under review

வைரமுத்து

From Tamil Wiki
வைரமுத்து

வைரமுத்து (பிறப்பு: ஜூலை 13, 1953) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர். வானம்பாடி கவிமரபைச் சேர்ந்த கவிதைகள் எழுதினார். சிறுகதைகள், நாவல்கள் எழுதினார். இந்திய அளவில் பாடலாசிரியராக இவருடைய இடம் குறிப்பிடத்தக்கது. புதுக்கவிதையின் விந்தையான சொல்லாட்சிகளையும் நாட்டாரியலின் அரிய சொல்லாட்சிகளையும் திரைப்பாடலுக்குக் கொண்டு சென்றவர்.

பிறப்பு, கல்வி

வைரமுத்து தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி, அங்கம்மாள் இணையருக்கு ஜூலை 13, 1953-ல் பிறந்தார். வடுகப்பட்டியில் பள்ளிக்கல்வி பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

வைரமுத்து பொன்மணியை மணந்தார். மகன்கள் மதன் கார்க்கி, கபிலன்.

அமைப்புப் பணிகள்

வைரமுத்துவின் 'வெற்றித்தமிழர் பேரவை' என்னும் அமைப்பு இளைஞர்களை இலக்கியத்திற்குள் ஈர்க்கும் பணியைs செய்தது.

திரை வாழ்க்கை

வைரமுத்து 1980-ல் 'நிழல்கள்' எனும் திரைப்படத்தில் “இது ஒரு பொன்மாலைப் பொழுது” எனும் பாடல் வழியாக திரைத்துறையில் நுழைந்தார். ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார். பாடலாசிரியராக ஆறுமுறை தேசிய விருது பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

வைரமுத்து கவிதையை நேரடிப்பிரகடனமாகக் கருதிய வானம்பாடிக் கவிமரபிலிருந்து எழுந்தவர். வைரமுத்து அந்த அழகியலுடன் திராவிட இயக்க மேடைப்பேச்சுக்கான அடுக்குச்சொல்லாட்சிகளையும் இணைத்துக்கொண்டு கவிதைகள் எழுதினார். அவருடைய புனைகதைகள் செயற்கையான தருணங்களை புனைந்து வழக்கமான அரசியல்சரி கொண்ட கருத்துக்களை முன்வைப்பவை. அவர் எழுதிய நூல்களில் அவர் வளர்ந்த சூழலின் வாழ்க்கையின் சித்திரம் கொண்ட 'கள்ளிக்காட்டு இதிகாசம்' குறிப்பிடத்தக்கது. இளமையில் அவர் பெற்றுக்கொண்ட நுண்தகவல்களின் தொகை என்பதனாலும் அது குறிப்பிடத்தக்கது. வைரமுத்து நாவல்கள், சிறுகதைகள் எழுதினார்.

மதிப்பீடு

”பாடல் (லிரிக்) என்பது எடுத்தாள்கைக் கவிதை (Applied Poetry). ஏற்கனவே மொழியில் உள்ள கவித்துவத்தை மெட்டுக்கு இணங்க அமைப்பது. ஒருவகை மொழித்தொழில்நுட்பம். மரபுத்தேர்ச்சியும் இசையமைவும் கொண்ட உள்ளம் அதற்குத்தேவை. புதுக்கவிதையின் விந்தையான சொல்லாட்சிகளையும் நாட்டாரியலின் அரிய சொல்லாட்சிகளையும் திரைப்பாடல்களில் சரியாக அமைத்த வைரமுத்துவின் சாதனைக்கு நிகராக இந்திய அளவிலேயே மிகச்சிலர்தான் உள்ளனர். அவருடைய விரிவான மரபிலக்கிய ஞானமும் நவீனக்கவிதை வாசிப்பும் அதற்கு அடித்தளம். நவீனக் கவிதையின் சொல்லாட்சிகளை பாடலுக்குக் கொண்டு சென்றவர்.” என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிட்டார்.

"வைரமுத்துவின் சிறுகதைகள் தமிழ்ச்சிறுகதைமரபின் இதுவரை அடையப்பட்ட அழகியல்நெறிகளை முன்னெடுக்கவில்லை. மீறிச்சென்று புதிய இடங்களைக் கண்டடையவும் இல்லை.அவை தமிழின் பிரபலப்பத்திரிகைகளில் வரும் வழக்கமாக கதைகளாகவே உள்ளன. ஒருசூழல் சித்தரிப்பை சுருக்கமாகச் சொல்லி, வழக்கமான குணங்கள் கொண்ட வரையறுக்கப்பட்ட கதைமாந்தர்களை நேரடியாக அறிமுகம்செய்து, அவற்றை ஒட்டி நிகழ்ச்சிகளை சமைத்து, அவற்றின் உச்சமாக ஒரு மையக்கருத்தை திருப்பமாக முடிச்சிட்டு வைக்கும் எழுத்துமுறை இது. அவருடைய நாவல்களில் 'கருவாச்சி காவியம்' குறிப்பிடத்தக்கது" என ஜெயமோகன் மதிப்பிட்டார்.

விருதுகள்

  • கலைமாமணி விருது (1990)
  • கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது (2003)
  • பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருது (2014)
  • சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை)

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • வைகறை மேகங்கள்
  • திருத்தி எழுதிய தீர்ப்புகள்
  • இன்னொரு தேசியகீதம்
  • எனது பழைய பனையோலைகள்
  • கவிராஜன் கதை
  • இரத்த தானம்
  • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
  • தமிழுக்கு நிறமுண்டு
  • பெய்யெனப் பெய்யும் ம‌ழை
  • எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்
  • கொடி மரத்தின் வேர்கள்
  • மகாகவிதை
நாவல்
  • வானம் தொட்டுவிடும் தூரம்தான்
  • மீண்டும் என் தொட்டிலுக்கு
  • வில்லோடு வா நிலவே
  • சிகரங்களை நோக்கி
  • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
  • காவி நிறத்தில் ஒரு காதல்
  • தண்ணீர் தேசம்
  • கள்ளிக்காட்டு இதிகாசம்
  • கருவாச்சி காவியம்
  • மூன்றாம் உலகப்போர்
சிறுகதைகள்
  • வைரமுத்து சிறுகதைகள்
கட்டுரைகள்
  • இதுவரை நான் (தன்வரலாறு)
  • கல்வெட்டுக்கள்
  • என் ஜன்னலின் வழியே
  • நேற்று போட்ட கோலம்
  • ஒரு மெளனத்தின் சப்தங்கள்
  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
  • வடுகபட்டி முதல் வால்கா வரை
  • இதனால் சகலமானவர்களுக்கும்
  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
  • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
  • தமிழாற்றுப்படை

இணைப்புகள்


✅Finalised Page