயிஸ் என்பவரை மணந்துகொண்டார். அலெக்ஸ் ஹேலிக்கு லிடியா, சிந்தியா என்று இரு மகள்களும், வில்லியம் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இராணுவ வாழ்க்கை

அலெக்ஸ் ஹேலி அமெரிக்க இராணுவத்தில் இருபது ஆண்டுகள் பணியாற்றினார். கப்பல் படையில் கடலோர பாதுகாப்பு துறையில் உதவியாளராகச் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் கப்பல் படையில் இதழாளர் பிரிவுக்கு மாற்றல் பெற்றார். சிற்றதிகாரியாகவும், பின்னர் தலைமை இதழாளராகவும் பணியாற்றினார். 1959-ல் பணி ஓய்வு பெற்றார்.

அவர் பணியில் சேர்ந்தபோது அதிகப் படிப்பறிவில்லாத மற்ற மாலுமிகள் சிறு தொகை அளித்து, தங்கள் தோழிகளுக்கு காதல் கடிதங்கள் எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டனர். பசிபிக் கடல்பகுதியில் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் ஹேலி கதைகள் எழுதும் கலையை தானே கற்றுக்கொண்டார்.

இதழியல்

ரீடர்ஸ் டைஜஸ்ட்

அலெக்ஸ் ஹேலி கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற பின் ரீடர்ஸ் டைஜஸ்ட் (Reader's Digest) இதழின் மூத்த ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தெற்கத்திய சட்டப் பள்ளியில் முதல் கறுப்பின மாணவராக வெற்றி பெற்ற தனது சகோதரர் ஜார்ஜின் போராட்டங்களைப் பற்றி இந்த இதழில் ஒரு கட்டுரை எழுதினார்.

ப்ளேபாய் இதழ்

அலெக்ஸ் ஹேலி பிளேபாய் (Playboy) இதழுக்காக நேர்காணல்கள் நடத்தினார். முதல் நேர்காணலில் ஜாஸ் இசைக்கலைஞர் மைல்ஸ் டேவிஸுடன் (Miles Davis) இனவெறி குறித்த தனது கருத்துக்களை விவாதித்தார். வேறொரு இதழுக்காக தொடங்கப்பட்டு, அது நிகழாமல் பிளேபாய் செப்டம்பர் 1962 இதழில் வெளியான இந்த நேர்காணல், பிளேபாய் இதழின் பேசுபொருள்களுக்கான பாணியாக அமைந்தது.

கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் அளித்த மிக நீண்ட நேர்காணல் ஹேலியால் பிளேபாய் இதழுக்காக நடத்தப்பட்டது.

1960-களில், அமெரிக்க நாஜிக் கட்சியின் தலைவரான ஜார்ஜ் லிங்கன் ராக்வெல்லுடனான நேர்காணலின் போது, 'தான் யூதர் அல்ல' என்று அலெக்ஸ் உறுதியளித்த பிறகே ராக்வெல் அந்தப் பேட்டிக்கு ஒப்புக்கொண்டார். நேர்காணலின் போது, ராக்வெல் மேசையில் ஒரு துப்பாக்கியை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியுடனான நேர்காணலில் முகம்மது அலி தனது பெயரை கேசியஸ் கிளே என்பதிலிருந்து மாற்றிக் கொண்டதைக் குறித்து பேசினார். ஜாக் ரூபியின் வழக்கறிஞர் மெல்வின் பெல்லி[1], பொழுதுபோக்கு கலைஞர் சம்மி டேவிஸ் ஜூனியர் (Sammy Davis, Jr.), கால்பந்து வீரர் ஜிம் பிரவுன் (Jim Brown), தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜானி கார்சன் (Johnny Carson) மற்றும் இசையமைப்பாளர் குயின்சி ஜோன்ஸ் (Quincy Jones) என்று பல பொழுதுபோக்குத் துறை பிரபலங்களுடன் அலெக்ஸ் ஹேலி நடத்திய நேர்காணல்கள் ப்ளேபாய் இதழில் வெளியாயின.

