under review

விபூதிபூஷண் பந்தோபாத்யாய

From Tamil Wiki
Revision as of 22:05, 6 January 2023 by Boobathi (talk | contribs)
விபூதிபூஷண் பந்தோபாத்யாய (
விபூதிபூஷன் இளமையில்
விபூதி பூஷண் மகனுடனும் தம்பியுடனும்
விபூதிபூஷன், மனைவி ரமா

விபூதிபூஷண் பந்தோபாத்யாய ( செப்டெம்பர் 12, 1894 – நவம்பர் 1, 1950). (Bibhutibhushan Bandyopadhyay) (மூலம் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்) விபூதிபூஷன் பானர்ஜி என்றும் சொல்லப்படுபவர். வங்க எழுத்தாளர். புகழ்பெற்ற நாவல்களான பாதேர் பாஞ்சாலி, வனவாசி ஆகியவற்றின் ஆசிரியர்

இளமை, கல்வி

விபூதிபூஷண் பந்தோபாத்யாய மேற்குவங்க மாநிலத்தில் இருபத்துநான்கு பர்கானாக்கள் என்னும் மாவட்டத்தில் பசிர்ஹாத் (Basirhat) என்னும் ஊருக்கு அருகே பனிதார் (Panitar) என்னும் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். அவருடைய கொள்ளுத்தாத்தா புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர். அவர் கோபால்நகர் அருகே பராக்பூர் என்னும் ஊருக்கு குடிபெயர்ந்தார். நாடியா மாவட்டத்தில் கல்யாணி என்ற ஊருக்கு அண்மையில் முராதிபூர் (Muratipur) என்னும் சிற்றூரில் தன் தாய்மாமன் இல்லத்தில் விபூதிபூஷன் பந்தோபாத்யாய பிறந்தார்.

விபூதிபூஷண் பந்தோபாத்யாயவின் அப்பா மகாநந்த பந்தோபாத்யாய ஒரு சம்ஸ்கிருத அறிஞர். கதாகாலட்சேபம் செய்து வாழ்ந்தவர். அவர் மனைவி மிருணாளினி. அவர்களின் ஐந்து குழந்தைகளில் மூத்தவர் விபூதிபூஷண் பந்தோபாத்யாய பராக்பூரில் அவர் இளமைப்பருவம் கழிந்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் பழைய பள்ளிகளில் ஒன்றான போங்கோன் (Bongaon) உயர்நிலைப்பள்ளியில் விபூதிபூஷண் பந்தோபாத்யாய பயின்றார். புகுமுகக் கல்லூரிப்படிப்பை (Entrance and Intermediate Arts examinations) முடித்துவிட்டு விபூதிபூஷண் பந்தோபாத்யாய சுரேந்திரநாத் கல்லூரி (அப்போது ரிப்பன் கல்லூரி) யில் தன் பட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பின் முதுகலைக்கு கல்கத்தா பல்கலையில் சேர்ந்தாலும் அதை கற்கும் அளவுக்கு பொருளியல் வசதி இல்லை. ஹூக்ளியில் ஜாங்கின்பரா Jangipara என்னும் ஊரில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.

தொழில்

விபூதிபூஷண் பந்தோபாத்யாய எழுத்தாளர் ஆவதற்கு முன் பலவகையான வேலைகளைச் செய்திருக்கிறார். ஆசிரியராகப் பணியாற்றியவர் அந்த வருமானம் போதாமல் பசுப்பாதுகாப்புச் சபை பிரச்சாரகராகவும் சம்பளத்துக்கு பணியாற்றினார். பாகல்பூரில் இருந்த கேலட்சந்திர கோஷ் ( Khelatchandra Ghosh) என்னும் இசைக்கலைஞரான ஜமீன்தாரின் காடுகளை நிர்வாகம் செய்யும் பணியில் சிலகாலம் இருந்தார் (வனவாசி நாவலின் பின்புலம் இது) புகழ்பெற்ற இசையறிஞரான கேலட்சந்திரரின் தனிப்பட்ட செயலராகவும், அவர் குடும்பத்து குழந்தைகளின் ஆசிரியராகவும் விபூதிபூஷண் பந்தோபாத்யாய திகழ்ந்தார். கேலட்சந்திர கோஷின் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் தன் ஊருக்கு திரும்பி கோபால்நகர் ஹரிபாத நிறுவனத்தின் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபடி இலக்கியப்படைப்புகளை எழுதலானர். இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார்.விபூதிபூஷண் பந்தோபாத்யாய குறுகியகாலம் ஜார்கண்ட் மாநிலத்தில் காட்ஷிலா Ghatshila, என்னும் ஊரில் ஆசிரியராக பணியாற்றினார். அங்கு வாழ்ந்தபோதுதான் பாதேர் பாஞ்சாலியை எழுதினார். அந்த இல்லம் இப்போது நினைவகமாக உள்ளது

