அநந்தபாரதி ஐயங்கார்
அநந்தபாரதி ஐயங்கார் (அனந்தபாரதி ஐயங்கார்; அனந்தபாரதி) (1786-1846) தமிழ்ப் புலவர். நொண்டி நாடகங்களையும், கீர்த்தனைகளையும் இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
அநந்தபாரதி ஐயங்கார், பொ.யு. 1786-ல், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உமையாள்புரத்தில், சீனிவாச ஐயங்கார் - லட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். இலக்கண, இலக்கியங்களை முறையாகக் கற்றார். வடமொழி, தெலுங்கு, கன்னடம், உருது, கிரந்தம், மராத்தி போன்ற மொழிகளில் புலமை பெற்றார். தஞ்சை மராட்டியரின் அரண்மனை வித்வானாக இருந்தார் தலைமைக் கணக்கராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். (இவரது திருமணம், குடும்ப வாழ்க்கை பற்றிய விவரங்களை அறிய இயலவில்லை.)
இலக்கிய வாழ்க்கை
அநந்தபாரதி ஐயங்கார், தனது 13-ம் வயதில், 'யானை மேலழகர் நொண்டிச் சிந்து' என்னும் நூலை இயற்றினார். சீர்காழி அருணாசலக் கவிராயர் பாடாது விட்டிருந்த ராமாயண உத்தர காண்டத்தை 'உத்தர ராமாயணக் கீர்த்தனை' என்ற தலைப்பில் நூலாக இயற்றினார். தொடர்ந்து பல்வேறு சிற்றிலக்கிய நூல்களையும், நாடக நூல்களையும் இயற்றினார்.
நாடகம்
அநந்தபாரதி ஐயங்கார், திருவிடைமருதூர் மகாலிங்கர் மீது 'திருவிடைமருதூர் நொண்டி நாடகம்' என்ற நொண்டி நாடக நூலை இயற்றினார். இவரே அந்நாடகத்தை திருக்கோயில் மண்டபத்தில் அரங்கேற்றி நடித்தாக வரலாறு கூறுகிறது. 'பாகவத தசமஸ்கந்த நாடகம்' என்பது இவர் இயற்றிய மற்றொரு நாடக நூல்.
விருது
திருவிடைமருதூர் நொண்டி நாடகத்தைக் கண்டு மகிழ்ந்த ஆலய அறங்காவலர் ஐயாற்றப்பத் தம்பிரான், அநந்தபாரதி ஐயங்காருக்கு 'கவிராச சாமி' என்று பட்டமளித்ததுடன், வீடு மற்றும் தோட்டத்தையும் பரிசாக வழங்கினார். ஐயங்காரின் இறுதிக்காலம் வரை ஆதரித்தார்.
மறைவு
அநந்தபாரதி ஐயங்கார் 1846-ல், தனது 60-ம் வயதில் காலமானார்.
மதிப்பீடு
அநந்த பாரதி ஐயங்கார், வைணவ சமயம் சார்ந்தவராக இருந்தாலும், சமயப் பொறையுடன் சைவ சமயம் சார்ந்தும் பல நூல்களை இயற்றினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த, பல்வேறு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்த, குறிப்பிடத்தகுந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.
நூல்கள்
இலக்கியம்
- யானைமேலழகர் நொண்டிச்சிந்து
- உத்தர ராமாயணக் கீர்த்தனை
- மருதூர் வெண்பா
- முப்பால் திரட்டு
- இடபவாகனக் கீர்த்தனை
- கல்லணை வைபவக் கீர்த்தனை
- வேதாந்த தேசிகர் கீர்த்தனை
- தேசிகப் பிரபந்தம்
நாடகம்
- திருவிடைமருதூர் நொண்டி நாடகம்
- பாகவத தசம சுகந்த நாடகம்
உசாத்துணை
- உத்தர ராமாயண கீர்த்தனை, அநந்தபாரதி ஐயங்கார், தமிழ் இணைய மின்னூலகம்
- திருவிடைமருதூர் நொண்டிநாடகம், அநந்தபாரதி ஐயங்கார்
- நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Jan-2025, 22:08:07 IST