இலக்கிய வாழ்க்கை

மால்கம் எக்ஸின் தன்வரலாறு
மால்கம் எக்ஸ் (Malcolm X)

அலெக்ஸ் ஹேலியின் முதல் படைப்பு 'மால்கம் எக்ஸின் சுயசரிதை'(The Autobiography of Malcolm X) 1965-ம் ஆண்டு வெளியானது. சிறு குற்றவாளியாக இருந்து நேஷன் ஆஃப் இஸ்லாம் (Nation of Islam) என்னும் அமைப்பின் தேசியத் தலைவராக வளர்ந்து, இறுதியாக ஒரு சன்னி முஸ்லிமாக மாறிய கறுப்பினத் தலைவர் மால்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாறு இந்நூல். கருப்பின பெருமை, கருப்பு தேசியவாதம், ஆப்ரிக்க ஒருங்கிணைப்புவாதம் பற்றி மால்கம் எக்ஸின் பார்வையை முன்வைக்கிறது. அலெக்ஸ் ஹேலி இந்நூலின் சக ஆசிரியராகக் குறிப்பிடப்படுகிறார்.

1960-ம் ஆண்டில் ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழுக்காக நேஷன் ஆஃப் இஸ்லாம் பற்றிய ஒரு கட்டுரைக்காக அலெக்ஸ் ஹேலியும் மால்கம் எக்ஸும் முதன்முதலில் சந்தித்தனர். பின்னர் ப்ளேபாய் நேர்காணலுக்காக மீண்டும் சந்தித்தனர். 1963 முதல் பிப்ரவரி 1965-ல் மால்கம் எக்ஸ் படுகொலை நிகழும் வரை இடைக்காலத்தில் மால்கம் எக்ஸுடனான ஐம்பதுக்கும் மேற்பட்ட விரிவான நேர்காணல்களின் அடிப்படையில் அலெக்ஸ் ஹேலி இந்நூலை எழுதினார். நூல் முடிவடைந்த நிலையில் மால்கம் எக்ஸ் மரணத்துக்கு பின் அவரது இறுதி நாட்களைப்பற்றிய முடிவுரையை ஹேலி எழுதி இணைத்தார்.

துவக்கத்தில், நேர்காணல்கள் சரியாக அமையவில்லை. மால்கம் எக்ஸ் தனது சொந்த வாழ்க்கைக்கு பதிலாக நேஷன் ஆஃப் இஸ்லாமின் தலைவரான எலிஜா முஹம்மதுவைப் பற்றியே பேசினார். பல சந்திப்புகளுக்குப் பிறகு அலெக்ஸ் ஹேலி மால்கம் எக்ஸின் தாயைப் பற்றிக் கேட்ட கேள்விகள் அவரது வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்து கொள்ள வழிவகுத்தன.

’மால்கம் எக்ஸின் சுயசரிதை’ வெளியிடப்பட்டதிலிருந்து இன்றளவும் அதிக அளவில் விற்பனையான புத்தகமாக உள்ளது. 1977 வாக்கில் அறுபது லட்சம் பிரதிகள் விற்றிருந்தது. 1998-ம் ஆண்டில் டைம் இதழின் 20-ம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க பத்து அபுனைவு நூல்களின் பட்டியலில் இடம்பெற்றது.

அலெக்ஸ் ஹேலி மால்கம் எக்ஸின் சுயசரிதைக்காக 1966-ல் அனிஸ்ஃபீல்ட்-வுல்ஃப் (Anisfield-Wolf Book Award) புத்தக விருதைப் பெற்றார்.