தனிவாழ்க்கை

விபூதிபூஷண் பந்தோபாத்யாயவின் முதல் மனைவி கௌரி திருமணமான ஓராண்டிலேயே இறந்தார். ஆழ்ந்த உளச்சோர்வுக்கு ஆளான விபூதிபூஷண் நெடுங்காலம் தனிமையில் வாழ்ந்தார். மிகநீண்ட நடைபயணங்களை மேற்கொள்வது அவர் வழக்கம். அவருடைய இரண்டாவது மனைவி பெயர் ரமா. விபூதிபூஷணின் பேரன் திரிணாங்கூர் பானர்ஜி எழுதிய குறிப்பில் பதினேழு வயதான ரமா விபூதிபூஷண் எழுத்துக்களில் மயங்கி அவரை பார்க்கச்சென்றதைப் பற்றி கூறுகிறார். அப்போது விபூதிபூஷணுக்கு நாற்பது வயது கடந்திருந்தது. அவர் பார்க்கச் சென்ற அன்று விபூதிபூஷணின் விதவையான தங்கை ஜான்னவியை இச்சாமதி ஆற்றில் முதலை கொண்டு சென்றிருந்தது. அந்த துயர் மிக்க நாளில் விபூதிபூஷண் அந்த ரசிகைக்கு ஒரு நூலில் 'வாழ்க்கை என்பது சென்றுகொண்டிருப்பது. நின்றுவிடுவதே மரணம்’ என்று கையெழுத்திட்டு கொடுத்தார்

விபூதிபூஷண் பந்தோபாத்யாயவின் மகன் தாராதாஸ் பந்தோபாத்யாய( Taradas Bandyopadhyay) வும் புகழ்பெற்ற எழுத்தாளர், இதழாளர்.

இலக்கியப் பணிகள்

விபூதிபூஷண் பந்தோபாத்யாயவின் எழுத்துக்கள் பெரும்பாலும் அவருடைய தன்வரலாற்றுச் சாயல்கொண்டவை, சுதந்திரத்திற்கு முந்தைய வங்காளக் கிராமிய வாழ்க்கையின் சித்திரங்கள். பாதேர் பாஞ்சாலி, இலட்சிய இந்து ஓட்டல், இச்சாமதி, வனவாசி ஆகியவை தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகள்.

1921-ல் விபூதிபூஷண் பந்தோபாத்யாய தன் முதல் படைப்பான உபேக்ஷிதாவை (கைவிடப்பட்டவள்) அன்றைய இலக்கிய இதழான பிரபாசியில் வெளியிட்டார். தொடர்ச்சியாக அன்றைய முதன்மை இதழ்களில் எழுதிவந்தார். ரவீந்திரநாத் தாகூர் உருவாக்கியிருந்த கற்பனாவாதக் கதைகளின் செல்வாக்கு வலுவாக நீடித்த காலம் அது. சரத்சந்திர சட்டர்ஜி மிகப்புகழ்பெற்ற ஆசிரியராக இருந்தார். ஆகவே யதார்த்தமான கதைகளை எழுதிய விபூதிபூஷண் பந்தோபாத்யாய கவனிக்கப்படவில்லை.

