வி.கிருஷ்ணசாமி ஐயர்

From Tamil Wiki
Revision as of 18:25, 1 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "'''கிருஷ்ணசுவாமி ஐயர்''' (''Venkatarama Iyer Krishnaswamy Iyer'', சூன் 15, 1863 – டிசம்பர் 28, 1911) இந்திய வழக்கறிஞரும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசருமாவார். 1912 இல் சென்னைப் பல்கலைக்கழக செனேட்டின் முன் இவரது சிலைநிற...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கிருஷ்ணசுவாமி ஐயர் (Venkatarama Iyer Krishnaswamy Iyer, சூன் 15, 1863 – டிசம்பர் 28, 1911) இந்திய வழக்கறிஞரும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசருமாவார். 1912 இல் சென்னைப் பல்கலைக்கழக செனேட்டின் முன் இவரது சிலைநிறுவப்பட்ட காலகட்டத்தில், அவ்வாறு கடற்கரையில் சிலையமைக்கப்பட்ட இந்தியர்களில் இவர்தான் முதலாமாவர்.. சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்கையில் அவரை வழி அனுப்புவதற்கும், திரும்பி வரும்போது வரவேற்பு அளிப்பதற்கும் முன்னின்ற சென்னைவாசிகளுள் ஒருவர். நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் இவரது கொள்ளுப்பேத்தி ஆவார்.

இளமை[தொகு]

ஜூன் 15, 1863 இல் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் பிறந்தார். இவரது பெற்றோர் வெங்டராம அய்யர், சுந்தரி ஆவர். இவரது தந்தை மாவட்ட முன்சீப்பாக இருந்தவர். கிருஷ்ணசாமி அய்யரின் இளவயதிலேயே அவரது அன்னை காலமானார். தனது பள்ளிப்படிப்பைத் திருவிடைமருதூர் மற்றும் தஞ்சாவூர் எஸ். பி. ஜி. உயர்நிலைப்பள்ளிகளிலும், கல்லூரிப் படிப்பை கும்பகோணம் அரசுக் கல்லூரி மற்றும் சென்னை பிரசிடன்சி கல்லூரியிலும் முடித்தார். இந்துப் பத்திரிக்கையின் நிறுவனரின் தமையனார் சீனிவாச ராகவ அய்யங்காரின் அறிவுரைப்படி இவர் சட்டம் படித்தார். சட்டக் கல்வியை சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றார்.

தொழில்[தொகு]

தொடக்க காலம்[தொகு]

கிருஷ்ணசாமி அய்யர் 1885 இல் வழக்கறிஞராகத் தன் பணியைத் தொடங்கினார். தொடக்ககாலத்தில் வழக்கறிஞர் தொழிலில் அவரால் பெரிய அளவில் முன்னேறமுடியவில்லை. ஆனால் 1888 இல் பிரபலமான வழக்கறிஞரான எஸ். இராமசாமி அய்யங்கார் மாவட்ட முன்சீப்பாக நியமனமானதால் அவர் கிருஷ்ணசுவாமி அய்யரிடம் தனது பணிகளை ஒப்படைத்தார். அதன்பின் கிருஷ்ணசுவாமி அய்யர் தனது வழக்கறிஞர் தொழிலில் சிறக்கத் தொடங்கினார். 1891 இல் வக்கீல்கள் சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அர்பனாத்னாட்டு வங்கி[தொகு]

1906 இல் அர்பனாத்னாட்டு வங்கி மூழ்கியதால் அவ் வங்கியில் முதலீடு செய்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் நஷ்டத்துக்குள்ளானார்கள். வங்கியை நடத்தியவர்களுக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வங்கியின் முக்கிய பங்குதாரர் சிறைப்பட்டார். இதில் கிருஷ்ணசாமி அய்யரின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதன்பின் இந்தியன் வங்கியை உருவாக்க உதவினார்.

நீதியரசராக[தொகு]

1909 இல் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதியரசரானார். இப் பதவியில் இவர் 15 மாதங்களே இருந்தார். அதன்பிறகு சென்னை மாகாண ஆளுனரின் செயற்குழு உறுப்பினராக பிரித்தானிய இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்.

பிற செயற்பாடுகள்[தொகு]

சுவாமி விவேகானந்தர்[தொகு]

1893 இல் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட சிகாகோ பயணத்திற்கான பணம் திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தார். சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்கையில் அவரை வழி அனுப்புவதற்கும், திரும்பி வரும்போது வரவேற்பு அளிப்பதற்கும் முன்னின்ற சென்னைவாசிகளுள் இவரும் ஒருவர்.

அரசியலில்[தொகு]

பொதுச் செயல்களில் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாகக் கிருஷ்ணசாமி அய்யர் காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டார். 1907 இல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியினரின் மிதவாத மற்றும் அதிவாத நபர்களை ஒருங்கிணைத்தார். இவரது இச் செயல் கோபால கிருஷ்ண கோகலேயால் பாராட்டப்பட்டது.

கல்வி[தொகு]

சாதி வேற்றுமை பாராமல் அனைவருக்கும் கல்வி கிடைக்கவும், பெண்கல்விக்கும் முக்கியத்துவம் தந்தார். சென்னைப் பல்கலைக்கழக செயற்பாடுகளில் பல கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். 1893 இல் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட சிகாகோ பயணத்திற்கான பணம் திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

மெரினா கடற்கரைக்காக போராடியவர்[தொகு]

இவர் 1890 களில் தென்னிந்திய ரயில்வே, மயிலாப்பூரையும் கிண்டியையும் மெரினா வழியாக இணைத்து ஒரு ரயில் தடம் அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றி 1903 இல் வேலை தொடங்கும் சமயம் அதை எதிர்த்து மாபெரும் கூட்டம் கூட்டினார். இதனை அடுத்து அரசாங்கமும் அத்திட்டத்தினைக் கைவிட்டது.

தமிழ் ஈடுபாடு[தொகு]

திருவாசகம் மீதும் தமிழ் மீதும் அவருக்கு இருந்த பற்றை உ.வே.சா பாராட்டியுள்ளார். இவர் பாரதியாரின் பாடல்களை அச்சிட்டு இலவசமாக வழங்கியவர்.

மரணம்[தொகு]

கிருஷ்ணசுவாமி அய்யர் 1911 இல் காலமானார். மகாத்மா காந்தியால் ’மகாபுருஷர்’ என்று குறிப்பிடப்பட்டார்.

வெளியிணைப்புகள்[தொகு]

  • வி.கிருஷ்ணசுவாமி ஐயர் இணையதளம்