வேர்கள் (Roots)
வேர்கள் (Roots) நாவலின் முகப்பு பக்கம்

1976-ம் ஆண்டு, அலெக்ஸ் ஹேலி 'ரூட்ஸ்: தி சாகா ஆஃப் அன் அமெரிக்கன் ஃபேமிலி' (Roots: The Saga of an American Family) என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் ஆப்ரிக்காவில் பிறந்து, அமெரிக்காவில் அடிமையாக விற்கப்பட்ட வம்சாவளியின் கதையைச் சொல்கிறது. இந்த வம்சத்தின் ஒரு கண்ணியாக அலெக்ஸ் ஹேலி தன்னையும் சித்தரித்துள்ளார். இந்நூலை எழுதியதன் மூலம் தனது வேர்களைத் தேடிச் சென்று கண்டடைந்ததாக அலெக்ஸ் ஹேலி குறிப்பிடுகிறார். ’ரூட்ஸ்’ உலகெங்கும் பெரும்புகழ் பெற்றது, 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 1976-ல் அமெரிக்க தேசிய புத்தக விருதை வென்றது.

கதைச்சுருக்கம்

நூலின் முதற்பகுதி 18-ம் நூற்றாண்டில் ஆப்ரிக்காவில் காம்பியா நாட்டில் மந்தின்கா இனத்தைச் சேர்ந்த குன்ட்டா கின்ட்டே என்ற இளைஞனின் வாழ்க்கையையும், அங்குள்ள சமூகத்தையும் விவரிக்கிறது. குன்ட்டா 1767-ம் ஆண்டில் அடிமை வணிகம் செய்யும் வெள்ளையரால் கடத்தப்படுகிறார். கொடுமையான கப்பல் பயணத்துக்குப் பின் சக அடிமைகளுடன் அமெரிக்காவில் மேரிலாந்து பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அடிமையாக விற்கப்படுகிறார்.

குன்ட்டா அமெரிக்கப் பண்ணைகளில் அடிமைத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார். பல ஆண்டுகள் கழித்து மற்றொரு அடிமைப் பெண்ணை மணந்துகொள்கிறார். அவர்களது மகள் 16 வயதில் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு விற்கப்படுகிறாள். பின்னர் நூல் அவளது வாழ்க்கை, குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று அமெரிக்க பொது வரலாற்றுக்கு இணைக்கோடாக தொடர்ந்து பரவுகிறது. சுரண்டல்கள், பாலுறவுக் கொடுமைகள், கல்வியும் அடிப்படை உரிமைகளும் ஒடுக்கப்பட்ட கீழ்நிலை வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் இத்தொடரின் ஆறாம் தலைமுறையச் சேர்ந்த பெர்த்தா ஹேலி தான் தன் தாய் என்று அலெக்ஸ் ஹேலி சொல்கிறார்.

குன்ட்டா கின்ட்டேயின் காலத்திலேயே அவரது பூர்வீக நில வாழ்க்கையின், அதன் பண்பாட்டின் நினைவுகள் மங்கி மறையத் தொடங்கிவிடுகின்றன. அடிமை வாழ்க்கையில் குடும்பங்கள் மீண்டும் மீண்டும் சிதைக்கப்பட்டு சிதறுகின்றன, பெற்றோர் பெயர் உட்பட அவர்களுக்கு எதுவுமே நினைவில் இருப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் தங்கள் முன்னோர் பேசிய மந்தின்கா மொழியின் ஒருசில சொற்களை மட்டும் தங்களது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு சொல்லித் தருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அவற்றைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த பூர்வீக வரலாறும் தெரிவதில்லை.

இருபதாம் நூற்றாண்டில் அலெக்ஸ் ஹேலியின் பாத்திரம் இந்தச் சொற்களை கவனிக்கிறது. அலெக்ஸ் ஹேலி அவற்றை மொழியியலாளர்களின் உதவியுடன் ஆராய்ந்து அது ஆப்ரிக்காவில் எப்பகுதியில் பேசப்பட்ட மொழி என்று கண்டறிகிறார். அடிமை ஆவணங்களை தேடி எடுத்து அவற்றின் மூலம் தன் குடும்ப வரலாற்றை உருவாக்க முற்படுகிறார், குன்ட்டா கின்ட்டே என்ற முதல் தலைமுறை அடிமை பற்றி அறிகிறார்.

