being created
under review

வெறிபாடிய காமக்கண்ணியார்

From Tamil Wiki
Revision as of 15:57, 7 October 2022 by Siva Angammal (talk | contribs)

வெறிபாடிய காமக்கண்ணியார் சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கத் தொகை நூல்களில் ஐந்து பாடல்கள்  உள்ளன.

பெயர் விளக்கம்

வெறியாட்டு விழாவைப் பற்றி காமக் கண்ணியார் தம் இரு பாடல்களிலும் பாடியுள்ளதால் இவரை வெறிபாடிய காமக் கண்ணியார் என்றனர். காமக் கண் என்பது வெறியாடும் பெண்ணின் காமக் கண். இவர் பாடற் பொருளால் பெயர் பெற்ற புலவர்.

பாடல்கள்

வெறிபாடிய காமக்கண்ணியார் பாடிய பாடல்கள்;

வெறியாட்டு

தலைவன் தலைவியைத் துய்த்தான். அவன் ஏக்கத்தால் தலைவி மெலிந்தாள். மெலிவுக்குக் காரணம் தாய் ஆராய்ந்தது பற்றியும், வெறியாட்டு விழாக் கொண்டாடியது பற்றியும், விழாவுக்குப் பின் நிகழ்ந்தது பற்றியும் இப்புலவர் தன் இரு பாடல்களில் கூறியுள்ளதன் தொகுப்பு;

தலைவன் தலைவி உறவு தாய்க்குத் தெரியாது. தலையளி செய்யாத தலைவனை நினைந்து ஏங்கும் தலைவி உடல் மெலிந்துபோகிறாள். அதனால் அவளது கைவளை கழல்கிறது. தலைவி மெலிவுக்குக் காரணம் என்னவென்று அவளது தாய் குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டைக் கேட்கிறாள். அவளும் அவளைச் சேர்ந்தவர்களும் 'பொய்வல் பெண்டிர்'. அவள் பிரம்பைத் தலைவியின் கையில் வைத்துப் பார்த்துக் குறி சொல்கிறாள். குறிக்காரி நெடுவேளாகிய முருகனைப் பேணி விழாக் கொண்டாடினால் இவள் ஏக்கம் தணியும் என்கிறாள். அதன்படி விழாக் கொண்டாடினர். அந்த விழாவை முருகாற்றுப்படுத்தல் என்றும் கூறுவர். மகளின் அழகு முன்பு இருந்ததைவிட மேலும் சிறக்கவேண்டும் எனத் தாய் வேண்டிக்கொள்வாள். மனையில் இன்னிசை முழங்கப்படும். விழாவுக்குக் களம் அமைப்பர். அகன்ற பந்தல் போடுவர். முருகாற்றுப்படுத்தும் பெண்ணுக்கு வெள்ளெருக்கு மாலையும், கடம்பு மாலையும் அணிவிப்பர். வேலன் வீடெங்கும் எதிரொலிக்கும்படி முருகன் பெயர் சொல்லிப் பாடிக்கொண்டு கைகளை உயர்த்தி ஆடுவான். (மறி என்னும் ஆட்டுக்குட்டியைப்) பலி கொடுப்பான். அதன் குருதியில் கலந்து தினையை மனையெங்கும் தூவுவான். பொம்மலாட்டத்தில் பொம்மையை ஆட்டுவது போல வெறியாடு மகளைத் தன் விருப்பப்படி ஆட்டுவிப்பான். இதுதான் வெறியாட்டு.

பாடல்கள்

வெறிபாடிய காமக்கண்ணியார் பாடி சங்கத் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ள ஐந்து பாடல்கள்;

புறநானூனு 271

நீரறவு அறியா நிலமுதற் கலந்த

கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை,

மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்,

தொடலை ஆகவும் கண்டனம் ; இனியே,

வெருவரு குருதியொடு மயங்கி, உருவுகரந்து,

ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்,

பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்

மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே!

