அனாக் அலாம்
'அனாக் அலாம்' (Anak Alam) (மே 1, 1974 முதல் 1997) 'இயற்கையின் குழந்தைகள்' எனும் பொருள் கொண்ட மலாய் நவீன கவிஞர்கள், கலைஞர்களின் கூடுகை. கோலாலம்பூரில் குறிப்பிடத் தக்க கால அளவில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற கவிஞர்கள் செயல்பாட்டு இயக்கமாக அனாக் அலாம் திகழ்ந்தது. இக்குழு சுதந்திரத்திற்குப் பின்பான மலாய் கவிதைகளிலும் கலை வெளிப்பாடுகளிலும் முக்கியப் பங்காற்றியது.
வரலாறு
மலேசியாவில் 1970-களில் எழுத வந்த இளம் படைப்பாளிகள் மிகுந்த உற்சாகத்துடனும் தீவிரத்துடனும் இயங்கினர். தலைநகரில், வேலை தேடியும் கல்வியின் காரணமாகவும் கலை ஆர்வத்துடனும் நாடு முழுவதும் இருந்து வந்த இளைஞர்கள் தங்களுக்குள் கலைஇலக்கிய விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்திக் கொள்ளத் தொடங்கினர். அதிகார மையத்துக்கு அப்பாற்பட்ட இலக்கியச் செயல்பாடாக இது வளர்ந்தது. கட்டற்ற கலை வெளிப்பாடுகளையும் பல்வேறு பரிசோதனை முயற்சிகளையும் இவ்விளைஞர்கள் முன்னெடுத்தனர்.
கோலாலம்பூரில் தாசேக் தித்தி வங்சா, தாசேக் பெர்டானா போன்ற ஓய்விடங்களில் கவிதை ஒன்றுகூடல்களை சில கவிஞர்கள் அக்கால கட்டத்தில் முன்னெடுத்தனர். அதில், பாடாங் மெர்போக் திடலில் கவிஞர்களும் கலைஞர்களும் நிகழ்த்திய கூடுகைகள் தனித்துவம் பெற்றிருந்தன. எ.லத்திப் மொகிடீன், அலி ரஹ்மாட், ஜொஹான் ஜாஃபார், அப்துல் காஃபார் இப்ராஹிம், இப்ராஹிம் காஃபார், சிதி சைனூல் இஸ்மாயில், போன்ற கவிஞர்கள் இக்கூடுகைகளை முன்னெடுத்தனர். பாடாங் மெர்போக் திடலின் ஓரம், 905 மெர்போக் சாலை, என்ற முகவரியில் இருந்த இரண்டு பழங்கால பங்களா வீடுகள் இக்கவிஞர்களும் கலைஞர்களும் கலந்துரையாடும் இடமாகவும் அமர்ந்து எழுதும், ஓய்வெடுக்கும், கலைப்பணிகள் செய்யும் இடமாகவும் பயன்பட்டன.
சனி ஞாயிறு இரவுகளில் பாடாங் மெர்போக்கில் கவிஞர்கள் சாலை ஓர விளக்குத் தூண்களின் கீழ் நின்று உரக்க கவிதை வாசிப்பதை வழக்கமாக்கினர். 'புங்காவ்' போன்ற சில நாட்டார் இசைக்கருவிகளின் இசையுடன் கூடிய கவிதை வாசிப்புகளும் நடைபெற்றன. இலக்கியத்தை அதிகார மையமாக்குவதை இவர்கள் எதிர்த்தனர். ஆகவே மேடை சடங்குகளையும் பிற கட்டுப்பாடுகளையும் இவர்கள் புறக்கணித்தனர். சாமானிய மக்களின் தரப்பில் நின்றே தங்கள் கலை இலக்கியப் படைப்புகளை முன்வைத்தனர். தங்கள் உடை, தோற்றம் என எல்லா வகையிலும் அதிகார மையங்களுக்கு எதிரானவர்களாகத் தங்களை வெளிப்படுத்தினர். தங்கள் படைப்புகளை மக்கள் மன்றத்தில் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவதையே முக்கியசெயல்பாடாகத் தொடர்ந்தனர்.