அலெக்ஸ் ஹேலி தன் பண்பாட்டு வேர்களைத் தேடி காம்பியா பயணப்படுகிறார். அங்கு தன் முன்னோர் வாழ்ந்த ஜுஃபுரே கிராமத்தில், பழங்குடிகளின் பாணர்களை சந்திக்கிறார். அவர்கள் வாய்மொழியாக பாடும் வம்ச வரலாறுகளில் தன் முன்னோரான குன்ட்டா கடத்தப்பட்டது பற்றிய ஒரு சிறுகுறிப்பும் இருப்பதை கேட்கிறார். அமெரிக்காவுக்கு திரும்பும் அலெக்ஸ் ஹேலி, இருநூறு ஆண்டுகளுக்கு முன் தன் முன்னோர் குன்ட்டா சங்கிலிகளால் கட்டப்பட்ட அடிமையாக வந்திறங்கிய அனாபோலிஸ் துறைமுகத்துக்கு வரும் இடத்தில் நாவல் முடிகிறது.

நூலுக்கான வரவேற்பு

மொழி மூலம் பண்பாட்டின், ஆதி நிலத்தின் நினைவுகள் தக்கவைக்கப்படுவதன் சித்தரிப்புக்காக 'வேர்கள்' நாவல் கொண்டாடப்பட்டது. 1960-70களில் அமெரிக்க கறுப்பின குடி உரிமைப் போராட்டங்களும், அதன் தொடர்ச்சியாக கறுப்பின பண்பாட்டு வரலாற்றின் மீதான புதிய கவனமும் எழுந்த காலகட்டத்தில் அலெக்ஸ் ஹேலியின் படைப்பு பரவலான கவனம் பெற்றது.

ரூட்ஸ் நாவல் 1976-ல் வெளியிடப்பட்டது, பல்வேறு விமர்சகர்களாலும் ஆளுமைகளாலும் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு விற்பனையில் முதல் இடத்தில் இருந்தது சாதனை படைத்தது. 37 மொழிகளில் வெளியிடப்பட்டது. நாவலின் வெற்றியைத் தொடர்ந்து, கறுப்பின பண்பாட்டு வரலாற்றாய்வு, தனிக் குடும்ப வரலாற்றாய்வு போன்றவற்றில் ஆர்வம் பெருகியது.

நூல் விவாதங்கள் & மதிப்பீடு

அலெக்ஸ் ஹேலி ரூட்ஸில் தகவல்களையும் புனைவுகளையும் கலந்து எழுதியுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அலெக்ஸ் ஹேலியும் அவரது ஆதரவாளர்களும் படைப்பில் சிற்சில விவரங்கள் தவறாகவே இருக்கலாம் என ஒத்துக்கொண்டுள்ளனர். ஆனால் புனைவு - ஆவணம் என்ற கடுமையான வரைமுறைகளுக்கு உட்படாமல், அவற்றுக்கு நடுவே ஊடாடும் ஒரு பண்பாட்டு மொழிபுத் தொகுப்பாகவே இப்படைப்பை பார்க்கவேண்டும் என்ற கருத்து இன்று திரண்டுள்ளது.

அதிகாரபூர்வ வரலாற்று மொழிபுக்கு இணையாகவே, ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறும் பல்வேறு சிதைவுகளினூடே வாய்மொழியாக எஞ்சுவதை, அதன் மீட்சிக்கான தார்மீக தேவையை சித்தரிப்பதில் நாவல் வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது.

தொலைக்காட்சித் தொடர்

ரூட்ஸ்' நாவல் பதிப்பு பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, 1977-ல் தொலைக்காட்சிக் குறுந்தொடராக எடுக்கப்பட்டது. இத்தொடருக்கு ஒன்றரை கோடி பார்வையாளர்கள் இருந்ததாக புள்ளி விவரங்கள் உள்ளன. 1979-ம் ஆண்டு ஏபிசி தொலைக்காட்சி நிறுவனம் ’ரூட்ஸ்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்ஸ்’ (Roots: The Next Generations) என்ற பெயரிலும், 1988-ம் ஆண்டு 'ரூட்ஸ்: தி கிப்ட்' என்ற பெயரிலும் தொடர்கள் வெளியிடப்பட்டன. 2016-ம் ஆண்டில் ஹிஸ்டரி சேனல் நிறுவனம் இத்தொடரின் மறுஆக்கத்தை தயாரித்தது.

