அரு. சோமசுந்தரன்
அரு. சோமசுந்தரன் (அருணாசலம் சோமசுந்தரன்; அருசோ; அரு. சோமசுந்தரன் செட்டியார்; பொற்கிழிக் கவிஞர் அருசோ) (ஆகஸ்ட் 14, 1936 - டிசம்பர் 30, 2023) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார். 'பொற்கிழிக் கவிஞர்', 'கவிஞர் கோ' என பல்வேறு பட்டங்கள் பெற்றார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியவராக அறியப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
அரு. சோமசுந்தரன், ஆகஸ்ட் 14, 1936 அன்று, ராமநாதபுரம் மாவட்டம் (இன்றைய சிவகங்கை) புதுவயலில், முத்துராமன் - மீனாட்சி இணையருக்குப் பிறந்தார். அருணாசலம் - வள்ளியம்மை இணையருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். புதுவயலில் உள்ள ஸ்ரீ சரசுவதி வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி கற்றார். கண்டனூரில் உள்ள சிட்டாளாச்சி உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார்.
கல்லூரிப் படிப்பை காரைக்குடி அழகப்பா கல்லூரியில் கற்றார். இளங்கலைப் படிப்பில் மாநில அளவில் முதலாவதாய்த் தேறி 'ஜி.யு. போப் தங்கப்பதக்கம்' பெற்றார். சேலம் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அரசினர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பி.டி. பட்டம் பெற்றார். தமிழில் முதுகலை பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
அரு. சோமசுந்தரன் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி நீலா. பிள்ளைகள்: பொன்முடி, இளவெயினி, மங்கையர்க்கரசி மீனாட்சி.
கல்விப் பணிகள்
அரு. சோமசுந்தரன், 1958-ல், மதுரையில், 'பாங்க் ஆஃப் மதுரை' நிறுவனத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். 1959 முதல், திருவாரூரிலும், தேவகோட்டையிலும் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1963 முதல் சண்முகநாதபுரத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1967 ஜூன் முதல் காரைக்குடியில் உள்ள 'செட்டிநாடு தனிப் பயிற்சிக் கல்லூரி'யில் முதல்வராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
அரு. சோமசுந்தரனின் முதல் கவிதை 1952-ல் வெளியானது. தொடர்ந்து இதழ்களிலும், மலர்களிலும் பல்வேறு கவிதைகளை எழுதினார். முதல் கவிதைத் தொகுப்பு 1962-ல் வெளியானது. தொடர்ந்து பல தொகுப்புகள் வெளிவந்தன. யாத்திரைப் பாடல்கள், அந்தாதி, பிள்ளைத்தமிழ், பக்திப் பாடல்களை எழுதினார். சிறார்களுக்காகவும் பாடல்கள், கதைகளை எழுதினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை எழுதினார். தான் சென்று வந்த, அறிந்த 18 நாடுகள் பற்றிய பயணக் கட்டுரை நூல்களை எழுதினார்.
அரு. சோமசுந்தரன் பல்வேறு கருத்தரங்குகளிலும், மாநாட்டு நிகழ்வுகளிலும், தமிழ்ச்சங்க நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். இலங்கையில் நடைபெற்ற நான்காம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு 'இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதை' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.
அரு. சோமசுந்தரனின் 'உயர்கல்வி தந்த உத்தமர்கள்' நூல், தமிழ்நாட்டின் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாட நூலாக வைக்கப்பட்டது.
அரு. சோமசுந்தரன் எழுத்துலகின் பல்வேறு துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
மொழிபெயர்ப்பு
அரு. சோமசுந்தரன் மொழிபெயர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஷேக்ஸ்பியரின் பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
ஊடகம்
அரு. சோமசுந்தரன் சென்னை, திருச்சி, இலங்கை வானொலிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நாடகம்
அரு. சோமசுந்தரன், கல்லூரியில் படிக்கும்போது 'வேலின் முனை' என்னும் நாடகத்தை எழுதி நடித்தார். தொடர்ந்து சில நாடகங்களை எழுதினார்.
ஆன்மிகம்
அரு. சோமசுந்தரன் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பல ஆன்மிகச் சுற்றுப்பயணங்களை ஒருங்கிணைத்து நடத்தினார். 1983-ல், பதிமூன்று பேர் கொண்ட குழுவினரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, பாரம்பரிய முறைப்படி காசிக்கு பாத யாத்திரை சென்றார். காசி விஸ்வநாதர் கோயிலில் உத்திரபிரதேச அரசு வழங்கும் 'காசிஸ்ரீ' பட்டம் பெற்றார். அப்பட்டம் பெற்ற முதல் தமிழராக அறியப்படுகிறார். தொடர்ந்து அறுபடை வீடுகளுக்கும் காவடிகளுடன் பாதயாத்திரை சென்றார்.