லத்திப் மொஹிடின், முஸ்தாபா ஹஜி இப்ராஹிம், சிதி சைனூல் இஸ்மாயில், அப்துல் காஃபார் இப்ராஹிம், அலி மபுஹா, ஷூல்கிப்ஃலி டஹ்லான், ரஹிம் நசார், மரியம் அப்துல்லா, எம். யுசோப் ஒஸ்மான், எம். ஹனஃபியா சாமாட், நவாவி முகமட், பியான்ஹாபிப், சனி சுடின், லடின் நுவாவி, இமுடா போன்ற பலர் இக்கூடுகைகளில் தீவிரமாகச் செயல்பட்டனர். கவிதைகள் தவிர, ஓவியம், கேலிச்சித்திரம், தெருநாடகங்கள் எனப் பலவகை கலைப்படைப்புகளையும் பாடாங் மெர்போக் திடலில் மக்கள் முன் அரங்கேற்றினர்.
இக்குழுவினர் தங்களை 'அனாக் அலாம்' (Anak Alam) அதாவது இயற்கையின் குழந்தைகள் என்று அழைத்துக் கொண்டனர். அவர்களின் சந்திப்புக் களமாக இருந்த பங்களா வீடுகளையும் 'ருமாஹ் அனாக் அலாம்' (இயற்கையின் குழந்தைகள் இல்லம்) என்று அழைத்தனர். இக்குழுவினருக்கு ஏ. சாமாட் சைட், ஒஸ்மான் அவாங், இஸ்மாயில் ஸைன் போன்ற மூத்த எழுத்தாளர்களும் கலை இலக்கியப் பிரமுகர்களும் ஆதரவாக இருந்தனர்.
தெரு நாடகம்
பாடாங் மெர்போக் திடல் ஓரம் இருந்த அந்த இரண்டு வீடுகளில் ஒன்றில் அக்கால கட்டத்தில் கோலாலம்பூர் வட்டாரத்தில் நவீன நாடகங்களைத் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த மியோர் ஹாசிம் மானாப்பும் அவரின் மனைவி இசாடியா கைரானும் தங்கியிருந்தனர். 'குரூப் தியேட்டெர் க்ரியாடிஃப்' எனும் அவர்களின் நாடக குழுவினர் நாடகப் பயிற்சிகள் செய்ய அந்த வீட்டைப் பயன்படுத்தி வந்தனர். அவர்களின் நாடக செயல்பாடுகளிலும் இக்கவிஞர்கள் குழு துணையாக இருந்தது.
ஜொஹான் ஜாஃபார், ஓமார் அப்துல்லா, முஹமட் அப்துல்லா, இப்ராஹிம் கஃபார், ஹாத்தா ஹசாட் கான், மூசா மஸ்ரான், காலிட் சாலே, மானா சீகானா போன்ற இளம் நாடக ஆர்வலர்களையும் அனாக் அலாம் செயல்பாடுகள் கவர்ந்தன. பல்வேறு பரிசோதனை நாடக முயற்சிகளை இவர்கள் முயன்றனர். 1977-ம் ஆண்டில் 'ஆங்கின் கெரிங்' (Angin Kering) (வரண்ட காற்று) என்ற முழு நாடகத்தை அரங்கேற்றினர்.
1970-களில் இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவில் பரவிய தெருநாடக முயற்சிகளை இக்கலைஞர்கள் செயல்படுத்தினர். 1978-ல் 'இஸ்டேஷன் கர்யா' மற்றும் 'பெம்பூரு பெர்காசா' என்ற இரு குறுநாடகங்களை நாடு முழுவதும் பயணம் செய்து பொதுமக்கள் கூடும் பல இடங்களில் நடத்தினர். சிரம்பான் நகரில் தொடங்கிய இத்தெருநாடக நிகழ்வு பல நகரங்களில் நடத்தப்பட்டு நவம்பர் 5, 1978 அன்று பினாங்கில் முடிவுற்றது.
பாடாங் மெர்போக் திடல்
அனாக் அலாம் மற்றும் குரூப் தியேட்டெர் க்ரியாடிஃப் குழுக்களின் நிகழ்சிகளால் ஒவ்வொரு வாரமும் பாடங் மெர்போக் திடல் கலை விழா போலக் காட்சி தரத் தொடங்கியது. வார இறுதிகளில் கவிஞர்களின் கவிதைகளைக் கேட்கவும் பிற கலைச் செயல்பாடுகளில் கலந்து கொள்ளவும் மக்கள் திடலில் திரண்டனர்.
