மு. அருணாசலம்

From Tamil Wiki
Revision as of 13:34, 21 February 2022 by Subhasrees (talk | contribs) (மு. அருணாசலம் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மு. அருணாசலம்(மு.அ) (அக்டோபர் 29, 1909 – நவம்பர் 23, 1992) தமிழறிஞர், நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். தமிழ் இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு இவர் எழுதிய முக்கியமான நூல்கள்.

பிறப்பு, இளமை

மு.அருணாசலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில்(பழைய தஞ்சை மாவட்டம்) திருச்சிற்றம்பலம் என்னும் சிற்றூரில் 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, பரணி நட்சத்திரத்தில், கார்காத்த வேளாளர் குலத்தில் முத்தையா பிள்ளை-கௌரியம்மாள் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

இவரது தாய் வழித் தாத்தா தெம்மூர் சபாபதிப் பிள்ளையின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 12 பேர். அதில் நால்வர் 1890 இல் பரவிய பிளேக் நோயில் காலமாயினர். அப்போதே நான்கு பேர் தென்னாப்பிரிக்காவிற்குக் கப்பலேறி விட்டனர். இன்று வரை அவர்கள் சார்ந்த தகவல் ஏதும் இல்லை. எஞ்சிய நால்வருக்கும் ஒரே பெண் வழி வாரிசான இவர் செல்லமாக வளர்க்கப்பட்டார்.

தொடக்கத்தில் திருச்சிற்றம்பலத்தில், ஆசிரியர் ராமையா என்பவரிடம் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் (திருத்துருத்தி) உயர்நிலைப் பள்ளியிலும் அதன்பின் சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரியிலும் கல்வி கற்று, கணிதத்தில் பட்டம் பெற்றார். பின்னர் தமிழ் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

1930-ல் ராஜேஸ்வரி அம்மையாரை மணந்தார். 1931 - இல் சென்னையில் அரசு கோ-ஆப்ரேட்டிவ் இன்ஸ்பெக்டர் ஆக வேலை கிடைத்து சென்னை தி.நகருக்குக் குடிபெயர்ந்தார். அப்போது போர்க்காலம் ஆகையால் திருப்பதிக்கு மாற்றல் செய்யப்பட்டார். மனதிற்கு அங்கு பிடிக்காததால் வேலையை விட்டு விட்டு சென்னை வந்தார். இந்தக் காலத்தில் இவருக்குப் பல சிறந்த தமிழறிஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

அவர் வீட்டருகே குடியிருந்த டி.கே.சியின் நட்பு உண்டானது. பின்னர் வையாபுரிப் பிள்ளையிடம் பழகும் வாய்ப்பு கிடைத்து அவரது தமிழ்ப் புலமைக்கான பயிற்சி தொடங்குகிறது. அப்போது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த வையாபுரிப் பிள்ளையிடமே மாணவராகச் சேர்ந்து தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். 

காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் தத்துவப் பேராசிரியராகவும், ராஜா சர் முத்தையா செட்டியார் அமைத்த தமிழ்-வடமொழி நிறுவனத்தின் இயக்குநராகவும் இறுதியாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதித்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

அருணாசலம் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இலக்கிய, இலக்கண தத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கல்வெட்டுகளைப் படிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். அவர் காலத்திய தமிழறிஞர்களாகிய உ.வே.சாமிநாதையர், எஸ். வையாபுரிப் பிள்ளை, திரு.வி. கலியாணசுந்தரம், மு. வரதராசனார், கா.சு.பிள்ளை, டி.கே.சி, வெ.சாமிநாத சர்மா, கல்கி, வ.ரா., கருத்திருமன் போன்றவர்களோடும் அரசியல் தலைவர்களோடும் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தார்.காசிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது இந்தியக் குடியரசுத் தலைவராகப் பின்னர் பொறுப்பேற்ற சர்வபள்ளி ராதாகிருஷ்ணனோடும் பழகியிருக்கிறார்