(திணை: நொட்சி)

எளிய பொருள்;

அன்று மகளிர் அணியாக இருந்தது. இன்று நொச்சி வீரன் மாலையாகிக் கிடக்கிறது. அன்று தொடலை அணி. இன்று தெரியல் அணி. அன்று மெல்லியல் சூடிய அணி. இன்று வீரன் சூடிய அணி. அன்று மகளிர் இடுப்பில் கிடந்தது. இன்று குருதி தோய்ந்த நிலையில் சதைப் பிண்டமோ என்று பருந்து கண்டு மருளும்படிக் கிடக்கிறது. அன்று நொச்சிப் பூவை மகளிர் அணியும் தழையணி மேகலை ஆடையில் பார்த்தேன். இன்று அப் பூ தன் உருவினை மறைத்துக்கொண்டு, பலரும் வெறுக்கும் மாலையாகி (ஒறுவாய்ப்பட்ட தெரியல்), சதைப் பிண்டம் போல, கோட்டை காத்த வீரன் (மறம் புகல் மறவன்) சூடிய நிலையில் பருந்து கவர்ந்துண்ணும் அச்சம் தரும் குருதி தோய்ந்து கிடப்பதைப் பார்க்கிறேன். அந்தோ! நொச்சி – நீரோட்டம் உள்ள இடங்களில் பூக்கும். கருநிற (நீலநிற)க் கதிர்களாகப் பூக்கும். அதன் தழையும் பூவுமாகச் சேர்த்துத் தழையாடைத் தொடலையாகப் புணைந்து அல்குல் பகுதியில் மகளிர் அணிந்துகொள்வர். அது அவர்களுக்கு மெல்லணி.

புறநானூறு 302

வெடிவேய் கொள்வது போல ஓடித்

தாவுபு உகளும், மாவே; பூவே,

விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;

நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய

ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய,

நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;

நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,

வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,

விண்ணிவர் விசும்பின் மீனும்,

தண்பெயல் உறையும், உறையாற் றாவே

(திணை: தும்பை)

எளிய பொருள்;

காளையின் குதிரை மூங்கில் வெடிப்பது போல ‘டப், டப்’ என்று தாவித் துள்ளிப் பாய்ந்தது. (வளைத்து விட்ட மூங்கில் விசிவது போலத் தாவிப் பாய்ந்தது எனக் காட்டுகிறது, பழைய உரை) காளையின் ஊர் கரம்பு நிலம். என்றாலும் வறுமை இல்லாத ஊர். பாணர் வாழும் ஊர். நரந்தம் பூப் பூத்திருக்கும் கொடியை யாழின் வளைவுக் கோட்டில் சுற்றிக்கொண்டு இசை கூட்டும் பாணர் வாழும் ஊர். விருதாகப் பெற்ற பொற்றாமரைப் பூவைக் கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் பாணர்-மகளிர் வாழும் ஊர்.

அகநானூறு 22

அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்

கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்

மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்

இது என அறியா மறுவரற் பொழுதில்,

படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை

நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என,

முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,

களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,

வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,

உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,

முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,

ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த

சாரற் பல் பூ வண்டு படச் சூடி,

களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்

ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,

நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை

தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,

இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து,

நக்கனென் அல்லெனோ யானே எய்த்த

நோய் தணி காதலர் வர, ஈண்டு

ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?

(திணை- குறிஞ்சி)

எளிய பொருள்;