பதேர் பாஞ்சாலி 1927-ல் பிரபாஸ் இலக்கிய இதழில் தொடராக வெளிவந்து 1928-ல் நூல்வடிவம் பெற்றது. அதன் இரண்டாம் பகுதியாக அபராஜிதோ (தோல்வியற்றவன்) எழுதினார். பாதேர் பாஞ்சாலிக்குப் பின் விபூதிபூஷண் பந்தோபாத்யாய புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார். விபூதிபூஷண் எழுதிய ஆரண்யக் தமிழில் வனவாசி நாவல் என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மிகப்புகழ்பெற்ற நாவல் அது.

தாராநாத் தாந்த்ரிக் என்னும் கதாபாத்திரத்தை விபூதிபூஷண் பந்தோபாத்யாய உருவாக்கினார். இந்தக்கதாபாத்திரம் தாந்த்ரீக வித்தைகள் வழியாக அமானுட சக்திகளைப் பெற்று, அவற்றை தவறாக பயன்படுத்தியமையால் இழந்து, முதியவயதில் கதைகளைச் சொல்வது. ஆசிரியர் அவர் இல்லத்தில் கதைகேட்கச் செல்பவர். இக்கதாபாத்திரம் பின்னர் விபூதிபூஷண் பந்தோபாத்யாயவின் மகன் தாராதாஸ் பந்தோபாத்யாயவால் விரிவாக்கம் செய்யப்பட்டது.

தாராதாஸ்

விபூதிபூஷண் பந்தொபாத்யாய பதேர் பாஞ்சாலியின் தொடர்ச்சியாக எழுதிய அபராஜிதோ நாவலை முடிக்கும் முன்பே காலமானார். அவர் மகன் தாராநாதாஸ் பந்தோபாத்யாய அதை முழுமைசெய்து 1952-ல் வெளியிட்டார்.

விருதுகள்

  • 1951-ல் விபூதிபூஷண் பந்தோபாத்யாய மறைவுக்குப் பின் அவருக்கு ரவீந்திர புரஸ்காரம் அவருடைய இச்சாமதி நாவலுக்காக வழங்கப்பட்டது.
  • காட்ஷிலாவில் விபூதிபூஷண் வாழ்ந்த இல்லம் ஜார்கண்ட் அரசால் நினைவுச்சின்னமாக ஆக்கப்பட்டுள்ளது

தமிழ் மொழியாக்கங்கள்

தமிழில் விபூதிபூஷண் பந்தோபாத்யாய வின் ஆக்கங்கள் ஆர். சண்முகசுந்தரம், த. நா. சேனாபதி ஆகியோரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன

மறைவு

விபூதிபூஷண் பந்தோபாத்யாய 1951-ல் இதயநோயால் காட்ஷிலாவில் அவருடைய இல்லத்தில் மறைந்தார்.

இலக்கிய இடம்

இந்திய இலக்கியத்தில் வங்காளத்தின் மூன்று படைப்பாளிகள் முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள். முப்பெரும் பானர்ஜிகள் எனப்படும் விபூதிபூஷன்ண் பந்தோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி, மாணிக் பந்தோபாத்யாய. அமித் சௌதுரி பிக்காடர் நவீன இலக்கிய தொகுப்பு முன்னுரையில் விபூதிபூஷண் பந்தோபாத்யாய அக்கால சமூக யதார்த்தவாதத்தையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் புறவய யதார்த்தவாதத்தையும் நிராகரித்து நினைவுப்பதிவுகள், உணர்தல்கள் ஆகியவற்றை மட்டும் சார்ந்தே எழுதுகிறார்’ என்று கூறுகிறார். விபூதிபூஷனின் முதன்மை நாவல்கள் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் பலமுறை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவெங்கும் அவை ஆழ்ந்த செல்வாக்கையும் செலுத்தியுள்ளன.

தமிழில் கிடைக்கும் நூல்கள்

ஆர்.சண்முகசுந்தரம் மொழியாக்கம் செய்தவை

த. நா. சேனாபதி மொழியாக்கம் செய்தவை

உசாத்துணை


✅Finalised Page