first review completed

சாகித்ய அகாதெமி

From Tamil Wiki
Revision as of 04:40, 8 September 2023 by Madhusaml (talk | contribs) (Madhusaml moved page சாகித்ய அகாடமி to சாகித்ய அகாதெமி without leaving a redirect)
சாகித்ய அகாதெமி நிறுவன அடையாளச் சின்னம்

அனைத்து இந்திய மொழிகளிலும் இலக்கியச் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைக்கவும் 1954-ஆம் ஆண்டில் இந்திய அரசால் சாகித்ய அகாதெமி தோற்றுவிக்கப்பட்டது. இலக்கியப் படைப்புகளை இந்தியா முழுமைக்கும் அறிமுகம் செய்தல், இலக்கியம் மூலம் நாட்டின் கலாச்சார ஒற்றுமையை மேம்படுத்துதல், இந்திய மொழிகளுக்கிடையே இணைப்புப் பாலமாகச் செயல்படுதல் இவ்வமைப்பின் முக்கிய நோக்கம்.

சாகித்ய அகாதெமியின் செயல்பாடுகள்

இந்திய மொழிகளுக்கிடையே இணைப்புப் பாலமாகச் செயல்படும் நோக்கத்தில், இந்திய அரசால், மார்ச் 12, 1954-ல், சாகித்ய அகாதெமி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இலக்கியப் படைப்புகளை இந்தியா முழுமைக்கும் அறிமுகம் செய்தல், இலக்கியம் மூலம் நாட்டின் கலாச்சார ஒற்றுமையை மேம்படுத்துதல் மற்றும் இலக்கியம் மூலம் ஒருங்கிணைவை ஏற்படுத்துதல் இவ்வமைப்பின் நோக்கம்.

ஆண்டு தோறும் 24 இந்திய மொழிகளில், இலக்கியக் கூட்டங்கள், எழுத்தாளர்கள் சந்திப்பு, உரையாடல் நிகழ்வுகள் கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள், நூல்கள் வெளியீடு, விருதளிப்பு போன்ற இலக்கியச் செயல்பாடுகளை சாகித்ய அகாதெமி மேற்கொண்டு வருகிறது. இதுவரை 6000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

சிறந்த எழுத்தாளர்களை, டாக்டர் ஆனந்த் குமாரசாமி மற்றும் பிரேம்சந்த் ஆகியோரது நினைவு புத்தாய்வாளர் மற்றும் ஃபெலோஸ் மற்றும் கெளரவ புத்தாய்வாளர்களாக (Fellows and Honorary Fellows) தேர்ந்தெடுத்துச் சிறப்பித்து வருகிறது. மொழி வள மேம்பாட்டிற்காக பெங்களூர், அகமதாபாத், கொல்கத்தா மற்றும் டெல்லியில் மொழிபெயர்ப்பு மையங்களையும், டெல்லியில் இந்திய இலக்கியக் காப்பகத்தையும் அமைத்து இலக்கியப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஷில்லாங்கில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழக வளாகத்தில் பழங்குடியினர் மற்றும் வாய்மொழி இலக்கியங்களை மேம்படுத்துவதற்கான சாகித்ய அகாதெமியின் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

சாகித்ய அகாதெமி விருதுகள்

இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் இருபத்து நான்கிலும் ஆண்டுதோறும் கீழ்காணும் விருதுகளை சாகித்ய அகாதெமி நிறுவனம் வழங்கி வருகிறது.

சாகித்ய அகாதெமி விருது

சாகித்ய அகாதெமி விருது 1955 முதல் வழங்கப்படுகிறது. ஆரம்பக் காலக்கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளர்களுக்கு ரூபாய் 5000/- விருதாக அளிக்கப்பட்டது. பின்னர் இத்தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2009 முதல் ஒரு லட்சம் ரூபாய் விருதுத்தொகையாக வழங்கப்படுகிறது. விருதுத் தொகையுடன் கேடயமும், சான்றிதழும் அளிக்கப்படுகிறது. விருதினை குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.

பாஷா சம்மான் விருது

இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற 24 மொழிகள் தவிர பிற இந்திய மொழிகளில் செயல்படும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 1996 முதல் பாஷா சம்மான் விருது வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் இவ்விருதின் தொகை 25000/- ரூபாய் ஆக இருந்தது. தற்போது ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெறாத இந்திய மொழிகளில் செயல்படும் படைப்பாளிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. விருதுத் தொகையுடன் கேடயமும், சான்றிதழும் அளிக்கப்படுகிறது.

மொழிபெயர்ப்பு விருது

அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது வழங்கப்படுகிறது. 1989 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் ரூ.10,000/- ஆக இருந்து, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2009 முதல் ரூ.50,000/- ஆக வழங்கப்படுகிறது. பரிசுடன் தகுதிச்சான்றும் கேடயமும் கொண்டது இவ்விருது.

பால் சாகித்ய புரஸ்கார் விருது

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாதெமியின் பால் சாகித்ய புரஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2010-ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குழந்தை இலக்கியப் படைப்பாளிக்கு, இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், தகுதிச்சான்றும், சால்வையும், கேடயமும் கொண்டது.

யுவ புரஸ்கார் விருது

இந்திய இளைஞர்களிடையே இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இலக்கியத்திற்குச் சிறந்த பங்களிப்பாற்றும் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. 2011 முதல் வழங்கப்படும் இவ்விருது ஐம்பதாயிரம் ரூபாய் பரிசும், சால்வையும், கேடயமும் கொண்டது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.