குயின் (நாவல்)

1970-களின் பிற்பகுதியில் அலெக்ஸ் ஹேலி 'குயின்' என்ற பெயரில் ஒரு வரலாற்று நாவல் எழுதத் தொடங்கினார். ரூட்ஸ் போலவே ஆவணத்தன்மை கொண்ட புனைவான இந்நாவல், அலெக்ஸ் ஹேலியின் இன்னொரு குடும்பக் கிளையான தந்தை வழிப் பாட்டி குயினின் கதையைச் சொல்கிறது. வெள்ளை இன முதலாளிக்கும் கறுப்பின அடிமைக்கும் பிறந்த குயினின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை தான் இந்நாவலின் கரு.

அலெக்ஸ் ஹேலியால் தன் வாழ்நாளில் நாவலை முடிக்க இயலவில்லை. அவர் இறப்பதற்கு முன் கேட்டுக்கொண்டதன்படி டேவிட் ஸ்டீவன்ஸ் என்பவர் இந்நாவலை நிறைவு செய்தார். இந்நூல் 1993-ம் ஆண்டு ’அலெக்ஸ் ஹேலியின் குயின்’ (Alex Haley's Queen) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் தொலைக்காட்சி குறுந்தொடர் வடிவம் பெற்றது.

பிற பணிகள்

1980-களின் முற்பகுதியில், அலெக்ஸ் ஹேலி வால்ட் டிஸ்னி நிறுவனம் ஃப்ளோரிடா மாகாணத்தில் எப்காட் மையம் என்னும் கருத்துக்கருப் பூங்காவை (theme park) உருவாக்கிய போது அதனுடன் இணைந்த பூமத்திய ரேகை ஆப்பிரிக்க விதான மண்டபத்தை( Equatorial Africa pavillion) உருவாக்கும் திட்டத்தில் டிஸ்னி நிறுவனத்துடன் பணியாற்றினார். அரசியல் மற்றும் நிதிச் சிக்கல்கள் காரணமாக பெவிலியன் கட்டப்படவில்லை.

திரைக்கதை

1973-ம் ஆண்டில், அலெக்ஸ் 'சூப்பர் ஃப்ளை டி.என்.டி.’ என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார். இப்படத்தை ரான் ஓ'நீல் இயக்கினார்.

மறைவு

அலெக்ஸ் ஹேலி பிப்ரவரி 10, 1992-ல் தனது எழுபதாவது வயதில் இதய நோய் காரணமாகக் காலமானார்

விவாதங்கள்

அலெக்ஸ் ஹேலியின் புகழ்பெற்ற புத்தகமான 'ரூட்ஸ்’, கருத்துத் திருட்டு மற்றும் பதிப்புரிமை மீறலுக்காக இரண்டு வழக்குகளை எதிர்கொண்டது. அலெக்ஸ் மீது மார்கரெட் வாக்கர் என்பவர் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் ஹரோல்ட் கோர்லாண்டர் என்பவரின் தொடத்த வழக்கு வெற்றி பெற்றது. கோர்லாண்டரின் 'தி ஆஃப்ரிக்கன்’ புத்தகம் ஆப்பிரிக்க அடிமை வணிகர்களால் அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட ஒரு ஆப்பிரிக்க சிறுவனின் கதையைச் சொல்கிறது. அந்த புத்தகத்தின் சில பகுதிகள் தனது ’ரூட்ஸ்’ புத்தகத்தில் தோன்றியதாக அலெக்ஸ் ஹேலி ஒப்புக்கொண்டார். 1978-ம் ஆண்டு ஹேலி கோர்லாண்டருக்கு, அன்றைய மதிப்பில் ஆறரை லட்சம் டாலர்கள் செலுத்தி வழக்கை முடிவுக்கு கொண்டுவந்தார்.