அரு. சோமசுந்தரன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பெற்ற பொற்கிழிக் காவியப் போட்டியில் 'பாண்டிமாதேவி' என்னும் காப்பிய நூலுக்காக முதல் பரிசு பெற்றார். 'அன்னை மீனாட்சி அந்தாதி', 'ஸ்ரீ குருதட்சணாமூர்த்தி பிள்ளைத்தமிழ்', 'காசி-ராமேசுவரம் வெண்பா', 'காசி-ராமேசுவரம் அந்தாதி' போன்ற பல ஆன்மிகச் சிற்றிலக்கிய நூல்களை எழுதினார்.
கதாகாலட்சேபம்
அரு. சோமசுந்தரன், 1974 முதல் பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி, மதுரை மீனாட்சி, சிலப்பதிகாரம், இராமாயணம், மகாபாரதம், இலக்கியம், ஆன்மிகம் சார்ந்து பல கதாகாலட்சேப நிகழ்வுகளை நடத்தினார்.
இதழியல்
அரு. சோமசுந்தரன், 1957-ல், மதுரை 'தமிழ்நாடு' இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
பதிப்பு
அரு. சோமசுந்தரன், 1963-ல், பொன்முடி பதிப்பகம் என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் தனது நூல்கள் பலவற்றை வெளியிட்டார்.
பொறுப்புகள்
- தஞ்சை மாவட்ட ஆசிரியர் கழகச் செயலாளர்
- இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் கழகச் செயலாளர்
- இராமநாதபுர மாவட்டத் தமிழாசிரியர் கழக நிறுவனர், தலைவர்
- இராமநாதபுரம் மாவட்ட அருள்நெறி மன்றத் தலைவர்
- எட்டயபுரம் உலகத்தமிழ்ச் சங்க அமைப்புத் தலைவர்
- காரைக்குடி அரிமா சங்க உறுப்பினர்
விருதுகள்
- குன்றக்குடி அடிகளார் அளித்த 'பல்துறைச் செந்நாப் பாவலர்' பட்டம்
- குன்றக்குடி அடிகளார் வழங்கிய 'கவிக்கோ' பட்டம்.
- தமிழக அரசின் பொற்கிழி
- தமிழக அரசின் பொற்பதக்கம்
- உத்திரப்பிரதேச அரசு வழங்கிய 'காசிஸ்ரீ' பட்டம்
- காரைக்குடி நாடகத் தமிழ் மன்றத்தின் கலையரசர் விருது
- மதுரை பழம்நீ பாதயாத்திரை அறநிலை வழங்கிய அருள்நெறித் தொண்டர் பட்டம்
- மதுரை தமிழிசைச் சங்கம் அளித்த 'முத்தமிழ்ப் பேரறிஞர்' பட்டம்
- கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய 'மகாகவி பாரதி' விருது
- பாரதி தமிழ்ப்பணி இயக்கத்தின் பாரதி தமிழ்ப்பணிச் செல்வர் விருது
- செந்தமிழ் வித்தகர் பட்டம்
- கவிஞர் கோ பட்டம்
மறைவு
அரு. சோமசுந்தரன், டிசம்பர் 30, 2023-ல் காலமானார்.
ஆவணம்
அரு. சோமசுந்தரனின் வாழ்க்கை வரலாற்றை 'பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன் வரலாறு' என்ற தலைப்பில் சி. இராமசாமி எழுதினார். பொன்முடிப் பதிப்பகம் அந்நூலை வெளியிட்டது.
மதிப்பீடு
அரு. சோமசுந்தரன் மரபுக் கவிஞர். அறுபதாண்டுகளுக்கும் மேலாகக் கவிதை உலகில் இயங்கினார். கவிதைகள், ஆன்மிக நூல்கள், சிறார் நூல்கள், பொது வாசிப்புக்குரிய படைப்புகள், பயணக் கட்டுரை நூல்கள், மொழிபெயர்ப்பு என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளைப் படைத்த கவிஞராகவும், இலக்கிய, ஆன்மிக உபன்யாசகராகவும் அறியப்படுகிறார்.
