under review

சதீஷ்குமார் டோக்ரா

From Tamil Wiki
Revision as of 20:12, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சதீஷ்குமார் டோக்ரா இ.கா.ப. (ஓய்வு)
S.K. Dogra I.P.S.

சதீஷ்குமார் டோக்ரா (எஸ்.கே. டோக்ரா; 1953) கவிஞர்; எழுத்தாளர். பாடலாசிரியர். கல்லூரிப் பேராசிரியராகவும், இந்திய காவல் துறையில் (I.P.S.) அதிகாரியாகவும் பணியாற்றினார். ஐ.ஏ.எஸ். பயிலும் மாணவர்களுக்கு ஆலோசகராக, வழிகாட்டியாகச் செயல்பட்டார். தனியார் நிறுவனம் ஒன்றின் மனித வளம் மற்றும் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

எஸ்.கே. டோக்ரா, 1953-ல் பஞ்சாபில் உள்ள தாரிவார் என்ற ஊரில் பிறந்தார். அங்குள்ள டி.ஏ.வி. பள்ளியில் மேல்நிலை வகுப்பு வரை படித்தார். குர்தாஸ்பூர் அரசுக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். பட்டாலாவில் உள்ள பேரிங் யூனியன் கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். சுய முயற்சியால் தமிழ் கற்றார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், உருது, ரஷ்ய மொழிகள் பேச, எழுதக் கற்றார்.

தனி வாழ்க்கை

எஸ்.கே. டோக்ரா, அம்ருத்ஸரிலுள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 1982-ல் இந்தியக் காவல் பணியில் தேர்ச்சி பெற்றார். 1985-லிருந்து தமிழக அரசின் காவல்துறையில் உதவி கண்காணிப்பாளர் தொடங்கி தீயணைப்புத் துறை, சிறைத்துறை, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போன்ற துறைகளின் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்தார். காவல்துறைத் தலைமை இயக்குநராகப் பணியாற்றி (D.G.P.) ஓய்வு பெற்றார். தனியார் நிறுவனம் ஒன்றின் மனித வளம் மற்றும் பாதுகாப்பு ஆலோசகராக உள்ளார். மணமானவர். இரண்டு மகள்கள் உண்டு.

குடும்பமே கோயில் நாவல் - எஸ்.கே. டோக்ரா
அண்ணா பல்கலையில் மாணவர்களுக்கு உரை

இலக்கிய வாழ்க்கை

தமிழ்நாட்டில் பணியாற்றிய எஸ்.கே. டோக்ரா, தமிழ் மொழியை பேசவும் எழுதவும் கற்றார். மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றியதால் தமிழின் இலக்கணத்தை விரும்பிக் கற்றார். கம்பனாலும், பாரதியாலும் ஈர்க்கப்பட்டுக் கவிதைகள், பாடல்கள் எழுதினார். ‘தமிழியல்’ குறித்துப் பல கட்டுரைகளை நாளிதழ்களில் எழுதினார். ‘ராணி’, ‘தங்கம்’ போன்ற இதழ்களில் பொது வாசிப்புக்குரிய சிறுகதை, நாவல்களை எழுதினார்.

’டோக்ரா டமில்’ என்ற இணையதளத்தில் தனது தமிழ்க் கட்டுரைகளை வெளியிட்டார். கலைச்சொல்லாக்க முயற்சிகளில் ஈடுபட்டார். 'Pesonality', ’hormone' ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு தன்னியல்பு ( ‘ஆளுமை’ என்பதற்குப் பதிலாக)‘ ‘இயக்கிச் சாறு’ என்ற புதிய தமிழ்ச் சொற்களை முன்வைத்தார். கம்பராமாயணம், பகவத் கீதை, தமிழ்ப் பாடல்கள், இலக்கணம் குறித்து பல யூட்யூப் காணொளிகளில் விளக்கினார்.

இதழியல்

எஸ்.கே. டோக்ரா 'Crisis Response Journal' என்னும் ஆங்கில இணைய இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். ஆங்கிலம், சம்ஸ்கிருத இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார்.

இலக்கிய இடம்

எஸ்.கே. டோக்ரா, பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை எழுதினார். தமிழின் மீது ஆர்வம் கொண்டு இவர் எழுதிய தமிழியல் சார்ந்த பல கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்தவை. கலைச்சொல்லாக்க முயற்சியில் ஆர்வம் கொண்டு பல கலைச்சொற்களை உருவாக்கினார்.

பொது நூலகத்துறை சிறந்த எழுத்தாளர் விருது
சிறந்த எழுத்தாளர் விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது

விருதுகள்

  • சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் (President's Medal for Meritorious Service)
  • சிறப்புமிக்க பணிக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் (President's Medal for Distinguished Service)
  • பள்ளிக்கல்வி மற்றும் நூலகத் துறை வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது. (2019)
  • SprinQ அமைப்பு வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது

நூல்கள்

புதினங்கள்
  • குடும்பமே கோயில்
  • சாயல்

உசாத்துணை


✅Finalised Page