under review

விற்றூற்று மூதெயினனார்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: {{ready for review}})
Line 130: Line 130:




{{ready for review}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:12, 20 April 2024

விற்றூற்று மூதெயினனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய நான்கு பாடல்கள் சங்கத்தொகை நூலான அகநானூறு, குறுந்தொகை ஆகியவற்றில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

விற்றூற்று மூதெயினனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். விற்றூற்று என்னும் ஊரில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

விற்றூற்று மூதெயினனார் பாடிய பாடல்கள் அகநானூற்றிலும் (37, 136, 288) குறுந்தொகையிலும் (372) உள்ளன.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

அகநானூறு 37
  • காம ஆசையைத் தூண்டும் இளவேனில் காலம். துணைவர் அருகில் இருப்பவர்களுக்கு இனிது.
  • உழவர்கள் இரவு வேளையில் நெல் அடிப்பர். அதன் முழக்கம் [ஓதை] கேட்டுக்கொண்டே இருக்கும். நெல்லைத் தூற்றுவர். தூசி வானத்தில் மேகம் போலப் பறந்து திசைகளை மறைக்கும். அந்தக் களைப்புத் தீர மாங்காய் ஊறிய புளிப்பு நீரைப் பருகுவர். பசி போக்க மிதவை (கஞ்சி) குடிப்பர். குடங்கையை வாயில் வைத்துக்கொண்டு அதனைப் பருகுவர். பின்னர் சூரியன் போல் குவிக்கப்பட்டுள்ள நெல் குவியலைச் சூழ்ந்திருக்கும் மருதமர நிழலில் பிணையல் அடித்த தம் மாடுகளுடன் ஓய்வு எடுதுக்கொள்வர்.
  • மிதவை (கஞ்சி): கொள், பயறு, பால் ஊற்றிச் சமைத்த கஞ்சி.
அகநானூறு 136
  • சங்க காலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தைப் பற்றி அறிய முடிகிறது.
  • நெய் ஊற்றிய ஆட்டுக்கறி வெண் சோறு பரிமாறப்பட்டது. மணப்பந்தல் (கடிநகர்) போட்டனர். நல்ல நேரம் பார்த்தனர். பளிச்சென்ற வானமும், திங்கள் ரோகிணியைக் கூடும் நாளிலும் திருமணம் நடந்தது. முரசுச் சத்தத்துடன் திருமணம் நடந்தது. மூத்தவர்கள் வாழ்த்திச் சென்றனர்.
  • வாகைத் தளிர், அறுகம்புல், மல்லிகை மொட்டு மூன்றும் சேர்த்து நூலில் கட்டிய மாலையை தலைவன் தலைவிக்குச் சூட்டினான். அவள் தூய புத்தாடை அணிந்திருந்தாள். மழை பொழிந்தது போல் ஈரத்துடன் பரப்பப்பட்ட மணலுடன் கூடிய மணப்பந்தல் போட்டிருந்தனர். தலைவன் இழையை (தாலி) தலைவிக்குக் கட்டினான். அப்போது அவளுக்குத் தோன்றிய வியர்வையை ஆற்றி, அவளுடைய பெற்றோர் அவளை தலைவனுக்கு முதல் இரவில் தந்தனர்.
அகநானூறு 288
  • தன் மலை நாட்டில் விளைந்த சந்தனத்தை தலைவன் மார்பில் பூசியுள்ளான். அங்கு பூத்த வேங்கைப் பூவை முருகப் பெருமான் போலத் தலையில் சூடிக்கொண்டிருக்கிறான். கொளுத்தி உரமிட்ட வயலில் விளைந்திருக்கும் தினை துன்புறும்படி நாள்தோறும் வருகிறான். பலாப்பழம் பழுத்திருக்கும் மலையடுக்கத்தில் தலைவியை தனிமையில் தலைவன் சந்தித்தான். வழிப்போக்கர்களைக் கொள்ளையிடக் கொடியவர்கள் தேடித் திரியும் வழியில் வழி உண்டாக்கிக்கொண்டு வருகிறான்.
  • பாயும் அருவி ஓரத்தில் குட்டிகளை உடைய மந்தியின் பசியைப் போக்குவதற்காகக் குட்டிகளின் தந்தை பலாப் பழத்தைத் தோண்டித் துன்புறும் மலையடுக்கம் கொண்ட ஊர் மாங்காடு. அந்த மாங்காட்டுக்கு இருக்கும் கட்டுக்காவல் போல தலைவியின் தந்தை காவல் செய்கிறான்.
  • தலைவி கொத்துக்கொத்தாக மாம்பூ உதிரும் தழைத்த கூந்தலை உடையவள்.
குறுந்தொகை 372
  • பனையின் உச்சியிலுள்ள கருக்கையுடைய நீண்ட மட்டையானது குருத்தோடு மறையும்படி கடுமையான காற்றால் குவிக்கப்பட்ட உயர்ந்த வெண்மையான மணற்குவியல்கள் தொகுதியான சிகரங்களையுடையனவாய் தனித்திருப்பவரை வருத்துகின்ற கடற்கரையில் கடல் அலைகள் கருமணல் பொருந்திய சேற்றை அருவிபோல் கொண்டுவந்து சேர்க்கும்.
  • கூந்தலுக்கு இட்டுத் தேய்த்துக் குளிக்குமாறு மணல் மேட்டில் கடல் அலைகள் குவித்த கருமண் குவியல் உலர்ந்து பக்குவமாகக் காயும்.

பாடல் நடை

  • அகநானூறு 37 (திணை: பாலை) (தலைவி தோழிக்குச் சொல்லியது)

மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி,
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து,
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை,
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர,
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல,
மருதமர நிழல், எருதொடு வதியும்
காமர் வேனில்மன் இது,
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே!

  • அகநானூறு 136 (திணை: மருதம்) (தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது)

மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,

மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,

"உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற" என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.

  • அகநானூறு 288 (திணை: குறிஞ்சி)

(பகற்குறிக்கண் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது)

சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை,
சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை,
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல்,
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்!
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்,
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து,
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி 10
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க்
கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்,
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும்,
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து,
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக்
கொந்தொடு உதிர்த்த கதுப்பின்,
அம் தீம் கிளவித் தந்தை காப்பே.

  • குறுந்தொகை 372 (திணை: நெய்தல்) (தோழி கூற்று)

பனைத்தலைக்
கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக்
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்
கணங்கொள் சிமைய வணங்குங் கானல்
ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக்
கூழைபெய் எக்கர்க் குழீஇய பதுக்கை
புலர்பதங் கொள்ளா வளவை
அலரெழுந் தன்றிவ் வழுங்க லூரே.

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.