தேசிய இளம் கவிகள் சந்திப்பு
1987-ம் ஆண்டுதேசிய அளவிலான இளம் கவிஞர் சந்திப்பை அனாக் அலாம் குழுவினர் ஏற்பாடு செய்தனர். அப்துல் அசீஸ் ஹெச் எம், காலிட் சாலே, மர்சூக்கி அலி, லாடின் முஹமட், டௌட் முகமாட், ஹனஃபியா சாமாட், ஸ்வென்லெர்ட் ப்ரோ பவுல், இமாலான் அடாபி, பியான்ஹாபிப், லாடின் நுவாவி, அஸ்மி யூசோப், போன்ற கவிஞர்களும் கலை ஆர்வளர்களும் முனைந்து அந்தச் சந்திப்பை வெற்றிபெறச் செய்தனர். அந்நிகழ்ச்சியும் பாடாங் மெர்போக் திடலிலேயே நடத்தப் பெற்றது. நாடு முழுவதும் இருந்து இளம் கவிஞர்கள் பலர் வருகை தந்து கவிதை வாசித்தனர். மூத்த கவிஞர்களான ஏ. சாமாட் சைடும்ஒஸ்மான் அவாங்கும் அந்நிகழ்ச்சிக்கு வந்தனர். மலேசியா விடுதலை பெற்ற பின்னர் நடைபெற்ற முதல் தீவிர கவிதை கருத்தரங்காக அது வரலாற்றில் நிலை பெற்றது.
பத்தாண்டுக்கும் மேல் பாடாங் மெர்போக் திடலும் அங்கிருந்த வீடுகளும் கவிதை, கலை செயல்பாட்டு களமாக இருந்தன. Anak Alam குழுவினரில் பலர் பிற்காலத்தில் நாடறிந்த கவிஞர்களாகவும், கலைஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் வளர்ந்தனர். கல்விக்கூடங்களிலும் அரசின் கலை இலக்கிய அமைப்புகளில் உயர் பதவிகளிலும் அமர்ந்தனர்.
அனாக் அலாம் தொய்வும் மறைவும்
1990-களில் பாடாங் மெர்போக் திடலில் கவிஞர்களின் ஒன்று கூடல்களும் கவிதை வாசிப்புகளும், மாநகர் மன்ற விதிமுறைகளாலும் குழுவினரின் கருத்துவேறுபாடுகளாலும் மெல்ல சுணங்கின. 1997-க்குப் பிறகு Anak Alam கவிஞர்களின் கவிதை வாசிப்புகள் நின்று போயின. தேசிய எழுத்தாளர் சங்கம் (PENA) கவிதைப் படைப்பைகளை அரசு அனுமதியுடன் நடத்தத் தொடங்கியது. ஆனாலும் அவை மூடிய அரங்குகளிலும் வசதியான விடுதிகளிலும் மக்களின் பார்வைக்கு அப்பால் நடந்து கொண்டிருந்தன. மாநகரில், சென்ட்ரல் மார்கேட்டில் கவிதை வாசிப்புகளும் ஓவியம் வரைவதும் தொடர்ந்து கொண்டிருந்தன.
மாநகர் வளர்ச்சி திட்டத்தில், நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் இருக்கும் பாடாங் மெர்போக் திடல் பல முறை மேம்பாட்டாளர்களால் குறிவைக்கப் பட்டது. 1997-ம் ஆண்டு பாடாங் மெர்போக்கின் அருகிலிருந்த தேசிய பண்பாட்டு மையம் மேம்படுத்தப்படுத்தப்பட்டபோது அனாக் அலாம் கலைஞர்கள் பயன்படுத்திய பழங்கால பங்காளாக்கள் இரண்டும் இடிக்கப்பட்டன. அத்துடன் கவிஞர்களும் கலைஞர்களும் பாடாங் மெர்போக்கில் ஒன்று கூடுவது நின்று போனது. 2006-ம் ஆண்டு தேசிய பண்பாட்டு மையம், தேசிய மரபு கலைக் கல்லூரி (ASWARA) வாக உருவாக்கம் பெற்றது. பாடாங் மெர்போக் திடல் அப்போதைய மாநகர மேயர் அலியாஸ் ஓமார் மற்றும் பலரின் முயற்சியால் பசும்புல் திடலாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பங்களிப்பு
அனாக் அலாம் குழுவினர் பணியை மலாய் கலை இலக்கியபரப்பில் நடந்த மிக முக்கிய மறுசீராய்வு என்று வகைப்படுத்தலாம். நவீன கலை இலக்கிய நுண்ணுணர்வுடனும் அர்ப்பணிப்புணர்வுடனும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மலாய் கலை இலக்கியத்தில் இதுநாள்வரை தன் தாக்கத்தைச் செலுத்திக் கொண்டுள்ளன. அக்குழுவின் வழியாகப் பல குறிப்பிடத் தக்க கலை இலக்கிய ஆளுமைகள் வெளி வந்தனர்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Jul-2024, 09:10:59 IST