வெ. இறையன்பு

From Tamil Wiki
Revision as of 20:21, 17 February 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Images Added; Interlink Created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வெ. இறையன்பு, ஐ.ஏ.எஸ்.
பள்ளி மாணவராகப் பரிசு பெறும் இறையன்பு

வெ. இறையன்பு (வெங்கடாசலம் இறையன்பு) (பிறப்பு:செப்டம்பர் 16, 1963) ஓர் இந்திய ஆட்சிப் பணித் துறை அதிகாரி. எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர். தமிழக அரசுத் துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகப் பணியாற்றி வருகிறார்.

பிறப்பு, கல்வி

வெ. இறையன்பு, சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூரில், செப்டம்பர் 16, 1963 அன்று, வெங்கடாசலம்-பேபி சரோஜா இணையருக்குப் பிறந்தார். (பள்ளியில் சேரும்போது பிறந்த நாள் ஜூன் 16 என்று மாற்றப்பட்டது) ஆரம்பக் கல்வியை உள்ளூரில் பயின்றார். மேற்கல்வியை ஸ்ரீ ராமகிருஷ்ணா சாராத மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளம் அறிவியல் (B.Sc. Agriculture) பட்டம் பெற்றார். தொடர்ந்து வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றார். தொழிலாளர் மேலாண்மை, உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

வெ. இறையன்பு, வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஆங்கில இலக்கியத்திலும், விவசாயத்திலும் முனைவர் பட்டம் பெற்றவர், மேலாண்மையில் முது முனைவர் பட்டம் பெற்றார். இந்தி மொழியில் ‘பிரவீண்’, சம்ஸ்கிருதத்தில் ’கோவிதஹா’ தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

வெ. இறையன்பு, 1986-ல், இந்தியக் குடிநிலைத் தேர்வு (Indian Civil Service Examination) எழுதித் தேர்ச்சி பெற்று, இந்திய வருவாய்த்துறையில் பணியாற்றினார். 1987-இல் நடைபெற்ற குடியுரிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய ஆட்சிப் பணிதுறை அதிகாரி ஆனார். நாகப்பட்டினம் மாவட்டத்தின் உதவி ஆட்சியர், கடலூர் மாவட்டக் கூடுதல் ஆட்சியர் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்,  செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைச் செயலர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தார். தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆக உள்ளார். மணமானவர்.

இலக்கிய வாழ்க்கை

வெ. இறையன்பு, கல்லூரிக் காலத்தில் கவிதைகள் எழுதினார். கடலூரில் பணியாற்றிய காலத்தில் ‘பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்’ என்ற தலைப்பில் அக்கவிதைகளைத் தொகுத்து தன் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அமுதசுரபி, ஆனந்த விகடன், இதயம் பேசுகிறது, தாமரை, கணையாழி, புதிய பார்வை, தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களுக்கு கதை, கவிதை, கட்டுரைகளை எழுதினார். முதல் நாவல் ‘ஆத்தங்கரை ஓரம்’ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது. நர்மதா அணை கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது இந்நாவல்.

இறையன்புவின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘அரிதாரம்'. தொடர்ந்து பல சிறுகதைகளையும், நாவல்களையும், சுய முன்னேற்றக் கட்டுரைகளையும், வாழ்வியல் விளக்க நூல்களையும் எழுதினார். ஐ.ஏ.எஸ். பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் இவர் எழுதிய ’ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்' நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.