under review

அச்சப்பத்து

From Tamil Wiki

அச்சப் பத்து திருவாசகத்தின் 35-ஆவது பிரபந்தமாக அமைந்த பதிகம். சிவனை வழிபடாதவர்களைக் கண்டு அச்சப்படுவதாக மாணிக்கவாசகர் பாடிய பதிகம்.

ஆசிரியர்

மாணிக்கவாசகர் எட்டாம் திருமுறையான திருவாசகத்தை இயற்றியவர். அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தவர்.

நூல் அமைப்பு

அச்சப் பத்து பத்து அறுசேர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாடல்களைக் கொண்ட பதிகம். பத்து பாடல்களும் பாம்பு போன்ற கொடிய விலங்குகளையோ, நோய்களையோ, பாவங்களையோ கண்டு அஞ்சாமல், சிவபக்தர் அல்லாதவர்களைக் கண்டு மாணிக்கவாசகர் அஞ்சுவதாகப் பாடப்பட்டவை. ஒவ்வொறு பாடலும் 'அம்ம நான் அஞ்சுமாறே' என்று முடிகிறது.

பத்துப் பாடல்களிலும் சிவனின் திருவடிகளை நினைந்து உருகாதவர்களைக் கண்டால் அஞ்சுகிறேன் என்று பாடுகிறார். இரண்டு பாடல்களில் (520, 524) வெண்ணிறு அணியாதவர்களும் (520) திருமுண்டம் தீட்டாதவர்களும் (524) பேசப்படுகின்றனர். இரண்டு பாடல்களில் சிவபெருமானுடைய திருவடியைப் போற்றுவதை விட்டுப் பிற தெய்வங்களை நினைக்கின்றவர்களும் (516), பிறதெய்வங்களை நினைந்தவுடன் அருவருப்புக் கொள்ளாதவர்களும் (517) பேசப்படுகின்றனர். வெண்ணீறு அணிதல், திருமுண்டம் தீட்டுதல் என்பவை புறத்தே செய்யப்பெறும் செயல்களாகும். பிற தெய்வங்களைப் போற்றுபவர்கள், பிற தெய்வங்களை அருவருக்காதவர்கள் ஆகிய இருவருடைய செயல்களும் அவர்களுடைய மனநிலையைப் பொறுத்தவை. இந்த நான்கு பாடல்கள்தவிர, ஏனைய பாடல்களில் ஈசன் திருவடியில் அன்பு செலுத்தி மனம் உருகி நிற்காதவர்களை அஞ்சுவதாகப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.

பாடல் நடை

புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்

புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;
கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி,
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்

கோண் இலா வாழி அஞ்சேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்;
நீள் நிலா அணியினானை நினைந்து, நைந்து, உருகி, நெக்கு, வாழ்
 நிலாம் கண்கள் சோர, வாழ்த்திநின்று, ஏத்தமாட்டா
ஆண் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Jan-2025, 22:07:13 IST