under review

அர்ச். யாகப்பர் அம்மானை

From Tamil Wiki
அர்ச். யாகப்பர் அம்மானை

அர்ச். யாகப்பர் அம்மானை (1647) இலங்கையில், போர்த்துகீசியர் காலத்தில் தோன்றிய நூல். இதனை இயற்றியவர் பேதுருப் புலவர். அர்ச். யாகப்பரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் இறை நிலை அடைந்ததையும், அவர் செய்த அற்புதங்களையும் இந்த நூல் கூறுகிறது. இது ஓர் அம்மானை நூல்.

பிரசுரம், வெளியீடு

பேதுருப் புலவரால், பொ.யு. 1647-ல், இயற்றப்பட்ட நூல் அர்ச். யாகப்பர் அம்மானை. இந்நூல், யாழ்ப்பாணம் அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திரசாலையில் பிரசுரிக்கப்பட்டது. 1930-ல், இதன் மூன்றாம் பதிப்பு வெளியானது.

ஆசிரியர் குறிப்பு

பேதுருப் புலவர், இலங்கையில், போர்த்துகீசியர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த முன்னோடித் தமிழ்ப் புலவர். முறையாகத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர். தெல்லிப்பழையில், சமயப் பணியாற்றி வந்த சுவாங் கறுவாலி சுவாமியின் வழிகாட்டுதலின்படியும், மதுரையிலிருந்து கிடைத்த அகவற்பாக்களின் துணை கொண்டும் அர்ச். யாகப்பர் அம்மானை நூலைஇயற்றினார். கிளாலி என்னும் கிராமத்தில் இருந்த புனித பெரிய யாகப்பர் ஆலயத்திற்கு வரும் தரும் பக்தர்கள் படித்துப் பயனடைவதற்காக அர்ச். யாகப்பர் அம்மானை நூல் இயற்றப்பட்டது.

நூலின் கதை

யாகப்பர் எனும் யாக்கோபு (James) இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவர். இயேசுவுக்கு மிக நெருக்கமான சீடராக இருந்தவர். இயேசுவைச் சிலுவையில் அறைவதற்காக, நள்ளிரவில் அவரைக் கைதுசெய்ய வந்தபோது இயேசுவுடன் இருந்த மூவருள் ஒருவர். (பிறர்: பேதுரு, யோவான்) இயேசுவுக்குச் சகோதர உறவு முறை உள்ளவர். இயேசுவின் மறைவுக்குப் பின் யாகப்பர், மதப் பரப்புரைக்காக இஸ்பானியா (ஸ்பெயின்) சென்றார். கிறிஸ்தவ மத வேத உண்மைகளை அங்குள்ள மக்களுக்குப் போதித்தார்.

யாகப்பர், மக்களுக்கு வேத உண்மைகளைப் போதித்து வந்ததை பழமைவாத நோக்கம் கொண்டிருந்த யூதர்கள் எதிர்த்தனர். மன்னன் ஏரோதுவிடம் புகார் அளித்தனர். யாகப்பரின் செயல்களை அறிந்த ஏரோது மன்னன் மிக்க சினம் கொண்டான். யாகப்பருக்கு அவன் மரண தண்டனை விதித்தான். யாகப்பர் தலை வெட்டப்பட்டு வேதசாட்சியாய் மரித்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் யாகப்பருடைய சீடர்கள் அவருடைய கல்லறையைத் தோண்டி அவருடைய எலும்புகளை தங்களுடைய நாட்டிற்கு எடுத்து சென்றனர். அங்கு யாகப்பருக்கு ஆலயம் ஒன்றை அமைத்தனர். புனிதரான யாகப்பர் அந்த ஊர் மன்னனையும், மக்களையும் காத்தார். பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். மக்கள் அவரைப் புனிதராகப் போற்றி வணங்கினர்.

நூல் அமைப்பு

அர்ச். யாகப்பர் அம்மானை ஓர் அம்மானை நூல். இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில் யாகப்பரின் வாழ்க்கை வரலாறும், அவரது திரு உடல் எஸ்பாஞாவில் அடக்கம் செய்யபட்டதுமான செய்திகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது பிரிவு, ஸ்பெயின் நாட்டைப் பிற சமயங்களைச் சார்ந்தவர்களின் படையெடுப்பிலிருந்து புனித யாகப்பரின் அருள் பாதுகாத்ததையும், அர்ச். யாகப்பரின் திருக்கோயிலுக்கு பக்தர்கள் செல்வதையும், அவர்களுக்கு நிகழ்ந்த அற்புதங்களையும் கூறுகிறது.

