வாசஸ்பதி மிஸ்ரர்

From Tamil Wiki

வாசஸ்பதி மிஸ்ரர் ( பொயு8/9 ஆம் நூற்றாண்டு) வாஸஸ்பதி மிஸ்ரர். இந்திய தத்துவ சிந்தனையாளர். அத்வைத வேதாந்த மரபைச் சேர்ந்தவர். மண்டனமிஸ்ரரின் மாணவர். அத்வைத வேதாந்தத்தில் பாமதி மரபை உருவாக்கியவர். மொழியியலாளர், மீமாம்ச மரபைச் சேர்ந்த இலக்கணநூல்களையும் எழுதியுள்ளார்.

காலம்

வாசஸ்பதி மிஸ்ரர் சங்கரரின் சமகாலத்தவர். சங்கரருடன் விவாதித்து பின் அவருடைய மாணவராகி, வேதாந்த தத்துவஞானியாக ஆன மண்டனமிஸ்ரரின் நேரடி மாணவர். சங்கரரை விட ஒரு தலைமுறை இளையவராக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது

வாசஸ்பதி மிஸ்ரர் அவரே  898 என்னும் தேதியை தன்னுடைய நியாயசூசீநிபந்த என்னும் நூலில் அளிக்கிறார். அது சக ஆண்டா அல்லது விக்ரம ஆண்டா என்ற விவாதம் அறிஞர் நடுவே நீடிக்கிறது. விக்ரம ஆண்டு என்றால் அந்நூல் பொயு 841ல் எழுதப்பட்டது.

வாசஸ்பதி மிஸ்ரர் அவருடைய நூல்களில் பாஸ்கரர், பூஷணர், தர்மோத்தரர் போன்றவர்களை மேற்கோள் காட்டுகிறார். பொயு 984ல் வாழ்ந்த உதயணர் வாசஸ்பதி மிஸ்ரரின் நியாயவார்த்திக தாத்பரிய டீகா நூலுக்கு நியாயவார்த்திக தாத்பரிய டீகா பரிசுத்தி என்ற பேரில் உரையெழுதியிருக்கிறார்.

வாசஸ்பதி மிஸ்ரரின் பாமதி நூலில் உள்ள நூல்களின் மேற்கோள்களில் இருந்து அவர் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு பிந்தையவர் என்றும் அவர் உதயணருக்கு முன்னால் வாழ்ந்தவர் என்னும் செய்தியால் அவர் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தையவர் என்றும் ஊகிக்கப்படுகிறது. ஆகவே அவர் வாழ்ந்த காலம் பொயும் 841- 900 ஆக இருக்கலாம்.

பின்னாளில் பொயு 1350 வங்காளத்தில் ஒரு வாசஸ்பதி மிஸ்ரர் வாழ்ந்துள்ளார். அவர் ஸ்ரீஹர்ஷரின் கண்டனகண்டகாத்யாய என்னும் மறுப்பு நூலுக்கு கண்டனோத்தாரா என்னும் மறுப்பை எழுதியுள்ளார், அவர் பாமதி மரபுடன் தொடர்புடையவரல்ல.

தனிவாழ்க்கை

வாசஸ்பதி மிஸ்ரர் இன்றைய பிகாரில், மதுபனி மாவட்டத்தில் பிறந்தவர். அவர் பிறந்த ஊர் பற்றி தொன்மங்கள் உள்ளன, எவையும் உறுதிசெய்யப்படவில்லை. வாசஸ்பதி மிஸ்ரர் மைதிலி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். மரபாக பூர்வமீமாம்சம் கற்றுக்கொடுக்கும் குடும்பத்தில் பிறந்தவர்.

வாசஸ்பதி மிஸ்ரரின் நியாயரத்னபிரகாச நூலில் அந்நூல் பாஞ்சாலபூமியின் மன்னர் பிரதாபருத்ரனின் அரசி பத்மாவதியின் கோரிக்கையின்படி எழுதியதாக குறிப்பு உள்ளது. அவர் இளைமையில் சில ஆண்டுகளை அங்கே கழித்திருக்கலாம். ஆனால் வாழ்க்கையின் பெரும்பகுதியை அவர் மிதிலையிலேயே செலவிட்டார்

வாசஸ்பதி மிஸ்ரர் எழுதிய பாமதி நூலிலேயே அவர் நிருகன் என்னும் அரசனின் ஆதரவில் இருந்தார் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

வாசஸ்பதிமிஸ்ரரின் மனைவி பெயர் பாமதி என்றும் அவர் தன் மனைவியின் பெயரையே தன் வேதாந்த உரைநூலுக்கு வைத்தார் என்றும் தொன்மக்கதை உள்ளது.

கல்வி

வாசஸ்பதி மிஸ்ரரின் தொடக்கக் கல்வி மீமாம்சையைச் சார்ந்தது. பட்டமீமாம்சை அறிஞரான மண்டனமிஸ்ரர் அவருடைய நேரடி ஆசிரியர். மண்டனமிஸ்ரர் சங்கரரிடன் வாதத்தில் தோல்வியடைந்து அத்வைதத்தை ஏற்றுக்கொண்டார். வாசஸ்பதிமிஸ்ரரும் அம்மரபில் அத்வைத வேதாந்தத்தைச் சார்ந்தவராயினும் பட்டமீமாம்சை, சாங்கிய தர்சனம் நியாயசாஸ்திரம் இரண்டிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவராக இருந்தார்.

வாசஸ்பதி மிஸ்ரர் சாங்கியம், நியாயம், பூர்வமீமாம்சம் , அத்வைதம் உட்பட எல்லா தத்துவப் பிரிவுகளிலும் ஏராளமாக எழுதியவர். ஆகவே அவரை சர்வதந்த்ர ஸ்வதந்த்ர என்று பின்னாளைய உரையாசிரியர்கள் அழைத்தனர்

பாமதி மரபு

வாசஸ்பதி மிஸ்ரர் சங்கரர் எழுதிய பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு எழுதிய விரிவான விளக்கவுரை பாமதி எனப்பட்டது. இதிலிருந்து பாமதி மரபு எனப்படும் வேதாந்த சிந்தனைப்பள்ளி உருவாகியது.