ரூட்ஸில் ஹேலியின் ஆராய்ச்சி குறித்து சில வல்லுநர்கள் ஹேலி நாவலில் கேம்பியாவில் சந்தித்த கதைசொல்லி நம்பத்தகுந்தவர் அல்ல என்றும் அந்தக் கதைசொல்லி ஹேலி எழுதிய குன்ட்டா கிண்டேயின் வரலாற்றையே அவருக்குத் திரும்பச் சொல்லியிருக்கலாம் (circular reporting) என்றும் கருதுகின்றனர். குன்ட்டா கிண்டேவின் கதை ஹேலியின் சொந்த கற்பனையிலிருந்து வந்திருக்கலாம். வர்ஜீனியா மற்றும் வட கரோலினாவின் எழுதப்பட்ட 1861-ன் உள்நாட்டுப் போர் வரையான வரலாற்றுச் செய்திகள், ஆதாரங்கள் எதுவும் ரூட்ஸ் கதையில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள், மனிதர்களுடன் பொருந்தவில்லை. ஹேலியின் குடும்பக் கதையின் சில பகுதிகள் உண்மை. ஆனால் உண்மையான வம்சாவளி அவர் விவரித்ததிலிருந்து வேறுபட்டிருக்கலாம்” என வம்சாவளி வல்லுனர்கள் கருதுகின்றனர்.

சிறந்த விற்பனையான எழுத்தாளராக இருந்தபோதிலும், அலெக்ஸ் ஹேலியும் அவரது படைப்புகளும் ஆப்பிரிக்க-அமெரிக்க இலக்கியத் தொகுப்பான நார்டன் தொகுப்பில் (Norton Anthology of African-American Literature) சேர்க்கப்படவில்லை. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹென்றி லூயிஸ் கேட்ஸ், "இந்த விலக்கு சர்ச்சைகளால் அல்ல,.அலெக்ஸ் உண்மையில் தனது மூதாதையர்கள் தோன்றிய கிராமத்தை கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லை என்று எம்மில் பெரும்பாலோர் கருதுகிறோம். ரூட்ஸ் வரலாற்று நாவல் என்பதைவிட கற்பனைப் படைப்பு என்றே கொள்ளப்படும்" என்று வரையறுக்கிறார்.

மதிப்பீடு

இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க சமூகச் சூழலில் கறுப்பின பார்வைக் கோணங்களை மைய உரையாடலுக்கு கொண்டுவந்து கவனப்படுத்தியவர்களில் அலெக்ஸ் ஹேலி முக்கியமானவராகக் கருதப்படுகிறார். கறுப்பினத் தலைவர்களுடனான பேட்டிகள், கறுப்பின அடிமை வரலாற்றை குடும்பச் சித்திரங்களாக எழுதியது போன்ற இலக்கியச் செயல்பாடுகள் மூலம், தன் சமகாலத்தில் வெள்ளை-கறுப்பு இனக் காழ்ப்புகளைக் கடந்து உணர்வு ரீதியான அணுக்கம் ஏற்பட வழிவகுத்தவராக மதிப்பிடப்படுகிறார். வரலாற்றெழுதுத்து, வாய்மொழி வரலாற்றின் இயங்குமுறை போன்றவை பற்றிய இலக்கிய ரீதியான கவனம் ஏற்படுத்தினார்.

விருதுகள், பரிசுகள்

  • மால்கம் எக்ஸின் சுயசரிதைக்காக அனிஸ்ஃபீல்ட்-வுல்ஃப் (Anisfield-Wolf Book Award) புத்தக விருது (1966)
  • ரூட்ஸ் நாவலுக்காக அமெரிக்க தேசியப் புத்தக விருது, 1976
  • 'ரூட்ஸ்' நாவலுக்காக புலிட்சர் சிறப்புப் பரிசு, 1977
  • 'ரூட்ஸ்' நாவலின் கருப்பின மக்களின் வாழ்வியல் ஆராய்ச்சிக்காக அமெரிக்க கறுப்பர் சங்கம் வழங்கிய ஸ்பிங்கார்ம் பதக்கம், 1977
  • அமெரிக்க சாதனை அகாதெமியின் தங்கத்தட்டு விருது, 1977
  • கொரியக் குடியரசின் கொரிய போர் வீரர்களுக்கான பதக்கம் (1999, இறப்புக்குப் பின்)