பொதுப்பாயிரம், காப்புச்செய்யுள், தற்சிறப்புப் பாயிரத்தை அடுத்து நூல் இயற்றக் காரணம், அவையடக்கம் ஆகியன நூலின் முன்னுரை போல் அமைந்துள்ளன. பெரும்பான்மை விருத்தப்பாக்களினால் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.

முதல் பிரிவு கீழ்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.

  • கலிலேயா நாடு நகரச் சிறப்பு
  • அர்ச். யாகப்பரின் பெற்றோர் நிலைமை
  • கருத்தரித்தல்
  • அர்ச். யாகப்பரின் ஜெனனம்
  • திருநாமம் தரித்தல்
  • தொட்டிலேற்றல்
  • பாலிய விளையாட்டு
  • கலை பயிலல்
  • தொழில் பயிலல்
  • திவ்விய இரட்சகர் அழைத்தல்
  • திவ்விய இரட்சகரின் சீஷனாதல்
  • இரட்சகரிடம் தொண்டு புரிதல்
  • எஸ்பாஞாவில் வேதம் போதித்தல்
  • எஸ்பாஞாவில் தேவ மாதவின் தரிசனமும் கலிலேயாவுக்குத் திரும்பிச் செல்லலும்
  • எரிமோசு பிலேத்தை அனுப்பலும் பிலேத்து மனத் தெளிவுறலும்
  • எரிமோசு பிசாசுகளையேவல்
  • எரிமோசு ஏவிய பேய்கள் எரிமோசைப் பிடித்துச் செல்லல்
  • எரிமோசு மனந்திரும்புதல்
  • ஏரோதையின் அரசியல்
  • யாகப்பரைப் பிடித்து ஏரோதையிடங் கொண்டு செல்லல்
  • ஏரோது கொலைத் தீர்ப்பிடல்
  • கொலியசு மனந்திரும்பி யாகப்பரோடு மரித்தல்
  • சீஷர் சடலத்தையெடுத்து எஸ்பாஞாவுக்குக் கொண்டேகல்
  • திருவுடலைக் கொம்பெஸ்தெல்லவென்னும் பட்டினத்திற்குக் கொண்டு சென்றது
  • உடலடக்க லோப்பாளிடம் அனுமதிபெறச் சென்றது
  • உரோமை ராச்சியத்தின் எஸ்பாஞ அதிபதியின் அரசியல்
  • எஸ்பாஞ அதிபதியின் சீற்றம்
  • அதிபதி சீடரைச் சிறையிடலும் தேவதூதன் நீக்கலும்
  • தேடிச் சென்ற வீரர் மாளல்
  • அதிபதிக்கு மந்திரிமார் புத்திகூறியது
  • அதிபதி பொறுதிகேட்டல்
  • அதிபதிக்குப் போதித்தல்
  • அதிபதி திருமறையை அனுசரிக்கவிரும்பல்
  • அதிபதி ஞானஸ்நானம் பெறல்
  • உடலையடக்க உத்தவுகொடுத்தல்
  • உலோப்பாள் செய்த தீமை நன்மையாதல்
  • திருவுடலை அடக்கம் செய்தல்

இரண்டாம் பிரிவில் உள்ள பகுதிகள்

  • எஸ்பாஞாவை அர்ச். யாகப்பர் காத்தல் - பாயிரம்
  • எஸ்பாஞாவின் சிறப்பு
  • அர்ச். யாகப்பரின் திருவுடலெடுத்தடக்கிக் கோயில்கட்டல்
  • சோனகர் ஆட்சியின்கீழ் எஸ்பாஞாவின் நிலைமை
  • சோனகமன்னன் கப்பங்கேட்டல்
  • படையெடுத்துவரல்
  • றெம்மில்படை தோற்றோடலும் தேற்றலும்
  • மறுபடி போர்பொருதல்
  • கிறிஸ்தவரின் வெற்றி
  • அர்ச். யாகப்பர் காட்சியளித்தல்
  • அர்ச். யாகப்பர் போர்செயித்தல்
  • அர்ச். யாகப்பரின் திருக்கோயிலுக்கு யாத்திரிகள் செல்லல் - கோயிலுக்குச் சென்றோன் கொலைப்படல்
  • தந்தை புலம்பல்
  • கொலையுண்டவனுயிர்த்தல்
  • கழுத்தறுத்தோன் உயிர்த்தல்
  • முடிவுரை