அழகால் நெஞ்சை அள்ளும் [அணங்கும்] மலை உச்சி. அதிலிருந்து இறங்கும் [இழிதரும்] அருவி. அருவிகள் பல ஒன்று திரண்டு கொட்டும் [கணங்கொள்] அருவி. இப்படிப்பட்ட அருவிகளைக் கொண்ட கானக நாடன் அவன். அவனது மணம் கமழும் மார்பின்ப நினைவு [அணங்கிய செல்லல்] என்னை வருத்திக்கொண்டிருக்கிறது. இதனை அறியாமல் பிறர் தடுமாறும் [மறுவரும்] காலத்தில் நெடுவேள் முருகப் பெருமான் உலகிலுள்ளோரின் துன்பங்களைத் தேய்த்துப் பாழாக்கியவன். அவனைப் பேணி விழா எடுத்தால் இவள் ஏக்கம் தணியும் என்று முதுவாய் பெண்டிர் குறி சொல்லும் பெண்கள்) கூறினர். அதுதான் வழி, அதுதான் உண்மை  [அது வாய்] என்று கூறக் கேட்டு, முருகுவிழாக் கொண்டாடும் களம் உருவாக்கினர். தோரண மாலைகளைத் தொங்கவிட்டனர். ஊரே எதிரொலிக்கும்படி கைச்சிலம்பை ஆட்டிக்கொண்டு பாடினர். ஆட்டை உயிர்ப்பலி கொடுத்தனர். அதன் குருதி தோய்ந்த சிவப்புநிற தினை-அரிசி தூவினர். என்னை முருகாற்றினர். என் முருகை ஆற்றினர். என் அழகை ஆற்றினர். அப்படி ஆற்றுப்படுத்தும் அச்சம் தரும் நள்ளிரவு, அப்போது என் நோயைத் தணிக்கும் காதலன் வந்தான். அவன் மார்பிலே சந்தனம். தலையிலே பூ. மலைப்பிளவுச் சாரலில் பூத்த பூ. வண்டு மொய்க்கும் புதுப் பூ. இரைக்காக யானையைத் தாக்க மறைந்தும் பதுங்கியும் செல்லும் புலி போல மறைந்தும், பதுங்கியும் அடிவைத்து நடந்து வந்தான். வீட்டிலுள்ள காவலர்களுக்குத் தெரியாமல் வந்தான். அவன் ஆசையும் நம் விருப்பமும் நிறைவேறும்படி வந்தான். என் உயிர் குழையும்படித் தழுவினான். சாமியாடி வேலன் ஏமாந்துபோனான் [உலந்தான்]. அப்போது எனக்கு ஒரே சிரிப்பு என் வாட்டம் போக்கத் தாய் இல்லத்தில் முருகனுக்கு விழா எடுக்கிறாள். அது கண்டு நான் சிரித்தேன். காவலர்க்குத் தெரியாமல் அவன் வந்தான். நான் அவனைத் தழுவினேன்.

அகநானூறு 98

பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன்,

துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த

இனிய உள்ளம் இன்னாஆக,

முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்

சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல்

அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல்

செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி,

கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்

பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,

'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து,

ஓவத்தன்ன வினை புனை நல் இல்,

'பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்

பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ,

கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து,

ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்,

வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர்

ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா,

செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன்

வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்

பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்,

என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய

மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக

ஆடிய பின்னும், வாடிய மேனி

பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை

அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று,

அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி,

வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே,

'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக்

கான் கெழு நாடன் கேட்பின்,

யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே.

(திணை – குறிஞ்சி)

எளிய பொருள்;

