under review

ரவிச்சந்திரிகா

From Tamil Wiki
Revision as of 01:18, 2 May 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
ரவிச்சந்திரிகா

ரவிச்சந்திரிகா (1952) மீ.ப.சோமு எழுதிய நாவல். இசையின் பின்னணியில் எழுதப்பட்ட து. ரவிச்சந்திரிகா என்பது ஒரு ராகம். இந்நாவல் ரவி என்னும் இசைக்கலைஞனுக்கும் சந்திரிகா என்னும் நடனக்கலைஞருக்குமான உறவைப் பற்றிப் பேசுகிறது.

எழுத்து வெளியீடு

மீ.ப.சோமு கல்கி இதழில் 1952-ல் தொடராக எழுதிய நாவல். ராஜாஜி முன்னுரையுடன் வானதி பதிப்பக வெளியீடாக வந்தது. மீ.ப.சோமுவின் புகழ்பெற்ற நாவல் இது. பின்னாளில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

இந்நாவல் முழுக்க திருச்சி நகரில் நிகழ்கிறது. புல்லாங்குழல் இசைக்கலைஞர் ரவிக்கும் அவன் மாணவியும் நடனமணியான சந்திரிகாவுக்குமான உறவு இந்நாவலின் கரு. சந்திரிகாவின் நடன அரங்கேற்றத்துக்காக தன் புல்லாங்குழலையே அடகுவைக்கத் துணியும் ரவியில் இருந்து கதை தொடங்குகிறது. சந்திரிகா ரவியால் இலஞ்சி என்ற ஊருக்கு கச்சேரிக்குச் சென்றபோது பிச்சைக்காரர்களின் கூட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்ட சிறுமி. அவளுக்கு இசையும் நடனமும் கற்பிக்கிறான். நாளடைவில் அந்த உறவு காதலின் சாயல் கொள்கிறது. ரவியின் மனைவி கல்யாணி அதனால் சீற்றம் கொள்ள அவள் உடன்பிறந்தவர்கள் சந்திரிகாவை கடத்த முனைய ரவியின் வாழ்க்கையில் சிக்கல் நேரவேண்டாம் என்று எண்ணிய சந்திரிகா எதிர்வீட்டில் இருக்கும் பத்திரிகையாசிரியனாகிய ராமநாதனின் அக்கா மும்பையில் இருப்பதை உணர்ந்து அங்கே சென்றுவிடுகிறாள். சந்திரிகாவை காணாமல் மனம்பேதலித்த ரவியை இலஞ்சியில் இருக்கும் ஒரு சித்தரிடம் கொண்டுசென்று சிகிச்சை எடுத்துவருகையில் ராமநாதன் சந்திரிகாவை மீட்டு வருகிறான். ரவி உளம் தெளிகிறான். சித்தரின் மகள்தான் சந்திரிகா என தெரியவருகிறது. ராமநாதன் அவளை மணக்கிறான்.

இலக்கிய இடம்

இந்நாவலின் மையப்படிமமாக சர்ப்பகந்தி என்னும் மூலிகையை ஆசிரியர் சொல்கிறார். அது நஞ்சு. ஆனால் மனநோய்க்கு மருந்து. சந்திரிகா ரவிக்கு நஞ்சும் மருந்துமாக ஆவதை குறிக்கிறது. ஆசிரியர் தமிழிசையில் தீவிர ஈடுபாடு கொண்டவர். சித்தர் மரபை ஆராய்ந்தவர். ஆகவே அவரால் இந்நாவலை அவ்விரு மரபுகளுக்குள்ளும்சென்று எழுதியிருக்க முடியும். ஆனால் முழுக்கமுழுக்க திருப்பங்களாலான வழக்கமான காதல்கதையாகவே நின்றுவிடுகிறது. கல்கி பாணி செயற்கைமர்மங்களும் திருப்பங்களும் கொண்ட பொதுவாசிப்புக்கான எளிமையான காதல் கதை.

உசத்துணை


✅Finalised Page