அடைக்கல மாலை
அடைக்கல மாலை(1731) கிறிஸ்தவ இலக்கிய நூல். திருக்காவலூரில் எழுந்தருளியுள்ள அடைக்கல அன்னையைப் பாடும் மாலை என்னும் சிற்றிலக்கிய நூல். வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது.
பதிப்பு. வெளியீடு
அடைக்கல மாலை நூலின் பதிப்பு விவரங்கள் அறியவரவில்லை.
காலம்
ஏலாக்குறிச்சி என்னும் திருக்காவலூரில் 1731-ல் அடைக்கல அன்னையின் பெயரால் வீரமாமுனிவர் திருக்கோவிலைக் கட்டினார். நூலின் காலம் அதே ஆண்டாகவோ அதன் பின்னரோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஆசிரியர் குறிப்பு
அடைக்கல மாலை நூலை இயற்றியவர் வீரமாமுனிவர்.
நூல் அமைப்பு
இந்நூல் ஒரு காப்புச் செய்யுளுடன் கலிவெண்பா யாப்பினாலான 60 கண்ணிகளைக் கொண்டது.
உள்ளடக்கம்
நூலின் தொடக்கத்திலேயே விண்ணிலும் மண்ணிலும் உயிர்வாழ் அனைத்துக்கும் உணவூட்டும் இறைவனுக்கே வான் வீட்டின் இன்பம் பெறுவதற்காக அமுதளிக்க விரும்புகிறாள் என்றும், உலகில் நிலைபெற்றுள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதரவும் இனிய நிலைக்களமும் அரிய உயிருமாக விளங்கும் மேலான உயிரான இறைவனுக்கே தன் கொங்கையை அமுதுண்ணும் புகலிடமாக அளித்துள்ளாள் என்றும் அடைக்கல அன்னையின் பெருமையைப் போற்றுகின்றார்
வீரமாமுனிவர் அடைக்கல அன்னைக்குக் காணிக்கையாக பக்தர்களால் வைக்கப் பெற்ற பொருள்கள் அனைத்தும் அவள் காலடியில் கிடக்கக் காண்கிறார். வானமும் பூமியும்கூட அவள் திருப்பாதத்திலேயே நிலைபெற்றிருப்பதாகப் பார்க்கிறார். அத்தனைக்கும் ஆங்கே இடமிருக்க, தனக்கு மட்டும் ஆங்கே இடமில்லாமல் போகுமோ என எண்ணுகிறார்.
வீரமாமுனிவர் இந்நூலில் அடைக்கலம் என்னும் சொல்லை 23 இடங்களில் கையாண்டுள்ளார். 42-50 கண்ணிகள் தனிநடையில் அமைந்து பொருள் தெளிவின்றி உள்ளன. காப்புச் செய்யுளில் அடைக்கல மாமாலை என நூலின் பெயர் குறிப்பிடப்படுகிறது.
பாடல் நடை
அழுவார்க்கு அன்பாக,
துயர்க் கடல் சேர்ந்தார்க்குக் கரையாக,
நோய்க்கு மருந்தாக,
துன்புற்றோர்க்குத் துணையாக,
ஏழையர்க்குப் பெருஞ்செல்வமாக,
கல்லார்க்குக் கலைக்கடலாக,
எல்லோர்க்கும் தாயாகக் '(கண். 21-24).
மதிப்பீடு
இந்நூலில் ஒரு பக்தனுக்குரிய தாழ்மையையும், சரணாகதியையும், நன்றியுணர்வையும் காணலாம்.
உசாத்துணை
- தமிழ் கிறிஸ்தவ மரபு -ஞான ராபின்சன்
- கிறிஸ்தவ இலக்கியம் நானூறு -யோ.ஞான சந்திர ஜான்சன்
- வீரமாமுனிவரின் தமிழ்க்கொடை
- தமிழ்ப்பணி மன்றம் வரலாறு பேசுகிறது வீரமாமுனிவர்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Feb-2026, 09:43:25 IST