under review

அரவான் கதை (அம்மானைப் பாடல்)

From Tamil Wiki
அரவான் களப்பலி

அரவான் கதை தமிழ்நாட்டில் கதைப்பாடலாகவும், நாடக வடிவிலும் உள்ளது. "அரவான் களப்பலி" என்னும் நாடகம் பிரபலமானது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் பகுதியில் இந்நாடகம் கி.பி. 17-ம் நூற்றாண்டு முதல் நடந்து வருகிறது.

அர்ஜுனனுக்கும், நாக கன்னியான உலூபிக்கும் மகனாகப் பிறந்த அரவானைப் பாரதப் போர் தொடங்கும் முன் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சியை மையமாக கொண்டு அமைந்தது இந்த கதைப்பாடல்.

பார்க்க: கூத்தாண்டவர் திருவிழா

வியாசரும் வில்லிபுத்தூராரும்

அரவான் களப்பலி தெருக்கூத்து

அரவான் கண்ணனைப் போல் உருவ அமைப்பும், கர்ணனைப் போல் கொடைப்பண்பும் கொண்டவனாக இருக்கிறான். அரவான் கதை மூல வியாச பாரதத்தில் உள்ளது என்றாலும் அதற்கும், வில்லி பாரதத்திற்கும் கதை வேறுபாடு உள்ளது.

வியாசர் அரவானை அர்ஜுனனுக்கும், உலூபிக்கும் மகனாக பிறந்தவன் என்கிறார். இவன் பாரதப் போரில் சகுனியின் ஐந்து சகோதரர்களைக் கொல்கிறான். அதன்பின் அலம்புவின் என்ற வீரனால் கொல்லப்படுகிறான். "அரவான் அலம்புவின் சண்டை" என்ற தனிநூல் உள்ளது. இந்த நாடகத்தை சண்முகானந்தா புக் டிப்போ வெளியிட்டிருக்கிறது.

எனவே அரவான் களப்பலி செய்தியை வியாசர் கூறவில்லை. வில்லி பாரதத்தின் உத்யோக பருவத்தில் அரவான் களப்பலியூட்டும் சருக்கத்தில் அதைப் பற்றி 13 பாடல்கள் உள்ளன. வில்லிப்புத்திரர் தன் நூலில் அரவானை காளிக்கு (யாமளைக்கு) பலி கொடுக்கப்படுவதாகவே சித்தரிக்கிறார்.

பதிப்பு வரலாறு

அரவான் களப்பலி கதை 812 வரிகளைக் கொண்டது. இக்கதை 1912-ல் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்

"அரவான் களப்பலி" நாடகத்தை வையாபுரி இயற்றியுள்ளார். இவர் தஞ்சை மாவட்டம் மெலட்டூரைச் சேர்ந்தவர். இவர் தன்னை சித்தர் என்று குறிப்பிடுகிறார். இவர் நாடகத்திற்கு வில்லி பாரதத்தை மூலமாக எடுத்துக் கொண்டார். இவர் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

கதை

அரவான் தலை

பாண்டவர்கள் கௌரவர்களுடன் சூதாடி தோற்கின்றனர். அந்த ஆட்டத்தின் விதிப்படி பாண்டவர்கள் பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் செல்கின்றனர். வனவாசத்தின் முடிவில் பாண்டவர்கள் தங்கள் நாட்டைத் திரும்ப பெற கிருஷ்ணனைத் தூது அனுப்புகின்றனர். கிருஷ்ணன் தூதை அவமதித்த துரியோதனன் பாண்டவர்களுக்கு ஒரு ஈ ஒட்டும் இடம் கூட தர மறுக்கிறான். இதனால் கௌரவர்கள் மேல் போர் செய்யும் நிலைக்கு பாண்டவர்கள் தள்ளப்படுகின்றனர். கௌரவர்களும் போருக்கு தயாராகின்றனர்.

