ரா.ராகவையங்கார்

From Tamil Wiki
Revision as of 11:46, 17 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ரா.ராகவையங்கார் ரா.ராகவையங்கார் (20 செப்டம்பர் 1870 - 11 ஜூலை 1946)தமிழறிஞர், ஆய்வாளர், பதிப்பாளர் மற்றும் இதழாளர். சேது சமஸ்தான மகாவித்துவான் என அழைக்கப்பட்டார். செந்தமிழ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ரா.ராகவையங்கார்

ரா.ராகவையங்கார் (20 செப்டம்பர் 1870 - 11 ஜூலை 1946)தமிழறிஞர், ஆய்வாளர், பதிப்பாளர் மற்றும் இதழாளர். சேது சமஸ்தான மகாவித்துவான் என அழைக்கப்பட்டார். செந்தமிழ் இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

தமிழ்நாட்டில் சிவகங்கை நகருக்கு அருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டையில் 1870 – செப்டம்பர் -20 - ல் ரா. இராகவையங்கார் ராமாநுஜையங்கார்- பத்மாசனி அம்மையார் இணையருக்கு பிறந்ந்தார். ரா. ராராகவையங்காரின் ஐந்தாம் வயதில் தந்தை இறந்தார். தாய்மாமாவும் சேதுசமஸ்தான அரசவைப் புலவராக இருந்தவருமான சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் ஆதரவில் இராமநாதபுரத்தில் வளர்ந்தார். முத்துசாமி ஐயங்காரின் மகன் தமிழறிஞர் மு. இராகவையங்கார். இராமநாதபுரத்தில் பள்ளியிறுதி வரை பயின்றபின் தன் மாமாவிடமிருந்தும் சேதுசமஸ்தான புலவர்களிடத்தும் தமிழும் சம்ஸ்கிருதமும் பயின்றார்.

தனிவாழ்க்கை

ராகவையங்கார் 1888-ஆம் ஆண்டில் தன்னுடைய 18 வயதில் மதுரையில் ராமநாதபுரம் அரசர் உருவாக்கிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டே ஜானகி அம்மாளை மணந்தார். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும் இராமானுஜ ஐயங்கார் என்னும் மகனும் பிறந்தனர்.திருச்சிராப்பள்ளியில் உள்ள, பின்னாளில் தேசிய உயர்நிலைப் பள்ளி என அழைக்கப்பட்ட, சேஷையங்கார் பள்ளியில் சிலகாலம் இவர் தமிழாசிரியராக இருந்தார்.

இராமநாதபுர சேதுசமஸ்தானத்தான அரசராக இருந்த பாஸ்கரசேதுபதி தன்னுடைய அரசவையின் தலைமைப் புலவராக ரா. இராகவையங்காரை நியமித்தார்.சமஸ்தான அறக்கொடையில் இருந்து ஆண்டுதோறும் 635 ரூபாய் ரா. ராகவைங்காரின் வாழ்நாள் முழுக்க வழங்கும்படி உரிமைப் பத்திரம் ஒன்றைப் பதிவுசெய்து கொடுத்தார். இதன்படி பாஸ்கரசேதுபதி, முத்துராமலிங்க ராஜராஜேஸ்வர சேதுபதி, சண்முக ராஜேஸ்வர சேதுபதி என்னும் தாத்தா, தந்தை, பெயரன் ஆகிய மூவரின் அரசவையிலும் புலவராகத் திகழ்ந்தார். இவர் அரசவைப்புலவராக இருந்த காலத்தில் அந்த அரசவைக்கு வருகைவந்த விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு சமய விற்பன்னர்களுடன் கலந்துரையாடினார்.