அஞ்சி அத்தைமகள் நாகையார்
அஞ்சி அத்தைமகள் நாகையார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
நாகையார் என்பது இயற்பெயர். அதியமான் நெடுமான் அஞ்சியின் அத்தைமகள். அஞ்சி அரசனைப் பற்றிய செய்தியை இவர் பாடலில் அறியமுடிகிறது.
இலக்கிய வாழ்க்கை
அகநானூற்றில் 352-ஆவது பாடல் பாடினார். குறிஞ்சித்திணைப்பாடல். களவொழுக்கம் நீங்கி திருமணத்திற்காக காத்து நிற்கும் தலைவி தலைவனின் சிறப்பையும், தன் களவு வாழ்க்கைக்கு உடனிருந்த தோழியையும் பாராட்டும் பாடலாக அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் குறிஞ்சித்திணை செய்திகள்
- குரங்குகளுக்குத் தலைவனாகிய ஆண் குரங்கு, பழுத்த குடம் போன்ற பெரிய பழத்தினைத் தழுவிக்கொண்டு, தன் துணையான பெண் குரங்கினை அழைக்கும்.
- ஒலி முழங்கும் அருவியினையுடைய கற்பாறைப் பக்கத்தே ஆடுகின்ற மயில் நிற்கும்.
- கூத்தர் விழாக் கொண்டாடும் பழைமையான ஊர்.
- விறலிகளும், பாணனும் வாழும் ஊர்.
- கடிய வேகத்தையுடைய குதிரைகள் பூண்ட நெடிய தேரினை உடையவன் அஞ்சி (அதியமான் நெடுமான் அஞ்சி).
பாடல் நடை
- அகநானூறு: 352
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்,
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ,
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்;
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்;
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ!
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி,
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்,
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்,
புதுவது புனைந்த திறத்தினும்,
வதுவை நாளினும், இனியனால் எமக்கே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
24-Nov-2022, 18:42:05 IST