நூல்கள்
கவிதை நூல்கள்
- அருசோ கவிதைகள் (ஆறு தொகுதிகள்)
- கவியரங்கில் கவிஞர் சோமசுந்தரன்
- திருமுறைகள் வீட்டு நூல்
- கவிஞர் சோமசுந்தரன் கவிதைகள்
- பக்திப் பாக்கள்
- திரு. வி. க. ஐம்பொறிகள்
- பாண்டிமாதேவி (பொற்கிழிக் காவியம்)
- மறைமலை அடிகள் பிள்ளைத் தமிழ்
- ஸ்ரீ குருதட்சணாமூர்த்தி பிள்ளைத்தமிழ்
- திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ்
- படகு
- அன்னை மீனாட்சி அந்தாதி
- திருச்செந்தூர் - பழனி பாதை யாத்திரைப் பாடல்கள்
- கவிதை வானில்
- கவிதை மண்ணில்
- கவிதைக் கடலில்
- கவிதை ஆற்றில்
சிறார் நூல்கள்
- சிறுவர்க்கு விஞ்ஞானம்
- மிருகங்கள்
- நூலகம்
- பாலனும் கோலனும்
கட்டுரை நூல்கள்
- கட்டுரைப் பெட்டகம்
- கட்டுரைக் கற்கண்டு
- கட்டுரைக் கற்பகம்
- தீந்தமிழ் இலக்கியத் தேன்
- நான்காம் உலகத் தமிழ் மாநாடு
- மண்ணியல் சிறு தேர் (திறனாய்வு)
- அருசோ வாழ்க்கைப் பயணம்
- இராமாயணம்
- மகாபாரதம்
- கந்தபுராணம்
- கம்பன் கண்ட அறநெறி
- செக்கிழுத்த செம்மல்
- ஐரோப்பா
வரலாற்று நூல்கள்
- சீனப் படையெடுப்பு
- பாகிஸ்தான் படையெடுப்பு
- வங்காள தேசப்போர்
- உலகைக் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சிகள்
சிறுகதை, நாவல்கள்
- உளவு நங்கை
- சர்க்கஸ் பேரரசி
- ஆங்கில அருங்கதைகள்
- ஒற்றுமைக் கதைகள்
- விடுதலை வேட்கை
- சேர்ந்து வாழ்வோம்
நாடகம்
- கடமை
- தியாகக் குடும்பம்
- முகமூடி
- வேலின் முனை
- ஓரங்க நாடகங்கள் ஒன்பது
- கால ஓட்டம்
வாழ்க்கை வரலாறு
- உயர்கல்வி தந்த உத்தமர்கள்
- பெருந்தொழில் வளர்த்த பெரியோர்
- நாடு புகழும் ஜி. டி. நாயுடு
- மாவீரன் நெப்போலியன்
- பாரதப் பிரதமர்கள்
- வள்ளல் அழகப்பர்
- அடியார் அறுபத்து நால்வர்
பயணக் கட்டுரை நூல்கள்
- வட இந்தியப் பயணம்
- நேபாளம்
- இலங்கை
- பிரிட்டன்
- பிரான்சு
- மேற்கு ஜெர்மனி
- சுவிட்சர்லாந்து
- இத்தாலி
- பெல்ஜியம்
- ஹாலந்து
- ஆஸ்திரியா
- வாட்டிகன்
மொழிபெயர்ப்புகள் (ஷேக்ஸ்பியர் நூல் வரிசை)
- இரண்டாம் ரிச்சர்டு
- மாக்பெத்
- அந்தோணியும் கிளியோபாட்ராவும்
- எண்ணிய எண்ணியாங்கு
- பன்னிரண்டாம் இரவு
- வெனிஸ் வியாபாரி
- மன்னர் லியர்
- ஒதெல்லோ
- ஜூலியஸ் சீசர்
- புயல்
- ஹாம்லெட்
- கார்காலக் கதை
- நடுக்கோடை நள்ளிரவுக்கனவு
- ரோமியோவும் ஜூலியட்டும்
ஆங்கில நூல்
- Lyrical Caval Cade
உசாத்துணை
- முன்னோடி: அரு. சோமசுந்தரன், தென்றல் இதழ் கட்டுரை
- அரு. சோமசுந்தரன் நூல்கள், ஜூபிடர் புக்ஸ் தளம்
- அரு. சோமசுந்தரன் நூல்கள், ஆர்கைவ் தளம்
- நாடு புகழும் ஜி. டி. நாயுடு, அரு. சோமசுந்தரன் நூல், தமிழ் இணைய மின்னூலகம்
- பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன் வரலாறு, சி.இராமசாமி, பொன்முடி பதிப்பகம், மெரீனா புக்ஸ் தளம்
- இருபதாம் நூற்றாண்டின் நூறு தமிழ்க் கவிஞர்கள், தொகுப்பாசிரியர்: ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, முதல் பதிப்பு: 2004
- தமிழ் வளர்த்த நகரத்தார்கள், முனைவர் கரு. முத்தய்யா, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, முதல் பதிப்பு: ஜூலை, 2018
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Feb-2025, 17:19:08 IST