நினைவுச் சின்னங்கள்

  • அடிமை வணிகத்தின் முக்கிய இடமாக விளங்கிய அனாபோலிஸ் நகர துறைமுகத்தில், 1981-ல் அலெக்ஸ் ஹேலியைப் பாராட்டி ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது. வெள்ளை இன மேட்டிமைவாதிகளால் இது திருடப்பட்டது. பின்னர் 2002-ல் இதே இடத்தில் அலெக்ஸ் ஹேலி பல்வேறு இனக் குழந்தைளுக்கு கதை சொல்வது போன்ற சிற்பத் தொகை நிறுவப்பட்டுள்ளது. 'குன்ட்டா கின்ட்டே-அலெக்ஸ் ஹேலி நினைவுச்சின்னம்' என்று இது பெயரிடப்பட்டுள்ளது[2]
  • அலெக்ஸ் ஹேலியின் சொந்த சேகரிப்பில் இருந்த ஆவணங்கள், அவரது கைப்பிரதிகள், குறிப்புகள் போன்றவை காங்கிரஸ் நூலகம், டென்னஸி பல்கலை நூலகம், ப்ளோரிடா பல்கலை ஆப்ரிக்க அமெரிக்கர் ஆவண நூலகம், நியுயார்க் பொது நூலகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
  • டென்னஸி மாநிலத்தில் அலெக்ஸ் ஹேலி வாழ்ந்த ஹென்னிங் ஊரில் அவரது குடும்ப வீடு ஒரு அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்டுள்ளது
  • அலெக்ஸ் ஹேலி பிறந்த ஊரான நியுயார்க் மாநிலம் இத்தாக்கா நகரில் ஒரு நினைவுப் பலகை வைக்கப்பட்டுள்ளது
  • கலிஃபோர்னியா மாநிலம் பெடாலூமாவில் உள்ள அமெரிக்க கடலோர காவற்படையின் உணவுத்துறைக் கட்டிடத்துக்கு 'ஹேலி ஹால்' எனப் பெயரிடப்பட்டது.
  • அமெரிக்க கடலோர காவற்படை ஓர் கப்பலுக்கு 'USCGC Alex Haley' எனப் பெயரிட்டது
  • அமெரிக்க கடலோர காவற்படை கடற்படை குறித்து எழுதும் சிறந்த செய்தியாளருக்கு 'அலெக்ஸ் ஹேலி விருது' வழங்குகிறது
  • அலெக்ஸ் ஹேலி தனது பிற்கால ஆண்டுகளில், டென்னசி மாகாணத்தில் உள்ள கிளின்டன் எனும் ஊரில் ஒரு சிறிய பண்ணையை வாங்கினார். அந்த இடம் இன்று ஒரு குழந்தைகள் நல அமைப்பின் மேற்பார்வையில் 'அலெக்ஸ் ஹேலி பண்ணை' என்ற பெயரில் பயிற்சி மையமாகவும் நூலகமாகவும் உள்ளது. கட்டிடக் கலைஞர் 'மாயா லின்’ (Maya Lin) பண்ணையில் ஒரு பாரம்பரிய களஞ்சியத்தை வடிவமைத்தார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. ஜாக் ரூபி அமெரிக்க அதிபர் கென்னடியைச் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்ட்வால்டை சுட்டுக் கொன்றவர். மெல்வின் பெல்லி ஜாக் ரூபிக்காக வாதாடிய வழக்கறிஞர்.
  2. குன்ட்டா கின்ட்டே அலெக்ஸ் ஹேலி நினைவுச்சினம், இணைய தளம்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Jul-2024, 08:45:42 IST