அசோகா செல்லபாண்டியன்
அசோகா செல்லபாண்டியன் (பிறப்பு: அக்டோபர் 02, 1931) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர். பொது வாசிப்புக்குரிய நூல்களை எழுதினார். பல்வேறு இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
அசோகா செல்லபாண்டியன், அக்டோபர் 02, 1931 அன்று, தென்காசிக்கு அருகில் உள்ள கீழப்புலியூரில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
அசோக செல்லபாண்டியன், தமிழ் இதழ்களில், பொது வாசிப்புக்குரிய கதை, கட்டுரை, கவிதைகளை எழுதினார். தினமலர் நாளேட்டில் அசோக செல்லபாண்டியனின் பல படைப்புகள் வெளியாகின.
இதழியல்
அசோகா செல்லபாண்டியன் தினச்செய்தி, நம்நாடு. தமிழ்முரசு, தினமலர் போன்ற இதழ்களில் நிருபர், துணை ஆசிரியர், செய்தி ஆசிரியர், ஆசிரியர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றினார். தினமலர் நாளிதழின் ஞாயிறு இதழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
நாடக வாழ்க்கை
அசோகா செல்லபாண்டியன் அண்ணாத்துரையின் ஆட்சியை விதந்தோதும் வகையில் நாடகங்களை எழுதினார். 'அண்ணாவின் ஆட்சிக் காலமே தமிழகத்தின் பொற்காலம்; வாழ்வதானாலும், வீழ்வதானாலும் அது தமிழுக்காகவே இருக்க வேண்டும்' என்பது போன்ற கருத்துக்களைக் கொண்ட 'மரக்கிளையிலே பிணம்' என்னும் நாடகத்தை அரங்கேற்றினார்.
உழவர்களின் பெருமையைப் பேசும் 'பார் முழுவதும் ஏர் முனையிலே' என்னும் நாடகத்தை எழுதி அரங்காற்றுகை செய்தார். வரவேற்பைப் பெற்ற இந்த நாடகத்தைத் தொடர்ந்து பல நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.
பங்களிப்புகள்
நாடகங்கள்
- யார் உண்மைக் காதலி
- விதியின் விளையாடலா?
- மந்திரவாதி
- மரக்கிளையிலே பிணம்
- பார் முழுவதும் ஏர் முனையிலே
- நீயும் ஒரு தெய்வம்
- உங்களுக்கும் காலம் வரும்
- திப்புசுல்தான்
- வேலே சாட்சி
ஓரங்க நாடகங்கள்
- தேவலோகத்தில் குற்றாலம்
- 1967-இல் யாருக்கு வெற்றி
- எழுத்தாளன் வாழ்வது எந்நாள்?
- பராக்கிரமனும் கென்னடியும்
மதிப்பீடு
எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும், தமிழின் குறிப்பிடத்தகுந்த இதழாளர்களுள் ஒருவராகவும் அசோக செல்லபாண்டியன் அறியப்படுகிறார்.
உசாத்துணை
- நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2025, 08:06:52 IST