பனிமலையில் (இமயமலையில்) உயர்ந்த மலைமுகடுகளுக்கு இடையில் இருக்கும் கவாண் (கவண் போன்ற அமைப்பினைக் கொண்டிருக்கும் கணவாய் மலைப்பிளவு) பகுதியில், அவர் நமக்கு (எனக்கு) பிணக்கிக்கொள்ளவே முடியாத உறவுக் கோட்பாட்டோடு, இனிமையைத் தந்தார்.  அந்த இனிய உள்ளம் இப்போது இன்னாததாக மாறிவிட்டது. வெறுக்கத் தக்க நிலையினதாக அவர் தந்த கொடை (நல்கல்) அமைந்துவிட்டது. எனக்கு நேர்ந்துள்ள இந்தத் துன்பம் அவனது மார்பினைப் பெற்றால் அன்றித் தணியாது. இது அன்னைக்குத் தெரியவில்லை. வெறியாட்டு நடத்த முனைகிறாள். நீண்ட கோலை (வார்கோல்) வளைத்துக் கட்டிச் செய்த, என் தோளிலே செறிவாகக் கிடந்த வளையல் நெகிழ்ந்து நழுவுவதை தாய் பார்த்துவிட்டாள். என்ன செய்வதென்று தெரியாமல், குறி சொல்லும் முதுவாய்ப் பெண்களைக் கேட்டாள். அவர்கள் தன் கையில் வைத்திருக்கும் பிரம்பால் என்னைத் தட்டிப் பார்த்து, “முருகன் பிடித்து ஆட்டுகிறான்” என்றனர். அதனை அவள் நம்பிவிட்டாள் (அது செத்து). ஓவியம் போன்ற வேலைப்பாடுகளால் புனையப்பட்ட இல்லத்தில் வாழும் இவளது உருவழகானது (கவின்) செய்து வைக்கப்பட்ட பதுமை போன்றது. பலரும் ஆராய்ந்து போற்றும் அந்தச் சிறப்பு மிக்க அழகு முன்பு இருந்ததை விட மேலும் சிறப்படையவேண்டும் என்று கூறிக்கொண்டு வெறியாட்டு நடத்துகிறாள். மேளத்தாளம் முழங்க வெறியாடும் களம் அமைத்தாள். ஆட்ட பாட்டத்துடன் (ஆடு அணி) விழா நடத்தி (அயர்ந்து) அகன்ற பெரிய பந்தல் போட்டாள். வேலன் வெண்நிறப் கடம்பு மலரைச் சூடிக்கொண்டு வந்தான். இனிய சீரிசையால் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான். அந்தப் பாட்டு (பாணி) மென்மையானது (ஐது). கையை ஆட்டிக்கொண்டு வந்தான். ’முருகா’ என்று செல்வனின் பெரும்பெயரைச் சொல்லி வாழ்த்திக்கொண்டு வந்தான். வெறியாட்டு மேடை சிறக்கும்படி வந்தான். பொம்மலாட்டத்தில் வல்லவன் நடத்திக்காட்டும் பொம்மை போல என்னை ஆட்டிவைக்க வந்தான். தோழி! இனி என்ன நடக்குமோ தெரியவில்லை. ஆசையில் மயங்கி, நொந்துகொண்டிருக்கும் பெண்களுக்கு மேலும் துன்பம் உண்டாகும்படி, நான் வெறியாடிய பின்னும் என் மேனி முன்பு இருந்தது போலச் சிறப்படையாது என்பது தானே உண்மை? அதன் பிறகு என்ன நடக்கும். வெறியாட்டத்தில் நெடுவேள் முருகன் இவளுக்கு முன்பு இருந்த நிலையைத் தருவான் என்று கூறிய இந்த அறிவாளிகள் முன்பு இருந்த நிலையை முருகன் நல்காமை கண்டு மேலும் வருந்துவார்களே! செறிதொடியாகிய நான் உற்ற துன்பம் வேறொன்று என்று என் காதலன் கான்கெழு நாடன் கேட்பின், நான் உயிர் வாழ்தல் அரிது அல்லவா?

நற்றிணை 268

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,

மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,

கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,

ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த

நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்

காதல் செய்தவும் காதலன்மை

யாதனிற்கொல்லோ?- தோழி!- வினவுகம்,

பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு

மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே.

(திணை- குறிஞ்சி)

எளிய பொருள்;

தோழீ! மணலைப் பரப்பிய முற்றத்தைச் சிறப்புச் செய்து; மெய்ம்மையைக் கூறுகின்ற கழங்கிட்டுக் குறிபார்த்தலையுடைய படிமத்தானை அன்னை வீட்டில் அழைத்து வந்திருத்தலானே; அச்சஞ் செய்தலையுடைய இடமகன்ற சுனையில் நீர் நிறையும்படியாக; மேகம் மழை பெய்துவிட்ட மிக்க நெடிய குன்றத்தின்கண்ணே; கரிய காம்பையுடைய குறிஞ்சியின் வன்மையில்லாத மெல்லிய வெளிய பூ; ஓவியன் மலையிடத்தே சித்திரித்தாற்போன்ற வேட்டுவர் இல்லங்களிலே இழைக்கப்பட்ட தேனடைக்கு வேண்டிய அளவு மணங்கொண்ட தேனூறுகின்ற நாட்டையுடைய தலைவனுக்கு; யாம் பலபடியாகக் காதலுண்டாக்கியிருந்தும் அவனாலே காதலிக்கப்படுந் தன்மையே மல்லாதிருத்தல் எக்காரணத்தினாலோ? இவ்வொரு காரியத்தை அந்த வேலன்பாற் கேட்போமாக;

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்

எட்டுத்தொகை நூல்கள், தமிழ் சுரங்கம்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.