under review

யோ. கர்ணன்: Difference between revisions

From Tamil Wiki
(Yo Karnan's profile)
(No difference)

Revision as of 12:27, 6 September 2022

யோ. கர்ணன்
யோ. கர்ணன்

யோ. கர்ணன் (1980 ஆம் ஆண்டு ஜூலை 19) ஈழ எழுத்தாளர். ஊடகவியலாளர்.

பிறப்பு - கல்வி

இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள நெல்லியடி என்ற பிரதேசத்தில் யோகநாதன் -புஷ்பராணி இணையருக்கு 1980 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி யோ.கர்ணன் பிறந்தார். இயற்பெயர் முரளி. தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியிலும் மேற்படிப்பை வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியிலும் யோ.கர்ணன் பயின்றார்.

களச்செயற்பாடு

1995 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துகொண்ட யோ.கர்ணன், 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தச் சம்பவமொன்றில் படுகாயமடைந்து ஒரு காலை இழந்தார். 2005  ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி வன்னியில் வாழ்ந்தார்.

தனிவாழ்க்கை

யோ.கர்ணன் தற்போது முழு நேர ஊடகவியலாளராக யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படுகிறார். கந்தர்மடம் பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். மனைவி பெயர் கேமசியா.

இதழியல்

போருக்கு பின்னரான தனிவாழ்க்கையில், 2010 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து செயற்பட்ட “தீபம்” குழுமத்தின் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் யோ.கர்ணன் பணிபுரிந்தார். தற்போது, pagetamil.com என்ற செய்தி இணையத்தின் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.

இலக்கியம்

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த காலப்பகுதியில் - 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவமொன்றில் - படுகாயமுற்றிருந்தபோது, யோ.கர்ணனுக்கு வாசிப்புக்கான கூடுதல் நேரமும் எழுதுவதற்கான வாய்ப்பும் கிடைக்கப் பெற்றது. போர்க்களத்தில் காயமடைந்து, உடல் உறுப்புகளை இழந்தோருக்காக விடுதலைப்புலிகளினால் நிர்வகிக்கப்பட்டு வந்த “நவம் அறிவுக்கூடம்” என்ற பல்துறைப் பயிற்சிக் கல்லூரியின்  நூலகத்திலிருந்த பல நூல்களைப் படிக்கத் தொடங்கிய யோ.கர்ணனுக்கு, அங்கு எழுதுவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

அந்தக்காலப் பகுதியில் நடைபெற்ற சிறுகதைப் போட்டிக்கு எழுதிய யோ.கர்ணனின் பிரதிக்கு 2001 ஆம் ஆண்டு பரிசும் கிடைத்தது. அதன்பிறகு, யோ.கர்ணன் பல போர் சார்ந்த  பிரதிகளை எழுத ஆரம்பித்தார். யோ.கர்ணனின் கதைகள் மற்றும் கவிதைகள் “ஈழநாதம்" “வெளிச்சம்" “எரிமலை" ஆகியவற்றில் வெளிவந்தன.

வன்னியில் இறுதிப் போர் முடிவடைந்த பிறகு, யோ.கர்ணன் எழுதிய முதலாவது சிறுகதைத் தொகுதியான “தேவதைகளின் தீட்டுத்துணி" வாசகர்கள் மத்தியில் பரந்த அவதானிப்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து “சேகுவரா இருந்த வீடு”, “கொலம்பஸின் வரைபடங்கள் ” ஆகிய பிரதிகளும் யோ.கர்ணனை ஈழத்தின் போர் இலக்கிய எழுத்தாளர்களின் முக்கியவராக முன்னிறுத்தியது.

இலக்கிய இடம்

யோ.கர்ணனின் பிரதிகள் நேரடியாகவே அரசியலைப் பேசுபவை. போரின் அரசியலையும் -போரின் போது மீறப்பட்ட அனைத்து மனித விழுமியங்களையும் அறத்துக்கு எதிரான நிகழ்ச்சிகளையும் பேசுபவை. பொதுவாக, போருக்காக நடந்த நிகழ்ச்சிகளை மறைக்க முற்படுவோரின் விருப்பங்களுக்கு மாறாக கர்ணன் தன் கதைகளை எழுதியிருக்கிறார். அதில், எந்த சமரசமும் இன்றி தன் நிலைப்பாடு குவிந்த எழுத்துக்களில் உறுதியாகத் தொடர்ந்திருக்கிறார்.

தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதை நூல் பற்றி எழுத்தாளர் த.அகிலன் குறிப்பிடும்போது - “யோ.கர்ணனது கதைகளின் ஆன்மாவாய் இயங்குவது ‘மெய்’. அவரது சொற்களில் இருக்கும் உண்மையே அவரது கதைகளின் ஆதாரம். அவலத்தை அனுபவிக்க நேர்ந்த ஒரு மனிதன் தன் சுயமான வார்த்தைகள் மூலமாகவே அதை  விவரிக்க நேர்கையில்  ஏற்படுகின்ற வார்த்தைகளின் உயிர்ச்சூட்டினை கர்ணணின் கதைகள் நெடுகிலும் நாம் உணரலாம்" - என்கிறார்.

நூல்கள்

தேவதைகளின் தீட்டுத்துணி (2010 - வடலி பதிப்பகம்)

சேகுவரா இருந்த வீடு (2011 - வடலி பதிப்பகம்)

கொலம்பஸின் வரைபடங்கள் (2012 - வடலி பதிப்பகம்)

விருது

சிறந்த சிறுகதைத் தொகுப்பு - 2010 - ஆனந்தவிகடன் விருது (தேவதைகளின் தீட்டுத்துணி)

வெளி இணைப்புக்கள்

யோ.கர்ணனின் இணையம்

யோ.கர்ணனின் செவ்வி



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.