போர் தொடங்கும் முன் யுத்த தேவதையான காளிக்கு பலிகொடுக்க வேண்டும் என்பது போரின் நியதி. அப்படி பலி கொடுக்கப்படுபவன் ஆண்மகனாக சர்வ லட்சணம் பொருந்தியவனாக இருக்க வேண்டும். அப்படி சர்வ லட்சணம் பொருந்தியவன் கண்ணன். அவனுக்கு இணையாக இருந்தது அரவான்.

தருமனின் கட்டளையின் பேரில் அர்ஜுனன் யாத்திரை செல்கிறான். அங்கே நாக லோகத்தில் நாக கன்னியான உலூபியைக் காண்கிறான். அவளை மணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு மகனாக அரவான் பிறக்கிறான்.

அரவான் பிறப்பிலேயே எதிர் ரோமம் உடையவன். முப்பத்திரண்டு அங்க லட்சணமும் அமையப் பெற்றவன். அவனை யாரும் எதிர்க்க முடியாத வண்ணம் ஆஜானுபாகுவானவன். அவனது புஜ பராக்கிரமத்தையும், வீரத்தையும் கிருஷ்ணன் நன்கு அறிந்திருந்தான்.

பாரதப் போரைத் தனியாகவே நடத்தி அவனால் பாண்டவர்களுக்கு வெற்றி தேடி தர முடியும். பதினெட்டு நாள் போரை ஒரே நாளில் வென்று பாண்டவருக்கு அரசை மீட்டு அளித்திடுவான் என கண்ணன் அறிந்திருந்தான். அதனால் பாண்டவர்களின் வலிமையும், பெருமையும் சுருங்கிவிடும் என எண்ணினான். எனவே போர் தொடங்கும் முன்பே அழித்துவிட நினைத்தான் கண்ணன்.

யாமளை என்ற போர்த் தெய்வத்திற்கு பலி கொடுக்கும் தகுதியுடைவன் அரவான் என தன் எண்ணத்தை முன்வைக்கிறான் கண்ணன். அதனைக் கேட்டதும் தருமன் நடுங்குகிறான். "போரும் வேண்டாம், நாடும் வேண்டாம். நாங்கள் மறுபடியும் வனம் செல்கிறோம்" எனக் கூச்சலிடுகிறான்.

அரவான் திருவிழா

திரௌபதியும் செய்தியறிந்து துடித்துப் போகிறாள். எல்லோரும் சேர்ந்து ஒரு மனதாக போரே வேண்டாம் என முடிவு செய்கின்றனர். அவர்கள் மனதை மாற்ற கிருஷ்ணன் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்திக்கிறான். கீதை உபதேசம் போன்ற ஒரு உரையை நிகழ்த்துகிறான். "போரில் எல்லோரும் சாகப் போகிறார்கள். பிழைத்து மீண்டு வரப் போவது எத்தனை பேர். ஒருவேளை அரவானும் போரில் இறந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள்" என்றான்.

அதன்பின் கண்ணன் அரவானைத் தனியாகச் சந்திக்கிறான். அவனிடம் நேரடியாகப் போரில் சாக சம்மதமா எனக் கேட்காமல் சுற்றி வளைத்து பேசி அவன் சம்மதத்தைப் பெற்றுவிடுகிறான். அரவான் தான் பலியாக சம்மதம் எனத் தெரிவித்த போது கிருஷ்ணனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறான், "போர் தொடங்கும் முன் நான் பலி கொடுக்கப்பட்டாலும், பாரதப் போர் முடிவது வரை நான் இறக்கக்கூடாது. அந்தப் போர்க் காட்சியை நான் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்கிறான். அதற்கு கண்ணனும் சம்மதிக்கிறான்.

கௌரவர்கள் போருக்கு தயாரானதும் வீடுமர், "போர் தொடங்கும் முன் யுத்த தேவதையான யாமளா தேவிக்குப் பலி கொடுக்க வேண்டும். அப்போது தான் நாம் வெற்றி பெற முடியும்" என்கிறார். துரியோதனன், "யாரைப் பலி கொடுக்கலாம் எப்போது செய்யலாம் என்பதை விவரமாய் சொல்லுங்கள்" எனக் கேட்கிறான்.