பாடல் நடை

நூல் தோன்றிய விதம்

பாண்டிக் கரையதனிற் பரதர்கள் கோத்திரத்தோர்
வேண்டுசந்தி யோகுகதை விருத்தப்பா வாயுரைத்தார்
வேறுமிது வன்றி வேண்டும் பெரியோர்கள்
கூறினார் மெத்தக் குறிப்பான காரியங்கள்
ஆனதெல்லாங் கற்றுணர்ந்து அற்பபுத்தி யோடுலகர்
தானறிய விக்கதையைச் சாற்றுகிறேன் கேட்டருளீர்

குழந்தை யாகப்பர் தாலாட்டு

மாணிக்கச்செப்பே வயிரமணிவிளக்கே
ஆணிப்பொன்னென்ன அழகுசெறிபளிங்கே
மின்னாள்சலோமை விளங்குந்திருவயிற்றின்
பொன்னேயிரத்தினமே போற்றிசெறிபுத்திரனே
கொஞ்சுகிளிக்குழந்தாய் கோகிலமேகோமளமே
அஞ்சாதேபஞ்சணையில் ஆரமுதே பள்ளிகொள்ளாய்
ஆராரோதாராரோ வன்பனேபள்ளிகொள்ளாய்
சீரார்சலோமை திருமகனேபள்ளிகொள்ளாய்

முடவன் நடந்தது, யாகப்பர் கொலை செய்யப்படுவது

மன்னனேரோதை மொழிந்த வுரைப்படி மாசறுயாக்கோபை
அன்னியரிட்ட வடத்தொடு கொலைபுரி யக்களமேகையிலே
உன்னிமனத்துய ரோடேவழிதனி லோதுவ தொருமுடவன்
என்னையிரட்சைசெய் சந்தியாகே யெனவின் பாடியம்பலுமே
அழுதுமெய்சோரவே கழல்கரமோருறு மங்கம தானவெல்லாம்
பழுதுடையானெமை யாள்பவனான பரப்பொருடன் துணையால்
வழுவறவேமண்ணி லேநடவென்றிட மகிமையோடே யவனும்
எழுதரிதாநவ மாகநடந்து மிணங்க விருந்தனனே
கால்கரமின்றிய முடவனடந்தது கண்டு யாக்கோபுவுடை
சீலமதான கழுத்தினில் வார்தொடு தீயவன்கோலியசு
ஆலமுளேனடி யேனுமைவன்புட னவமதி செய்ததெலாந்
தாலமிதேபொறு மென்றுதீயோகுடை சரணில் விழுந்தனனே
சரணில்விழுந்துயர் மாமறைதாவெனச் சற்குரு யாக்கோபு
பரணருள்வேதமுள் ளாகவேயவனைப் பண்பொடி ருத்தலுமே
மரணமதாகிட விருவரையுங்கொலை வைத்தன ரக்கணமே
ரணமதாகவே விண்ணுறையாதியி னிணையடி சென்றனரே

வாழ்த்து

கண்ட வினைநீக்கிக் கற்றோர்கள் முன்னேற்றி
அண்டர்சந்தி யாகுகதை யன்பா யவனியிலே
ஆசையுற்றுக் கேட்போ ரறிந்தெழுதி யேபடிப்போர்
வாசமுற்ற பூவைவிடின் வானுலகஞ் சேருவர்காண்
மாதமும் மூன்றுமழை மங்காம லேதினமும்
சேதமின் றிப்பெய்யுந் திருந்துகி ளாலிநகர்
மேற்குத் தெருவில் விளங்குமந்த ஆலயத்தில்
ஆர்க்கு மொருவேத மகமகிழப் போதுவித்த
வேதமிக வாழி வேல்வேந்தர் தாம்வாழி
ஓது மறைக்குருக்க ளுற்ற கிறிஸ்தவர்கள்
சத்திய வேத சபைக்குரிய பேர்களெல்லாம்
நித்தியம் மேன்மேலும் நேசமாய் வாழியவே

மதிப்பீடு

அர்ச். யாகப்பர் அம்மானை என்னும் சந்தியாகு மாயோர் அம்மானை, கிறித்தவ அம்மானை நூல்களுள் குறிப்பிடத்தகுந்தது. இயேசுவின் அடியாரது வாழ்க்கையை விரிவாகக் கூறுகிறது. சந்த நயமும், எளிய, இனிய நடையும் கொண்ட இந்நூல், இலங்கையின் முன்னோடி அம்மானை நூல்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page