அச்சுதாநந்த அடிகள்
அச்சுதாநந்த அடிகள் (பொ.யு.19-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கிய புலவர். தியானனுபூதி என்னும் நூலை இயற்றியவர்.
வாழ்க்கை குறிப்பு
அச்சுதாநந்த அடிகள் 1868-ம் ஆண்டு சென்னைக்கு பக்கத்தில் உள்ள கோவிந்தபுரத்தில் சுப்பராய பூபதி - காமாட்சி இணையருக்ப் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் இறைவழிப்பாட்டில் ஈடுபட்டு சிவன் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்யத் தொடங்கினார்.
ஆன்மீக வாழ்க்கை
அச்சுதாநந்த அடிகள் சிவன் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்யும் காலத்தில் ஆன்மீகத் தேடல் கொண்டவராக மாறினார். விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலையில் வாழ்ந்த சிவசிதம்பர தேசிகரை தனது ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டார். குரு தீட்சை பெற்று அச்சுதாநந்த அடிகள் என்னும் பெயர் பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
அச்சுதாநந்த அடிகள் செய்யுள் இயற்றிப் பாடுவதில் புலமை பெற்றிருந்தார். சங்கராச்சாரியரின் ஆதரவையும் பெற்றிருந்தார். தனது ஆன்மீக வாழ்வின் சாரமாக 'தியானனுபூதி' என்னும் நூலை இயற்றினார். அந்நூல் திருவருள் விலாச பரம குரு வணக்கம், மரபு வணக்கம், திருவடிமாலை, பொருண்மாலை, பரதத்துவ நிச்சயம், மகாதேவமாலை, அனுபூதி நிலையம், குருவட்பேறு, பிரணவசகித குருநாமஸ்தவம், குருநாம சங்கீர்த்தனம், சிவநாம சங்கீர்த்தனம், அரிநாம சங்கீர்த்தனம், சிவசண்முகநாம சங்கீர்த்தனம், புசங்கசுப்ரயாத நவகம் திருநீற்றியல், பஞ்சாக்கரவியல், மனோலயம், அத்துவிதவுண்மை, ஆட்கொண்ட முறைமை, முப்பொருளொருமை, குருவருட்பான்மை, குருவருட்கோலம், குருவருட்காட்சி, நெஞ்சறிவுறுத்தல், சிவானுபவிளைவு, அவதார லீலை, திருச்சாழல், அன்னைப்பத்து, குயிற்பத்து, அடைக்கலப்பத்து, ஐக்கியானுசந்தானம், அனுபவமாற்றமை, ஆய்ந்தறிவடங்கல், முடியாவுவகை, பிரார்த்தனை, சங்கரநந்த மாலை, திருபள்ளியெழுச்சி உள்ளிட்ட 183 பகுதிகளை கொண்டது.
நூல் பட்டியல்
- தியானனுபூதி
பாடல் நடை
ஆலம் அமுதாய் அருந்திடு வானை
ஆரிய னாகி அருள்செயும் கோனை
மாலவ தாரமாய் மன்னிகிற் பானே
வாய்மலர்ந் தோர்மொழி வாய்மைசொல் வானைக்
கோல மெவையும் கொளும்பெரு மானைக்
கூடிக் குலாவுறுங் கொள்கையி னானை
ஏவ வரவிற் குயிலே வரவே
இசையுடன் கூறியென் இன்னுயிர் காவே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jul-2025, 10:59:18 IST