வீடுமர் துரியோதனனிடம், "இதுபோன்ற பிரம்மாண்டமான போரை நான் இதற்கு முன் நிகழ்த்தியதில்லை. இவையனைத்தும் பற்றி சகல சாஸ்திரங்களையும், ஜோதிட நூல்களையும் அறிந்தவன் ஒருவனே உலகில் உள்ளான். அவன் சகாதேவன் மட்டுமே. அவன் நம் எதிரியானாலும் உண்மைக்குப் புறம்பாக எதையும் சொல்ல மாட்டான். நீ அவனிடம் செல்" என்கிறார்.

துரியோதனன் அன்னப்பறவை வடிவான விமானத்தில் ஏறி பயணம் செய்து சகாதேவன் குடிலடைந்தான். தன் பக்க வேண்டுகோளை அவனிடம் சொன்னான். சகாதேவன் துரியோதனனை அழைத்து அன்புடன் வரவேற்று பேசினான். அவன் சாதகத்தைக் கணித்தான். "தனுர் மாதமாகிய மார்கழியில் சூரியனைச் சந்திரன் கூடிய நாளான அமாவாசை இரவில் யுத்த தேவதைக்கு சர்வ லட்சணம் பொருந்திய ஒருவனைப் பலி கொடுத்தால் நீ ஜெயிப்பது நிச்சயம்." என்கிறான்.

துரியோதனன், சகாதேவனிடம் விடைபெற்று வீடுமரிடம் திரும்பினான். "சர்வ லட்சணம் பொருந்திய ஒருவனை நாம் பலி கொடுக்க வேண்டும். அப்படி ஒருவன் எங்கே இருக்கிறான்" எனக் கேட்கிறான். வீடுமர், "நீ அவனை எளிதில் கண்டு பிடித்துவிடலாம். அவன் உடம்பில் ரோமம் எதிராக இருக்கும். நீல நிறத்துடன் இருப்பான். அவன் பெயர் அரவான். நீ அவனைப் பலி கொடுத்தாக வேண்டும்" என்கிறார்.

துரியோதனன் அன்ன வடிவ விமானத்தில் ஏறி அரவானிடம் வருகிறான். அரவானும் பெருந்தன்மையுடன் துரியோதனனை வரவேற்கிறான். "பெரியப்பாவே என்னை அழைத்தாலே வருவேனே. என்ன வேண்டும் உனக்கு" எனக் கேட்கிறான். துரியோதனன் அரவானிடம், "நான் இதுவரை யாரிடமும் இரந்து கேட்டதில்லை. முதன்முறையாக உன்னிடம் வந்திருக்கிறேன்." என்றான்.

அரவானுக்கு துரியோதனன் சொல்ல வருவது புரியவில்லை. துரியோதனன் அவன் வந்த காரியத்தைப் பக்குவமாகச் சொல்கிறான். அரவான் யோசித்தான். ஏற்கனவே வாக்குக் கொடுத்த ஒன்றை திரும்ப கேட்கிறான். மரணம் ஒருமுறைதானே. அது எப்போது வந்தால் என்ன என்று பலியாக இசைந்துவிடுகிறான்.

துரியோதனன் சகாதேவனை சந்தித்ததையும், அரவானிடம் வாக்குப் பெற்றதையும் கண்ணன் அறிகிறான். சகாதேவன் துரியோதனனுக்குக் குறித்துக் கொடுத்த நாளை மாற்றுகிறான். மார்கழி மாதத்தில் சூரியன் சந்திரனைக் கூடிய நாளாகிய அமாவாசை வரும் நேரத்தை மாற்றிவிடுகிறான். அந்த நேரத்தில் கண்ணன் அரவானை அழைத்து பலி கொடுத்து விடுகிறான்.

காளி பலியை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக அவர்கள் முன் காட்சி தருகிறாள்.

கூத்தாண்டவர் திருவிழா

அரவான் களப்பலியை தமிழகத்தில் கூத்தாண்டவர் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். (பார்க்க: கூத்தாண்டவர் திருவிழா).

உசாத்துணை

  • அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள், ஆசிரியர்: அ.கா.பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், 2012

காணொளி


✅Finalised Page